சகாரா குழுமத்தின் மீது அதன் முதலீட்டாளர்கள் தொடர்ந்த வழக்கில், கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பு முதலீட்டாளர்களின் இருபதாயிரம் கோடி பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பிறகு முதலீட்டைத் திருப்பி தருவதற்கான கெடுவை விலக்கிக்கொண்டது. எனினும், சுப்ரட்டா ராய் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல தடை விதித்ததுடன், சொத்துக்களை விற்பனை செய்யவும் கட்டுப்பாடு கொண்டுவந்தது.
இது தொடர்பான வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தப் போது, சகாரா நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற 22,885 கோடி ரூபாய்க்கான நிதிக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியதோடு, இல்லாவிட்டால் சி.பி.ஐ. அல்லது நிறுவன பதிவாளர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தது. சுப்ரட்டா ராய் வெளிநாடு செல்வதற்கான தடையை நீக்க மறுத்துவிட்டது.
இன்று நடந்த வழக்கு விசாரணையில் சகாரா குழுமத்தின் மற்ற 3 இயக்குநர்கள் கலந்து கொண்டாலும், சுப்ரட்டா ராய் வரவில்லை. அதனால் வரும் 4 ஆம் தேதிக்கு முன்னால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.