கிரிக்கெட் வீரர்களுக்கு ரொக்கப் பரிசு அளித்து ஊக்குவிப்பதைப் போல நமது நாட்டிற்கு பெருமை சேர்த்த தங்களுக்கும் ரொக்கப் பரிசு அளித்து ஊக்குவிக்க வேண்டும் என்று இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கர்வாலோ குரலெழுப்பியிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
முதல் முறையாக நடைபெற்ற இருபதுக்கு20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடி சாம்பியன் கோப்பையை வென்றதற்காக அவர்கள் மீது பரிசு மழை பொழிவதை யாரும் எதிர்க்கப் போவதில்லை.
webdunia photo
FILE
கிரிக்கெட் வாரியம் இந்திய அணியில் இடம்பெற்ற எல்லா வீரர்களுக்கும் சேர்த்து 10 மில்லியன் டாலர்களை (8 கோடி ரூபாய்) ரொக்கப் பரிசாக வழங்கியது. 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்த யுவராஜ் சிங்கிற்கு சிறப்புப் பரிசாக ரூபாய் 1 கோடி அறிவிக்கப்பட்டது.
இவைகள் மட்டுமின்றி, தமிழக அரசு உட்பட ஒவ்வொரு மாநில அரசும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு 5 லட்சம், 10 லட்சம் என்று அள்ளித் தெளித்தன. இவையாவும் அவர்கள் ஆடிய ஆட்டத்திற்கு பாராட்டாகவும், இப்படியே தொடர்ந்து ஆடவேண்டும் என்று ஊக்குவிக்கவும் வழங்கப்பட்டது. ஆனால் அதுவே தற்பொழுது வேறொரு பிரச்சனையை கிளப்பியுள்ளது.
கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைகளும், பரிசுகளும் அதே அளவிற்கு நமது நாட்டின் பெருமைகளை உயர்த்திய மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படாதது ஏன் என்பதே அந்தக் குமுறல்.
webdunia photo
FILE
நியாயமானதுதான். சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி மிகச் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த தென் கொரிய அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. சர்வதேசப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றிபெறாத நிலையில், ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது, பெருமைக்குரியது.
ஆனால், அந்த வெற்றியைப் பெற்றுத் தந்த வீரர்களுக்குப் பாராட்டும், பரிசுப் பண மழையும் பொழியவில்லை. இந்த மனப்பான்மையை கடுமையாக சாடியுள்ளார் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கர்வாலோ.
கிரிக்கெட்டிற்கு காட்டப்படும் அந்தச் சலுகையும் கருணையும், ஹாக்கி உள்ளிட்ட மற்ற விளையாட்டு வீரர்களுக்கு காட்டப்படாதது ஏன் என்று உறுமிய கர்வாலோ, இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டித்து ஹாக்கி வீரர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் எச்சரித்தார். அதற்குப் பலனும் கிடைத்துள்ளது.