Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்த்தக ஒப்பந்தம்: ஆசியான்-இந்தியா பேச்சு வார்த்தை

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (14:44 IST)
ஆசியான் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது.

ஆசியான் அமைப்பின் 13 வது வருடாந்திர மாநாடு சி்ங்கப்பூரில் நடைபெற்று வரு‌கிறது.

இதையொ‌ட்டி ஆசியன் அமைப்புக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங், வர்த்தக அமைச்சர் கமல்நாத் ஆகியோர் சென்றுள்ளனர்.

இதில் ஆசியன் அமைப்பு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே தாராள வர்த்தக உடன்பாடு ஏற்படுவதில் உள்ள பிரச்சனைகளை களைவதற்காக பேச்சு வார்த்தை நடைபெற்றது.

ஆசியான் உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்களுடன், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் பேச்சு வார்த்தை நடத்தினார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தாராள வர்த்தக உடன்படிக்கை ஏற்படுவதற்கு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் பற்றி இரு தரப்பிலும் பரிசீ‌லி‌க்கப்பட்டது.

இரு தரப்புக்கும் இடையே சென்ற முறை பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சிபூ நகரத்தில் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, உடன்படிக்கை ஏற்படுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கியமான விஷயங்களில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. முன்னுரிமை கொடுக்க வேண்டிய சில பொருட்கள் பற்றி மட்டும் உடன்பாடு காண வேண்டியதுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பிரச்சனைகள் பற்றியும் உடன்பாடு காண்பது என இருதரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரா‌ஜ்ய துறையினரும், வர்‌த்தக துறையைச் சேர்ந்த பார்வையாளர்களும் பாமாயில், மிளகு, தேயிலை, காபி மற்றும் பெட்ரோலிய பொருட்கள் வர்த்தகத்திற்கு சலுகை அளிக்க வேண்டும் என ஆசியன் அமைப்பு இந்தியாவிடம் கோருவதாக தெரிவித்தனர்.

ஆசியன் அமைப்புக்கும் இந்தியாவிற்கும் இடையே நடக்கும் உச்சநிலை கூட்டத்தில் தாராள வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை அடைய வேண்டும் என ஆசியான் அமைப்பு எதிர்பார்க்கிறது. இந்த உடன்பாடு காண்பதில் முக்கியமான விவசாய விளைபொருட்களுக்கு தாராள அனுமதி அளிப்பது இந்தியாவிற்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும் என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஆசியன் அமைப்பில் உள்ள நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இடையே சென்ற ஆண்டு 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது 2010 ஆம் ஆண்டில் 300 கோடி அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடியாக இருப்பதால், இங்கு அதிகளவு வியாபார வாய்ப்பு இருக்கின்றது. இதனால் ஆசியன் அமைப்பு நாடுகள் இந்தியாவை முக்கியமான சந்தையாக கருதுகின்றன.

சர்வதேச அளவில் உற்பத்தி செய்யப்படும் பாமாயிலில் 70 விழுக்காடு மலேசியா, இந்தோனேஷியா ஆகிய இரண்டு நாடுகளும் உற்பத்தி செய்கின்றன.

தற்போது இந்தியா சுத்திகரிக்கப்படாத பாமாயிலுக்கு 60 விழுக்காடு இறக்குமதி வரியும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கு 90 விழுக்காடு இறக்குமதி வரியும் விதிக்கின்றது.

இதை இரு நாடுகளும் சுத்திகரிக்கப்படாத பாமாயிலுக்கு 30 விழுக்காடாகவும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கு 40 விழுக்காடாக குறைக்கும் படி வற்புறுத்தி வருகின்றன.

இந்தியா பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி வரியை குறைக்கும் படி கோருகின்றது. வியட்நாமும், தாய்லாந்தும் மிளகு, தேயிலை, காபி ஆகியவைகளுக்கு இறக்குமதி வரி குறைக்க வேண்டும் என கோருகின்றன.

ஆசியன் அமைப்பு நாடுகளின் மொத்த மக்கள் தொகை 57 கோடி. இந்தியாவில் இருந்து இந்த நாடுகளுக்கு உருக்கு உட்பட தொழிற்சாலை உற்பத்தி பொருட்கள் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவைகள் முக்கியமான இறக்குமதி பொருட்களாக உள்ளன.

ஆசியான் அமைப்பில் இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments