Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் நிறுவனங்களுக்கு உதவி-பிரதமர் உறுதி.

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (11:54 IST)
புது டெல்ல ி: உலகில் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்தியாவையும் கடுமையாக பாதிக்கும். அத்துடன் இதற்கு தீர்வு ஏற்பட எதிர்பார்த்ததை விட அதிக காலம் ஆகும். இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், அரசு எல்லா உதவிகளையும் வழங்கும் என்று தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகள் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று, இந்திய தொழில், வர்த்தக நிறுவனங்களின் தலைமை பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசும் போது, அமெரிக்காவில் வங்கி, நிதி துறையில் ஏற்பட்ட நெருக்கடி, தற்போது மற்ற நாடுகளிலும் பரவியுள்ளது.

தற்போது பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு தொழில் துறையினருக்கு நம்பிக்கை இழந்துள்ளனர். வங்கிகளும் கூட பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்திய வங்கிகளில் நெருக்கடி ஏற்படாமல், பாதுகாப்பாக உள்ளன.

நமது வங்கிகள் சரியாக கட்டுப்படுத்தப்படுகின்றன. அத்துடன் முதலீடுகளும் உள்ளன. இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் நமது வங்கிகளுக்கு நேரடியான பாதிப்பு மிக குறைந்த அளவே உள்ளது.

நமது பொதுத்துறை வங்கிகளும், தனியார் துறை வங்கிகளும் பாதுகாப்பாக இருக்கின்றன என்பதை மக்களிடம் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நமது நாட்டு வங்கிகளுக்கு அரசு பின்புலமாக உள்ளது. எனவே யாரும் வங்கிகளில் போட்டு வைத்துள்ள வைப்பு தொகை போன்றவைகள் பற்றி கவலைப்பட வேண்டாம்.

நமது நிதிச் சந்தையில் பணப்புழக்கம் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். வங்கிகளின் இருப்பு விகிதத்தை 3.5 விழுக்காடு குறைத்துள்ளோம். அதே மாதிரி எஸ்.எல்.ஆர், ரிபோ வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளோம்.

ரிசர்வ் வங்கியில் இருந்து, பரஸ்பர முதலீட்டு நிறுவனங்கள், வங்கிசார நிதி நிறுவனங்களுக்கு தேவையான கடன் கிடைப்பதற்கு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியால், சர்வதேச அளவில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட நாட்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்பு இல்லை. இந்த நெருக்கடி நமது பொருளாதார வளர்ச்சியையும் பாதித்துள்ளது. மற்ற நாடுகளில் இருந்து நமது வங்கிள், தொழில் துறைக்கு கடன் கிடைப்பது


குறைந்துள்ளது. இது நமது தொழில், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகளை பாதித்துள்ளன. இந்த நெருக்கடியால் முதலீட்டாளர்களின் மனநிலையும் மாறியுள்ளது.

நமது முதல் கடமை இந்திய வங்கி, நிதி துறையின் மீதான நம்பிக்கை குறையாமலும், அதனால் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே.

நாம் தற்போது எழுந்துள்ள சூழ்நிலை எதிர்பார்க்கதது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அதிக உன்னிப்பாக நிலைமைகளை கவனிக்க வேண்டும். அரசு தினசரி நிலைமைகளை ஆய்வு செய்து வருகிறது. உள்நாட்டு வளர்ச்சி பாதிக்காமல் இருக்க, அரசு தேவையான பொருளாதார, நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கும்.

இந்த நடவடிக்கைகளால், நமது வங்கி, நிதி துறை பாதிக்கப்படாமல் இருப்பதுடன், சிறப்பாக இயங்கும். அதிக பணப்புழக்கம் ஏற்பட எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கை, வங்கிகளுக்கான ரிபோ வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளதால், நியாயமான வட்டியில் கடன் கிடைக்கும். மக்களின் நம்பிக்கை சீர்குலையாமல் இருக்கும் வகையில், தேவாயான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கும்படி பொதுத்துறை வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

நாம் எடுத்த உறுதியான முடிவுகளால், பணவீக்கம் குறைய தொடங்கியுள்ளது. கடந்த ஆறு வாரமாக மொத்த விலை குறியீட்டு எண் குறைந்து வருகிறது.

விமான போக்குவரத்து, உருக்கு தொழில் துறைக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் உள்நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் செய்யப்பட உள்ள முதலீடு, நிலைமைகளை சீராக்குவதற்கு உதவும். நாம் அரசு துறையிலும், அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து மேற்கொண்டுள்ள அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் நிதி இல்லாமல் பாதிக்காதவாறு, விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவம் வசதி, கல்வி, கிராமப்புற மேம்பாடு, விவசாயம் ஆகிய துறைகளில் செய்யும் செலவுகள் குறைக்காமல், அதிகப்படுத்தப்படும். இந்த துறைகளின்


வளர்ச்சி உன்னிப்பாக கண்காணிக்கப்படும்.

அரசு எடுத்த நடவடிக்கைகளால் பலன்கள் ஏற்பட துவங்கி உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாய துறையின் வளர்ச்சி 4.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்த வருடமும் இதே அளவு தொடரும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இவைகளினால் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதுடன், பொருளாதாரமும் பலமடையும்.

உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை, இந்தியாவுக்கு சாதகமானதாக ஆக்கிக் கொள்ள எடுக்கும் நடவடிக்கையில், இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன். நமது உற்பத்தி துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்ல நீங்கள் உறுதியாக இருப்பதுடன், தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். பத்து வருடங்களுக்கு முன்பு, இந்த அளவிற்கு பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம்.

கடந்த சில வருடங்களில் நமது சேமிப்பு மற்றும் முதலீடு பலமானதாக உள்ளது. உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், நமது தொழில், வர்த்தக நிறுவனங்கள் நம்பிக்கை இழக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உற்பத்தி செலவை குறைத்து, உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த நெருக்கடியான நிலையை சமாளிக்கும் அதே நேரத்தில், தொழில் நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது போன்ற, தீடீர் முடிவுகளை எடுக்க கூடாது. இது போன்ற நடவடிக்கைகள் நேர்மறையான எண்ணத்தை உருவாக்கிவிடும்.

தொழில் நிறுவனங்கள், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வர நடவடிக்கைககள் எடுக்கும் போது, அவற்றின் சமூக பொறுப்புகளையும் மனதில் கொள்ள வேண்டும்.

இதே மாதிரி எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க, இந்தியா உலக அளவில் நிதி துறையில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

இந்த கூட்டத்தில் தொழில் நிறுவனங்கள் சார்பில் ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, சாஷி ரூயா, தீபக் பரேக், கே.பி.சிங், இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் கே.வி.காமத், இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜூவ் சந்திரசேகர், அசோசெம் தலைவர் சாஜன் ஜின்டால், அரசின் சார்பில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments