Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 9 : வெள்ளையனே வெளியேறு தினம்!

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (10:34 IST)
இன்று ஆகஸ்ட் 9

webdunia photoFILE
65 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு வந்த பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை முடிவிற்குக் கொண்டுவர, வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை இந்திய தேசிய காங்கிரஸ் முன்வைத்து இறுதிகட்டப் போராட்டத்தைத் துவக்கியது!

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வெற்றிகரமான திருப்புமுனைக்கு வித்திட்டது வெள்ளையனே வெளியேறு போராட்டம்தான். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு மகாத்மா காந்தி தலைமையேற்று நடத்திய பல்வேறு போராட்டங்களில் வெள்ளையனே வெளியேறு போராட்டம்தான் பிரிட்டிஷ் ஆட்சியை கதிகலங்கச் செய்தது. அமைதி வழியில் இந்தப் போராட்டம் நடைபெறும் என்று மகாத்மா காந்தி விடுத்த அழைப்பை ஏற்று நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தவர்கள் மீது வெள்ளைய ஆட்சியாளர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.

துவக்கத்தில் சாத்வீக வழியில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டம்,வெள்ளையர்களின் அடக்குமுறையின் விளைவாக வன்முறைப் போராட்டமாக உருவெடுத்தது. உண்மையில் இப்போராட்டம் வன்முறைப் பாதையில் அடியெடுத்து வைத்தபோதுதான் வெள்ளைய அரசு தங்களுடைய ஏகாதிபத்தியத்திற்கு இந்தியாவில் முடிவு கட்டபட்டுவிட்டது என்று வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.

வெள்ளையனே வெளியேறு போராடட்டத்தை அறிவிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, 1942 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் நாள் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில்தான் முழு விடுதலை வேண்டும் என்கின்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கத்தை மகாத்மா காந்தி அறிவித்தார்.

மகாத்மா காந்தியின் இந்த முடிவை ராஜாஜி உள்ளிட்ட சில தலைவர்கள் ஏற்க மறுத்தனர். மொஹம்மது அலி ஜின்னா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்து மகா சபா ஆகியனவும் வெள்ளையனை எதிர்த்து நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க மறுத்தன.

webdunia photoFILE
இதனைத் தொடர்ந்து 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள் பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெள்ளையனே வெளியேறு ( Quit India) தீர்மானத்தை நிறைவேற்றியது. அன்று மாலை பம்பாயில் உள்ள (இன்றைய மும்பை) கோவாலிய டேங்க் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மகாத்மா காந்தி, வன்முறை தவிர்த்து ஒத்துழையாமை செய்ததைப் போல, வெள்ளையனே வெளியேறு போராட்டமும் சாத்வீக வழியில் நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆயினும், காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காந்தி புனாவில் உள்ள ஆகா கான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் அகமது நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை பம்பாய் மாநாட்டிற்கு 3 லட்சம் பேர் திரண்டனர். ஆனால், அவர்களை தலைமையேற்று வழி நடத்தக்கூடிய ஒரு தலைவரும் இல்லை. அந்த நிலையில்தான் இளம் வீராங்கனை அருணா ஆசப் அலி அன்று நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமையேற்று தேசக் கொடியை ஏற்றிவைத்தார்.

பம்பாயில் அமைதியாக நடந்த போராட்டத்தின் மீது தடியடி நடத்தப்பட்டது. பிறகு கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் அன்று தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரிட்டிஷ் காவல்துறை தடியடி நடத்தியது. சில இடங்களில் துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டு பலர் உயிரிழந்தனர். இதனால் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமானது.

webdunia photoFILE
துவக்கத்தில் நகர மையங்களில் மட்டுமே நடந்து வந்த வெள்ளையனே வெளியேறு போராட்டம் பிறகு கிராமங்களுக்கும் பரவியது. ஆங்காங்கு உள்ளூர் தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை நடத்தினர்.

போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்துவது, துப்பாக்கியால் சுடுவது எங்கும் தொடர்ந்தது. இதனால் கோபமுற்ற போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அரசு அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.

webdunia photoFILE
இளைஞர்களும், மாணவர்களும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தீவிரப்படுத்தினர். பல இடங்களில் வெள்ளைய அதிகாரிகளும், அவர்கள் கீழ் பணிபுரிந்த இந்தியப் பணியாளர்களும் தாக்கப்பட்டனர்.

போராட்டத்தை ஒடுக்க முழுமையான காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்துவிட்டது பிரிட்டிஷ் காலனி ஆட்சி. போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு, அவர்கள் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் என்று நிராயுதபானியாக போராடிய மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. ஒரு லட்சம் பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டனர். பலருக்கு கசையடி தண்டனை விதிக்கப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையிலேயே நிறைவேற்றப்பட்டது. ரொக்க தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆயினும், போராட்டம் பலமிழக்கவில்லை.

webdunia photoFILE
ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதைக் கண்டு அரண்டு போன பிரிட்டிஷ் அரசு, காந்தி, நேரு உள்ளிட்டத் தலைவர்கள் நாடு கடத்தி தென் ஆப்ரிக்கா அல்லது ஏமனில் சிறை வைக்கவும் திட்டமிட்டனராம். ஆனால், அதனால் போராட்டம் மேலும் வலுப்பெற்றுவிடுமோ என்ற அச்சத்தினால் அத்திட்டத்தை கைவிட்டதாக வரலாறு கூறுகிறது.

மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது அவரது மனைவி கஸ்தூரிபாய் காந்தி மரணமடைந்தார். அவரது செயலரும் காலமானார். காந்தியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையிலும் 21 நாட்கள் உண்ணாவிரதத்தை காந்தி துவக்கினார். காந்தியின் உடல் நிலை மோசமாகி வருவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி அவரை விடுதலை செய்தது. ஆயினும், உண்ணாவிரதத்தை காந்தி கைவிடவில்லை. சிறை வைக்கப்பட்ட தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். வெற்றியும் பெற்றார். அந்த வெற்றியை பிரிட்டிஷ் ஆட்சிக்கு இறுதித் தோல்வியாக முடிந்தது.

1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் - இந்திய அரசிற்கு எதிராக சிப்பாய்கள் நடத்திய விடுதலைப் போராட்டம் 85 ஆண்டுகளுக்குப் பின்னர் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் மூலம் வெள்ளையர் ஆட்சிக்கு இறுதி முடிவு கட்டியது. அடுத்த 5 ஆண்டுகளில் அதே ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா விடுதலை பெற்றது.

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

Show comments