அரிசி, கோதுமை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகிய நான்கு அத்தியாவசிய பொருட்களை பண்டக பரிமாற்ற சந்தையில் முன் பேர வர்த்தகத்திற்கு (Futures Trading) விதித்துள்ள தடையை நீக்க கூடாது என்று தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தக சங்கம் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக இதன் தலைவர் எஸ். ரத்தினவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி உளுந்து, துவரம் பருப்பு இரண்டுக்கும் முன் பேர வர்த்தகத்தில் ஈடுபட தடை விதித்தது. இதேபோல பிப்ரவரி 28 ஆம் தேதி அரிசி, கோதுமைக்கு முன் பேர வர்த்தகத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நான்கு அத்தியவசிய பொருட்களுக்கு முன் பேர வர்த்தகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் படி முன்பேர சந்தை கமிஷனின் தலைவர் மத்திய நுகர்வோர் நலன் அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருக்கிறது.
இந்த நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலை முன்பு அதிகரிக்க காரணம், இவை இருப்பில் இல்லாமலேயே முன் பேர வர்த்தக நடவடிக்கையின் மூலம் ஊக வணிகத்தில் ஈடுபட்டது தான்.
பங்குச் சந்தையின் வர்த்தகத்தில் ஈடுபடுவது போலவே, எவ்வித முன் அனுபவமோ அல்லது இது பற்றிய நிபுணத்துவம் இல்லாமல் பண்டக பரிமாற்ற சந்தையில் முன் பேர வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இந்த வர்த்தக முறையில் மிக குறைந்த அளவே, அதிகமான விலைக்கு வாங்கி செயற்கையாக விலையை உயர்த்தினர்.
அத்தியாவசிய பொருட்களுக்கு முன்பேர வர்த்தகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டால் மீண்டும் செயற்கையாக விலை உ.யர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பு உண்டாகும். எனவே பொதுமக்களின் அன்றாடத் தேவைகளான அரிசி, கோதுமை, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகிய நான்கு பொருட்களுக்கும் மத்திய அரசு முன்பேர வர்த்தகத்திற்கு விதித்துள்ள தடையை நீக்க கூடாது” என்று கூறியுள்ளார்.