Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒப்பந்த வரைவு வெளியானதால் கோபன்ஹேகன் மாநாட்டில் கூச்சல், குழப்பம்

Webdunia
புதன், 9 டிசம்பர் 2009 (14:57 IST)
வானிலை மாற்றம் என்ற மனித நாகரீகத்தை அச்சுறுத்தும் ஒரு விவகாரத்தை தடுக்க 192 நாடுகளின் தலைவரகளும் ஐ.நா. தலைமையில் கோபன்ஹேகனில் கூடியுள்ள நிலையில், எதிர்கால வானிலை மாற்ற பிரச்சனையில் இருந்து ஐ.நா. அவையை முற்றிலுமாக ஓரங்கட்டவும், பணக்கார நாடுகளுக்கு அதிக அதிகாரம் வழங்கவும் உருவாக்கப்பட்ட ஒப்பந்த வரைவின் பிரதி வெளியானதால் வளரும் நாடுகளின் தலைவர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.

கசிந்த ஒப்பந்த வரைவின்படி, 2050ஆம் ஆண்டு தனி நபர் வெப்ப வாயு வெளியேற்ற இலக்கு நிர்ணயிப்பில் வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்குமான இடைவெளி அதிகம் இருப்பதாக வளரும் நாடுகள் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளன.

இந்த ஒப்பந்த வரைவின் படி, வளர்ந்த நாடுகளில் தனி நபர் வெப்ப வாயு வெளியேற்ற அளவு ஏழை மற்றும் வளரும் நாடுகளின் தனி நபர் வெப்பவாயு வெளியேற்ற அளவைக் கட்டிலும் இருமடங்காகும்.

சர்ச்சைக்குறிய "டேனிஷ் பிரதி" என்று அழைக்கப்படும் இந்த உடன்படிக்கை வரைவு "தி சர்க்கிள் ஆஃப் கமிட்மென்ட்" என்ற தனி நபர்களால் இவ்வாறு வரையப்பட்டுள்ளது என்று கருதப்பட்டாலும், இதன் பின்னால் சூத்திரதாரியாக இருப்பது பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க் ஆகிய நாடுகளே என்ற சந்தேகமும் வளரும் நாடுகளிடையே எழுந்துள்ளது.

அதாவது இந்த மோசடி ஒப்பந்தத்தின் படி கியோட்டோ உடன்படிக்கையின் அனைத்து அம்சங்களையும் வளர்ந்த நாடுகள் புறந்தள்ளி தொடர்ந்து தங்கள் நடவடிக்கையை நடத்திக் கொண்டிருக்கும் வகையில் வரையப்பட்டுள்ளது.

கியோட்டோ ஒப்பந்தத்தின்படி, வெப்ப வாயுவை அதிகம் வெளியிட்டு வரும் வளர்ந்த நாடுகள் தங்கள் வெளியேற்றத்தை கடுமையாக குறைக்கவேண்டும் என்றும், வளரும் நாடுகள் இந்த விஷயத்தில் வற்புறுத்தப்பட மாட்டாது என்றும் உள்ளது.

ஆனால் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்த வரைவு மாதிரியில் கியோட்டோ உடன்படிக்கையின் அடிப்படைகளை முழுமையாக புறக்கணித்துவிட்டு வரையப்பட்டுள்ளது என்பதுதான் வளரும் நாடுகளின் கோபாவேசத்திற்கு காரணம்.

இந்த வரைவு ஒப்பந்தத்தின்படி, வானிலை மாற்ற நிதிக் கட்டுப்பாடு முழுதும் உலக வங்கிக்கு செல்லும். இதன் மூலம் ஐ.நா. அவை புறக்கணிக்கப்பட்டு, கரியமிலவாயு வெளியேற்றத்தை தடுக்க சட்ட ரீதியாக ஒப்புக் கொண்டு கையெழுத்திட்ட கியோட்டோ ஒப்பந்தம் குப்பையில் போடப்படும்.

இந்த துரோக ஒப்பந்த வரைவை வர்ணித்த ஒரு நாட்டு அதிகாரி இதனை மிகவும் அபாயகரமான ஒப்பந்த வரைவு என்று வர்ணித்துள்ளார். ஏனெனில் கியோட்டோ வழிகாட்டுதலை புதிய ஒப்பந்த வரைவு முற்றிலுமாக நிராகரிக்கிறது. கியோட்டோ ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகவே புதிய ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்ற கொள்கை மறுக்கப்பட்டுள்ளது.

வெளியே கசிந்த இந்த ஒப்பந்த வரைவில் உள்ள முக்கிய அம்சங்களில் சில:

1. ஐ.நா. உடன்படிக்கையில் இல்லாத அளவில் வளரும் நாடுகளை வெப்ப வாயு வெளியேற்றத்தை இவ்வளவு குறைக்கவேண்டும் என்று நிர்பந்திப்பது.

2. " மிகவும் பலவீனமான நாடுகள்" ( The most vulnerable countries) என்ற புதிய பிரிவை உருவாக்கி ஏழை நாடுகளை பிரிப்பது.

3. வானிலை நிதியை ஐ.நா. நிர்வகிப்பதை முற்றிலும் ஒழிப்பது.

4. 2050 ஆம் ஆண்டில் ஏழை நாடுகளின் தனி நபர் வெப்ப வாயு வெளியேற்றம் 1.44 டன்களுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவது. மாறாக செல்வந்த நாடுகள் 2.67 டன்கள் வரை வெளியிட அனுமதிப்பது!

எந்த ஒன்றைப் பற்றியும் எந்த ஒரு விவாதமும் இல்லாமல் இந்த வரைவு ஒப்பந்தம் தீட்டப்பட்டுள்ளது என்பதுதான் வளரும் நாட்டுத் தலைவர்களின் கோபாவேசத்திற்கு மற்றொரு காரணமாகும்.

இந்த ஒப்பந்தம் பாரக் ஒபாமா உள்ளிட்ட பணக்கார நாட்டுத் தலைவர்களைத் திருப்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு என்று மாநாட்டில் கலந்து கொண்ட வளரும் நாட்டின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெப்ப வாயு வெளியேற்றத்தை வளரும் நாடுகள் 40% குறைத்தேயாகவேண்டும் என்று விஞ்ஞானிகளின் எச்சரிக்கை காற்றில் பறக்கவிடப்பட்ட வரைவு இது என்று ஆக்சாம் இன்டெர்னேஷனல் வானிலைக் கொள்கை ஆலோசகர் ஆன்டனியோ ஹில் என்பவர் வெளிப்படையாகவே குற்றம்சாற்றியுள்ளார்.

" பசுமை வளர்ப்பிற்கான நிதி மேலாண்மையை உலக வங்கி உள்ளிட்ட 10 முகவாண்மை அமைப்புகள் தனியே கையாளும், ஐ.நா. அல்ல. இது உறுதியாக ஒரு பின்னடைவுதான், ஏனெனில் உலக வங்கியிடம் இருந்தால்தான் வளரும் மற்றும் ஏழை நாடுகளை இந்த விவகாரத்தில் அடக்கி ஆளமுடியும்" என்று அவர் கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments