Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.ஐ.சி ஹவுசிங் வட்டி குறைப்பு

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2008 (13:27 IST)
பொருளாதார வளர்ச்சியின் தேக்க நிலையை போக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரியல் எஸ்டேட் துறை, கட்டுமான துறைக்கு புத்துயிர் ஊட்ட வங்கிகள் வழங்கும் வீட்டு வசதி கடனுக்கான வட்டியை குறைத்துள்ளன. பொதுத்துறை வங்கிகள் ஏற்கனவே வீட்டு வசதி கடனுக்கான வட்டியை குறைத்துள்ளன.

இந்நிலையில் வீடு கட்டுவதற்கும், அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதற்கும் கடன் வழங்கும் எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் வீட்டு வசதி கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது.

இதன்படி எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் வீட்டு கடன் வட்டியை 2 விழுக்காடு குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி டிசம்பர் 17 ஆம் தேதி முதல் கணக்கிடப்படும்.

இந்திய ஆயுள் காப்பீடு கழகத்தின் துணை நிறுவனமான எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் ரூ.20 லட்சத்திற்குள் இருக்கும், ஐந்து வருட தவணை கடனுக்கான வீட்டு கடனுக்கான வட்டியை 9.25 விழுக்காடாக குறைத்துள்ளது.

ஐந்து வருடங்களுக்கும் அதிக கால தவணைக்கான கடனுக்கான வட்டியை 9.75 விழுக்காடாக குறைத்துள்ளது.

இதே போல் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு கடனுக்கான வட்டி, கடன் வாங்கியவர்களின் பிரிவை பொறுத்து 11 முதல் 11.25 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் எல்லா கடனுக்கும் 11.5 விழுக்காடு வட்டி வசூலித்தது.

இது குறித்து எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.ஆர்.நாயர் கூறுகையில், தேசிய வீட்டு வசதி வங்கியிடம் இருந்து, மறு நிதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணத்தை பெறுவோம். இதனால் நாங்கள் வீட்டு கடன் கொடுக்க திரட்டும் நிதிக்கான வட்டி குறையும் என்று தெரிவித்தார்.

வர்த்தக வங்கிகள், நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் கொடுக்கும் வீட்டு வசதி கடனில் ஒரு பகுதியை, தேசிய வீட்டு வசதி வங்கி திருப்பி கொடுக்கிறது. இதன் வட்டி, மற்ற வகையில் நிதி திரட்ட கொடுக்கும் வட்டியை விட குறைவாக இருக்கும்.

ஏற்கனவை பொதுத்துறை வங்கிகள் வீட்டு வசதி கடன் வட்டியை குறைத்துள்ளன.
இது குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மன் ஒ.பி.பத் கூறுகையில், ரூ.5 லட்சம் வரையிலான வீட்டு வசதி கடனுக்கான வட்டி 8.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

அதே போல் ரூ.5 லட்சம் முதல் ரூ. இருபது லட்சம் வரையிலான வீட்டு வசதி கடனுக்கான வட்டி 9.25 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வட்டி விகிதம் நாளை டிசம்பர் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இது 2009 ஆம் ஆண்டு ஜீன் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 20 வருடங்களுக்கான வீட்டு வசதி கடன்களுக்கு, முதல் 5 வருடம் எவ்வித வட்டி மாற்றமும் செய்யப்பட மாட்டாது.

பொதுத்துறை வங்கிகளில் வாங்கியுள்ள வீட்டு வசதி கடனில் 83 விழுக்காடு கடன்கள், அதிகபட்சமாக ரூ.20 லட்சத்திற்குள் வாங்கிய கடனாக இருக்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையால், அடுத்த ஆண்டு ஜீன் மாதத்திற்குள் ரூ.20 ஆயிரம் கோடிவரை கடன் கொடுக்க முடியும். இதனால் கட்டுமான துறையில் ரூ.30 ஆயிரம் கோடி வரை பணப்புழக்கம் ஏற்படும்.

இதன் பயனாக உருக்கு, இரும்பு உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி துறைகள் பயன் அடைவதுடன், கட்டுமான துறையில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.

நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வங்கிகளாக உள்ள பொதுத்துறை வங்கிகள், சமுதாயத்தின் குறிப்பாக மக்களுக்கு நியாயமான வட்டியில் கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பத் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து இந்திய வங்கிகள் சங்க சேர்மன் டி.என்.நாராயணசாமி கூறுகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கடன் குறைப்பு, 2009 ஜீன் 30 ஆம் தேதி வரை வாங்கும் கடனுக்கே பொருந்தும். ஏற்கனவே வாங்கியுள்ள கடனுக்கு பொருந்தாது.

அதிகபட்சமாக 20 வருடங்களில் திருப்பி செலுத்தும் வகையில் வாங்கும் ரூ.5 லட்சத்திற்கு உட்பட்ட வீட்டு வசதி கடனுக்கு, முதல் ஐந்து வருடங்களுக்கு அதிகபட்சமாக 8.5 விழுக்காடு வட்டி இருக்கும்.

இதே போல் ஐந்து லட்சத்திற்கும் அதிகமாகவும், ரூ.20 லட்சத்திற்குள் உள்ள கடனுக்கான வட்டி அதிகபட்சமாக 9.25 விழுக்காடாக இருக்கும்.

இந்த புதிய வட்டி விகிதம் கடனில் முதல் தவணை திருப்பி கட்டுவதில் இருந்து ஐந்து வருடங்களுக்கு மட்டும் பொருந்தும். அதன் பிறகு கடன் வாங்கியவர்கள் நிரந்தர வட்டி அல்லது மாறும் வட்டி விகிதத்திற்கு மாறலாம்.

இதில் ரூ.5 லட்சம் வரையிலான கடனுக்கு, முன்வைப்பு தொகையாக (மார்ஜின் மணி) 10 விழுக்காடும், ரூ. ஐந்து லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையிலான கடனுக்கு முன்வைப்பு தொகை 15 விழுக்காடு செலுத்த வேண்டும். இவற்றிற்கு விண்ணப்பம் பரிசீலணை கட்டணம், கடன் நிலுவை காலத்திற்கு முன்னரே திருப்பி செலுத்தினால் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. கடன் வாங்குபவர்களுக்கு இலவசமாக ஆயுள் காப்பீடு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் புதிய கடனுக்கு வட்டி குறைப்பது போல், முன்பு வாங்கியுள்ள வீட்டு கடனுக்கும் வட்டியை குறைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.

இது குறித்து மக்களவையில் சென்ற 19 ஆம் தேதி பொருளாதார நிலை பற்றி நடந்த விவாதத்திற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் (முன்னாள் நிதி அமைச்சர்)ப.சிதம்பரம் பேசுகையில், நாங்கள் வங்கிகளிடம் முன்னுரிமை வட்டி விகிதத்தை குறைக்குமாறு கூறி வருகின்றோம். இவ்வாறு வட்டியை குறைத்தால் ஏற்கனவே வாங்கிய வீட்டு வசதி கடனில் நிரந்தர வட்டி, மாறும் வட்டி விகிதத்தில் வாங்கிய கடனுக்கான வட்டியும் குறையும்.

ஏற்கனவே வாங்கிய மாறும் வட்டி விகிதத்தில் வாங்கிய கடனுக்கான வட்டி ஏன் குறைய வில்லை என்று பொருத்தமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் வீட்டு வசதி, கட்டுமான துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வளர்ச்சி பொருத்தே இரும்பு உற்பத்தி, சிமெண்ட், செங்கல், குழாய்கள், மின் சாதனங்கள், வேலை வாய்ப்பு ஆகியவைகளின் வளர்ச்சியும் இருக்கும் என்று தெரிவித்தார்.

மற்றொரு பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கியும் வீட்டு வசதி கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது.

இது வீடு கட்ட, அடுக்குமாடி வாங்க ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும் கடனுக்கு 8.5 விழுக்காடு வசூலிக்கப்படும். அதே போல் ரூ.5 லட்சத்திற்கும் மேல் ரூ.20 லட்சம் வரை உள்ள கடனுக்கு 9.25 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதே போல் கடன் வாங்க கட்டும் முன்பணம் ரூ.5 லட்சம் வரை 10 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரை உள்ள கடனுக்கு முன்பணம் 15 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதே போல் கடன் விண்ணப்ப பரிசீலணை கட்டணம், கடன் தவணை காலத்திற்கு முன்பே கட்டினால் பிடித்தம் செய்யப்படும் கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடன் வாங்குவபருக்கு, அவர் வாங்கும் கடன் மதிப்பிற்கு இலவச ஆயுள் காப்பீடு செய்யப்படும் என்று கூறியுள்ளது.

இதன் படி கடன் வாங்குபவர்கள் கட்டும் முதல் தவணையில் இருந்து ஐந்து வருடங்களுக்கு வட்டி மாற்றம் இருக்காது. அதற்கு பிறகு நிரந்தர வட்டி அல்லது மாறும் வட்டி விகிதத்திற்கு மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் அடுத்த வருடம் ஜீன் 30 ஆம் தேதிவரை வழங்கப்படும் கடனுக்கு மட்டுமே பொருந்தும்.

பொதுத்துறை வங்கிளை தொடர்ந்து தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்.டி.எப்.சி (ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன்) வீட்டு கடன் வட்டியை குறைத்துள்ளது.

இந்த நிறுவனம் இந்தியாவில் அதிக அளவு வீட்டு வசதி கடன் கொடுக்கும் நிதி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்க்து.

ஹெச்.டி.எப்.சி வீட்டு கடன் வட்டியை அரை விழுக்காடு குறைத்துள்ளது. இதன் படி ரூ.20 லட்சத்திற்க்குள் உள்ள கடனுக்கு 10.25 விழுக்காடாக (மாறும் வட்டி) குறைத்துள்ளது. ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள கடனுக்கான வட்டியை 11.25 விழுக்காடாக குறைத்துள்ளது.

இந்த புதிய வட்டி விகிதம் டிசம்பர் 22 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்ற தெரிவித்துள்ளது. இது தற்போது ஹெச்.டி.எப்.சி வீட்டு கடனுக்கு 11.75 விழுக்காடு வட்டி வசூலிக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments