அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கு இறக்குமதி வரி குறைக்கப்படாது என்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார்.
புது டெல்லியில் நடைபெற்ற தேயிலை தொடர்பான கருத்தரங்கில் ஜோதிராதித்யா சிந்தியா பங்கேற்றார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், தற்போது 100 விழுக்காடு இறக்குமதி வரியாக உள்ள தேயிலை இறக்குமதி வரி குறைக்கப்படுமா என்று கேட்டதற்கு பதிலளிக்கையில், உள்நாட்டு தேயிலை தொழிலை பாதுகாக்க, தற்சமயம் தேயிலை மீதான இறக்குமதி வரி குறைக்கப்படாது என்று தெரிவித்தார். அத்துடன் இந்த வருட தேயிலை உற்பத்தி நூறு கோடி கிலோவாக அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தேயிலை கருத்தரங்கில் சிந்தியா பேசும் போது, சர்வதேச சந்தையில் தேயிலை வர்த்தகத்தில் இந்தியாவுக்கு போட்டியாக ஸ்ரீலங்காவும், கென்யாவும் வளர்ந்து வருகின்றன. இந்த போட்டியை எதிர்கொள்ள உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
2009-10 நிதி ஆண்டில் இந்தியாவில் இருந்து 200 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டைவிட 10 விழுக்காடு அதிகம்.