Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் கூட்டாட்சியே சிறந்தது!

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (21:27 IST)
PTI PhotoPTI
நமது நாட்டை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒருமித்த கருத்துடன் தீர்வு காண்பதில் மாநில உணர்வுகளும், கொள்கை ரீதியான அரசியலும் பெரும் தடையாக உள்ளதென பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளது ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது ஆகும்.

தலைநகர் டெல்லியில் நேற்று துவங்கிய கூட்டாட்சி குறித்த 4வது சர்வதேச மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர், "நாட்டை எதிர்நோக்கியுள்ள, தீர்வு காணவேண்டிய பிரச்சனைகளில் எல்லாம் கூட, மாநில பற்றுதல்கள், கொள்கை விசுவாசங்கள் அடிப்படையிலான அரசியல் வண்ணங்கள், குறுகிய அரசியல் பார்வைகள் ஆகியவற்றால் தேச நோக்கும், மக்களின் ஒட்டுமொத்த நலனும் சிதைக்கப்படுகின்றன" என்று பேசியுள்ளார்.

மாநில உணர்வுகள், கொள்கை ரீதியான அரசியல் அணுகுமுறைகள் ஆகிய இரண்டும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை. அரசியல் கொள்கைகள் ஏதாவது ஒரு அடிப்படையில் நாடு தழுவிய அளவிலோ அல்லது ஒரு சமூகம் தழுவிய அளவிலோ அல்லது நமது நாட்டில் வாழும் பெரும்பான்மை சமூகத்தின் நலனைக் காக்கும் அளவிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோட்பாடுகளைக் காக்கும் அளவிலோ கூட இருக்கலாம். ஆனால், மாநில உணர்வு என்பது இங்கு மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் என்று குறிப்பிடப்படும் ஒவ்வொரு பகுதியும் ஒரு மொழி வழி, பண்பாட்டு அடையாளம் கொண்ட தேசிய இனங்கள் என்று குறிப்பிடப்படும் ஒரே மொழி, வாழ்வு முறை, பாரம்பரியம் கொண்ட மக்கள் வாழும் பகுதிகளாகும். எனவே, இந்தியா என்பது பல்வேறு மொழி வழி தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடாகும்.

அதனால்தான் அரசமைப்பு சட்டத்தின் படியே நமது நாடு ஒரு கூட்டாட்சி அமைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மொழி வழி மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு வரும் உறுப்பினர்களானாலும், அந்தந்த மாநிலங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சிகளானாலும், அவைகள் அந்த மொழி வழி மக்களின் நலன்களையும், அமக்களின் மேண்மையையும் வலியுறுத்தி அரசியல் செய்வது தவிர்க்க இயலாதது மட்டுமல்ல, சரியானதும் ஆகும். ஏனெனில், அப்பொழுதுதான் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழிவழிச் சமூகமும் அதற்குரிய உரிமையுடன், அதற்குரிய தேவைகளைப் பெற்றுக்கொண்டு முன்னேறும் வாய்ப்பைப் பெறும். அப்படிப்பட்ட முன்னேற்றங்கள் ஒன்று சேர்ந்து அதுவே நமது நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு அடிப்படையாகிறது.

உதாரணத்திற்கு, நமது தமிழ்நாட்டின் நெல் உற்பத்தியானாலும், மற்ற விவசாயப் பொருட்களில் உற்பத்தியானாலும் அவைகள் நமது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிக்கின்றன. அந்த ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியே நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை அளவுகோலாக உள்ளது என்பதனை கவனிக்க வேண்டும்.

இப்படி ஒவ்வொரு மாநிலமும் நமது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தனது அதிகபட்ச பங்களிப்பைத் தரவேண்டுமெனில், அந்தந்த மக்களின் நலன்களும், உரிமைகளும் முழுமையாக கவனிக்கப்பட வேண்டும். கவனிக்கப்படும் என்கின்ற அடிப்படையில்தான் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டு நமது நாட்டின் அரசு கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு, ஆயிரம் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பிளவுபடாமல் ஒன்றிணைந்து கூட்டாட்சி எனும் தத்துவத்தின் படி இயங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே, மாநில உணர்வு ரீதியிலான அரசியல் என்பதோ அல்லது மாநில நலன் சார்ந்த அணுகுமுறை என்பதோ தேச நலனிற்கோ அல்லது தேசத்தை எதிர்நோக்கியுள்ள ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணப்படுவதிலோ ஒரு முட்டுக்கட்டையாக இருக்கும் என்று கூறிவிட முடியாது.

ஆனால், மாநிலங்களுக்கு இடையிலான, பிரதமரே குறிப்பிட்டுள்ளது போல, நதி நீர் தகராறு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் மாநில ரீதியிலான அரசியல் உணர்வுகள் பெரும் தடையாக உள்ளது என்று கூறியிருப்பது ஆராயத்தக்கதாகும்.

இந்தியாவில் உள்ள பெரும் நதிகள் அனைத்தும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கோ அல்லது ஒரு மாநிலத்தில் உற்பத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாய்வதாகவோதான் உள்ளது. இந்த நதிகளில் வரும் தண்ணீரை பகிர்ந்துகொள்ளும் பிரச்சனை இன்றல்ல, நேற்றல்ல, வெள்ளையர் இந்நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன்பிருந்தே உள்ளது. அவைகளுக்கு தீர்வு காண வெள்ளையர் ஆட்சியும், சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு மத்தியில் அமைந்த அரசும் எடுத்த நடவடிக்கைகள் தீர்வை அளிக்கக் கூடிய வகையில் அமையவில்லை என்பதே உண்மையாகும்.

நமது நாட்டில் பாயும் நதிகள் அனைத்தையும் தேசியமயமாக்கி, அவற்றின் நீரைப் பகிர்ந்துகொள்வதில் ஒரு தேசக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை இன்று வரை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசோ அல்லது பாரதிய ஜனதாவோ காதில் போட்டுக்கொள்ளவில்லை. அப்பிரச்சனைகளுக்கு நீதிமன்றங்கள் தீர்வைத் தரட்டும் என்றே வாய்மூடி மெளனியாய் இருக்கின்றன. அப்படி நீதிமன்றங்கள் தீர்ப்பைத் தரும்போது அதனை உறுதியாக நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இருந்தும் அரசியல் காரணத்திற்காக அவ்வாறு செய்யாமல் இன்றிருக்கின்றன மன்மோகன் அரசில் இருந்து இதற்கு முன்பிருந்த வாஜ்பாய் அரசு வரை பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ளன. இதை அவர்கள் மறுக்க முடியாது.

காவிரி நதி நீர்ப் பிரச்சனைக்கு காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பைத் தந்தது. தீர்ப்பை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனையும் வகுத்துத் தந்துள்ளது. அதேபோல, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்தும் ஒரு சிறிய நடவடிக்கை கூட மத்திய நீர்வளத்துறை மேற்கொள்ளவில்லை. இதற்குக் காரணம், மத்திய ஆட்சிக்கு தலைமையேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் அரசியல் கண்ணோட்டமே தவிர, மாநில உணர்வுகள் அல்ல. எனவே, பிரதமர் பேசியிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.

நாடுகளுக்கு இடையிலான நதி நீர்ப் பிரச்சனைகள் சுலபமாகத் தீர்க்க முடிகிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார். பாகிஸ்தானுடன் சிந்து நதியின் கிளை நதியான ஜீலத்தின் மீது கட்டப்பட்ட பக்ளிஹார் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதா? உலக வங்கியின் நிபுணர் வந்தல்லவா ஆய்வு செய்து அறிக்கை அளித்துவிட்டு போயுள்ளார்.

நதி நீர்ப் பிரச்சனை மாநிலங்களுக்கு இடையிலானதா அல்லது நாடுகளுக்கு இடையிலானதா என்பதல்ல தீர்வு காண்பதற்கான அடிப்படை. மாறாக, நதி நீர்த் தகராறுகளுக்குத் தீர்வு காண்பதற்கு தேச அளவிலும், சர்வதேச அளவிலும் ஒரு கோட்பாடு வகுக்கப்படாததுதான் என்பது குறிப்பிடத்க்கதாகும்.

இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனையும் முழுமையான நாட்டுணர்வுடன் மத்திய அரசுகள் அணுகியிருந்தால் அவைகள் இன்று வரை நீடித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிராது.

அணு சக்தி ஒத்துழைப்பு போன்ற பிரச்சனைகளில் கொள்கைகள் ஒரு தடைகளாக உள்ளது என்று பிரதமர் கூறுவரானால் அதில் அர்த்தம் உள்ளது. ஆனால், மாநில உணர்வுகள் எந்தவொரு சூழலிலும் நமது நாட்டை எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் ஒரு முட்டுக்கட்டையாக இருந்ததில்லை என்பதே உண்மை.

இன்று மத்தியில் உள்ள கூட்டணி அரசு நமது கூட்டாட்சி தத்துவத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அனைத்து நலன்களையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் போதுதான் தேச நலன் என்ற ஒன்றிற்கு அர்த்தமிருக்கும்.

எனவே, மாநில உணர்வுகளோ அல்லது மாநில கட்சிகளோ நமது நாட்டின் வளர்ச்சிக்கோ அல்லது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளுக்கோ தடையாக இருந்ததில்லை. மாறாக, அவைகளே நமது கூட்டாட்சி தத்துவத்தை வலிமையாக்கி நாட்டின் ஒற்றுமையையும், முன்னேற்றத்தையும் உறுதிபடுத்துகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments