இந்தியா முழுவதும் 15 கோடி குடும்பங்கள் சமையல் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்துகின்றன.
மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கழகம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை சமையல் கேஸ் சிலிண்டர்களை தயாரித்து பயன்பாட்டுக்காக வழங்குகின்றன.
எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து சமையல் கேஸ் சிலிண்டர்களை பெற்று வீடுகளுக்கும், வர்த்தக பயன்பாட்டுக்கும் ‘சப்ளை’ செய்வதற்காக சுமார் 12 ஆயிரத்து 600 வினியோகஸ்தர்கள் (டீலர்கள்) இருக்கிறார்கள்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை சந்தை விலையில்தான் வாங்க வேண்டும்.
ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்துவதற்காக 19 கிலோ எடையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வர்த்தக சிலிண்டர்களுக்கு மானியம் கிடையாது. இவற்றின் விலை அதிகம் என்பதால், வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் சிலிண்டர்களை வினியோகஸ்தர்களின் ஒத்துழைப்புடன் சில ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகள் வாங்கி வருவதாக புகார்கள் எழுந்தன.