பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீ்ப்பாய்க்கு 90 அமெரிக்க டாலர்களை தாண்டிவிட்ட நிலையில், டீசல் விலையை உயர்த்த பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விடுத்துள்ள கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்க மத்திய அமைச்சரவையின் அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு (Empowered Group of Ministers - EGoM) நாளை மாலை கூடுகிறது.
கடந்த புதன் கிழமை கூடுவதாக இருந்த இக்கூட்டம், வெங்காய விலையேற்றத்தினால் மக்கள் கொதித்துப்போய் இருந்த சூழலினால் நடக்கவில்லை. தற்போது வெங்காயத்தின் விலை ரூ.40க்குக் குறைந்தாலும், பூண்டு, தக்காளி ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், டீசல் விலையை உயர்த்துவது குறித்த மத்திய அரசு தீவிர சிந்தனையில் ஆழ்ந்துள்ளது.
டீசல் விலை மட்டுமின்றி, சமையல் எரிவாயு விலையையும் உருளைக்கு ரூ.50 முதல் 100 வரை உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் அதனை இப்போதுள்ள சூழலில் நிறைவேற்றினால், அது மக்களை கடுப்பிற்குள்ளாக்கும் என்பதால், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை தள்ளிவைக்கலாமா என்று ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.