Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருக்கு விலை குறைக்க முடிவு!

Webdunia
புதன், 7 மே 2008 (19:12 IST)
உருக்கு விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் குறைக்க உருக்கு உற்பத்தி ஆலைகள் சம்மதித்து உள்ளன.

கடந்த சில மாதங்களாக உருக்குக் கம்பி, தகடு உட்பட உருக்கு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்தது. இத்துடன் கட்டுமானத் தொழிலுக்கு தேவைப்படும் டி.எம்.டி. பார் என்று அழைக்கப்படும் முறுக்கு கம்பியின் விலையும் அதிகரித்தது.

இந்த விலை உயர்வினால் கட்டுமானத் துறை, வாகனம், நுகர்வோர் பொருட்கள் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த தொழில்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாயின.

மத்திய உருக்கு துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உருக்கு ஆலை உயர் அதிகாரிகளை அழைத்து, உருக்கு, இரும்பு பொருட்களின் விலையை குறைப்பது பற்றி ஆலோசனை நடத்தினார்.

இவர்கள் உருக்கு உற்பத்திக்கு தேவையான கோக் எனப்படும் உலைகரி, நிக்கல், ஜிங்க் ஆகியவற்றின் விலை அதிக அளவு உள்ளது. இவற்றின் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது.

ரயில்வே சரக்கு போக்குவரத்து கட்டணத்தை குறைக்க வேண்டும். அத்துடன் இரும்பு தாது ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறின.

இதில் கோக், நிக்கல், ஜிங்க் போன்றவைகளுக்கு இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது.

ரயில்வே இரும்பு தாது போக்குவரத்து கட்டணத்தை குறைத்துள்ளது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவினர் உருக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் தான், இதன் விலைகள் உள்நாட்டு சந்தையில் அதிகரிக்கின்றன. இதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

இவர்கள் அதிக அளவு பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு உருக்கு கம்பி, பாளம், உருட்டு கம்பி போன்ற சில பொருட்களின் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்தியுள்ளது.

இரும்பு தாது சுரங்க உரிமையாளர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறும் வகையில், இரும்பு தாது ஏற்றுமதியால் உள்நாட்டு உருக்கு ஆலைகள் பாதிக்கப்படவில்லை. உள்நாட்டு உருக்கு ஆலைகளின் தேவைக்கு போக உபரியாக உள்ள இரும்பு தாதுதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அத்துடன் பெரும்பாலான உருக்கு ஆலைகளுக்கு சொந்தமாக இரும்பு தாது வெட்டி எடுக்கும் சுரங்கங்களும், நிலக்கரி வெட்டி எடுக்கும சுரங்கங்களும் உள்ளன என்று மத்திய அரசிடம் எடுத்து கூறின.

இவ்வாறு பல்வேறு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களையும், கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் எடுத்துரைத்தனர்.

பல்வேறு பொருட்களின் விலை உயர்வினால் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

பண்டங்களின் மொத்த விலைப்பட்டியலின் அடிப்படையில் பணவீக்க விகிதம் கணக்கிடப்படுகிறது.
பணவீக்க கணக்கெடுப்பில் உருக்கு, இரும்பு பொருட்களின் விலைக்கு 29 விழுக்காடு மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இவைகளின் விலை அதிகரித்தால், பணவீக்க விகிதம் தானாகவே உயரும்.

இதை கருத்தல் கொண்டு பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், பல்வேறு தொழில்கள் பாதிக்காமல் இருக்கவும், உருக்கு, இரும்பு பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசு ஏற்றுமதி வரி அதிகரிப்பு, இறக்குமதி வரி குறைப்பு, சரக்கு கட்டணம் குறைப்பு உட்பட பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டது.

இதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது போல் தெரிகிறது.

இன்று புது டெல்லியில் உருக்கு துறை செயலாளர் ராகவ் சரண் பாண்டேயை உருக்கு ஆலை உயர் அதிகாரிகள் சந்தித்து பேசினர். இந்த சநதிற்கு பிறகு, உருக்கு ஆலையின் மூத்த அதிகாரி ஒருவர், உருக்கு தகடு விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வரை குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

இன்று உருக்கு துறை செயலாளர் ராகவ் சரன் பாண்டேயை, டாடா ஸ்டீல் மேலாண்மை இயக்குநர் பி.முத்துராமன், ஜி.எஸ்.டபிள்யூ. துணைத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான சாஜன் ஜிந்தால், பொதுத்துறை நிறுவனமான செயில் சேர்மன் சுசில் குமார் ரோங்டா, இஸ்பாட் இன்டஸ்டிரிஸ் மேலாண்மை இயக்குநர் வினோத் குமார் மிட்டல், எஸ்ஸார் ஸ்டீல் தலைவர் சுசி ரூயா ஆகியோர் உட்பட, உயர் அதிகாரிகள் சந்தித்து பேசினார்கள்.

இந்தியாவில் உள்ள உருக்கு ஆலைகள் ஒன்று சேர்நது இந்தின் ஸ்டீல் அலையன்ஸ் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த அமைப்பு மூலம் உருக்கு ஆலைகள் கூட்டு சேர்ந்து உருக்கு, இரும்பு பொருட்களின் விலையை உயர்த்துவதாக குற்றம் சாட்டப்பட்டது.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிமெண்ட், உருக்கு ஆலைகள் கூட்டணி அமைத்துக் கொண்டு, இவற்றின் விலையை செயற்கையாக உயர்த்துவதாக நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இவ்வாறு பல்வேறு தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பை அடுத்து சென்ற வாரம் நாட்டின் முன்னணி உருக்கு உற்பத்தி நிறுவனமும், பொதுத்துறை நிறுவனமுமான செயில் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய உருக்கு ஆணையம், இநத அமைப்பில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments