இந்தியாவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைக்கும். அகண்ட அலைவரிசை பயனாளர்களுக்கு அதி வேக சேவையை உறுதி செய்யும் சக்தி வாய்ந்த தொலைத் தொடர்பு கம்பி வடம் செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் டாடா டெலிகம்யூனிக்கேஷன்ஸ், பார்தி ஏர்டெல், ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து இயங்கும் எடிசலாட் போன்ற உலகின் 9 முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த தொலைத்தொடர்பு கம்பி வடச் சேவை, பாகிஸ்தான், மத்திய கிழக்காசிய நாடுகள் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை இணைக்கிறது.
நொடிக்கு 3.84 டெர்ரா பைட் வேக இணைப்பைத் தரும், மூன்று இணை கண்ணாடி இழை வடங்கள் கொண்ட மிக நவீனமான இந்த தொலைத் தொடர்பு கம்பி வடம், தெற்காசிய நாடுகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் வரையிலுள்ள நாடுகளை இணைக்கும் மிகப்பெரிய சேவையை உறுதி செய்யும் என்று எடிசலாட் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த தொலைத் தொடர்பு கம்பி வடத்தை இணைந்து இயக்கும் நிறுவனங்களாவன: பார்த்தி ஏர்டெல், எடிசலாட், ஃபிரான்ஸ் டெலகாம்-ஆரஞ்ச், ஓஜிஇஆர்ஓ (லெபனான்), பாகிஸ்தான் டெலிகம்யூனிகேஷன் கம்பெனி, சவுதி டெலகாம் கம்பெனி, எகிப்து டெலகாம், டெலகாம் இத்தாலிய ஸ்பார்க்கிள், டாடா டெலிகம்யூனிகேஷன்ஸ் ஆகியவாகும். இந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு ஐஎம்இடபுள்யூஇ (India - Middle East - Western Europe) என்று பெயரிட்டுள்ளன.