மார்ச் மாத்தில் தொழில் துறை உற்பத்தி 13.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதமாக தொழில் துறை உற்பத்தி இரட்டை இலக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் துறை உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், உற்பத்தி பிரிவின் வளர்ச்சி அதிகரிப்பதே.
2009-10 நிதி ஆண்டில் எல்லா பிரிவுகளையும் சேர்த்து தொழில் துறையின் உற்பத்தி, முந்தைய நிதி ஆண்டைவிட 10.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்த மார்ச் மாதத்தில் கனிம சுரங்க பிரிவு 11%, உற்பத்தி சார்ந்த தொழில் பிரிவு 14.3%, மின் உற்பத்தி 7.7% அதிகரித்துள்ளது.
உற்பத்தி பிரிவில் உள்ள 17 வகை தொழில்களில், இந்த மார்ச் மாதத்தில் 14 வகை தொழில் பிரிவுகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
உலோகம், உலோக உதிரி பாகங்கள் (இயந்திரம், தளவாடம் நீங்கலாக) பிரிவு உற்பத்தி 42.8%, மற்ற வகை உற்பத்தி பிரிவு தொழில்கள் 40.1%, உணவு பொருட்கள் பிரிவு 26.2% அதிகரித்துள்ளது.
பருத்தி நீங்கலாக, சணல் போன்றவைகளின் உற்பத்தி 9.6% குறைந்துள்ளது. ஜவுளி உற்பத்தி 5.4%, உல்லன், பட்டு, செயற்கை இழை ஜவுளி உற்பத்தி 3.9% குறைந்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களில் இருந்து தெரியவருகிறது.