Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2007-ல் இந்தியாவின் பொருளாதாரம்!

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2007 (13:28 IST)
இந்த ஆண்டு இந்தியாவிற்கு பொருளாதார ஆண்டாகவே கருதலாம். இந்தியாவின் வளர்ச்சி பல்வேறு துறைகளிலும் சிறப்பாகவே இருந்தது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவான 8 விழுக்காடா இருந்தது.

பணவீக்கம் விகிதம் 5 விழுக்காடாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. ஆனால் பணவீக்க விகிதம் 3 முதல் 4 விழுக்காடுகளுக்குள் இருந்தது சிறப்பான அம்சமாக கருதலாம்.

பங்குச் சந்த ை

webdunia photoWD
பங்குச் சந்தையை பொறுத்தவரை 2007 ஆம் ஆண்டு மிக சிறப்பான ஆண்டு. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 13 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1990 ஆம் ஆண்டு ஜூலை 25 ந் தேதி 1,000 ஆக இருந்தது. இது 10 ஆயிரமாக உயர்வதற்கு 10 ஆண்டுகள் ஆனது. (2006 பிப்ரவரி 6 ந் தேதி 10,000 ஐ தொட்டத ு) ஆனால் 21 மாதத்திலேயே சென்செக்ஸ் பத்தாயிரம் புள்ளிகள் அதிகரித்து 20 ஆயிரத்தை தொட்டது ( 2007 அக்டோபர் 29 ந் தேதி 20,000).

இதேபோல 1994 ஆம் ஆண்டு 3 ந் தேதி வர்த்தகம் தொடங்கப்பட்ட தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 12 வருடத்தில் 6 ஆயிரமாக உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிற்கு பங்குகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடியாக உள்ளது.

இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் மகிழ்ச்சி அடையலாம். அதே நேரத்தில் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் உயர்வது விரலுக்கு ஏற்ற வீக்கம் இல்லை. என்றாவது ஒரு நாள் சரியும் ஆபத்து இருக்கின்றது என்ற கருத்து பொருளாதார நிபுணர்கள் மத்தியில் இருப்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனத்தின் வர்த்தகம், இலாபம், ஈவுத் தொகை, அதன் பொருளாதார பலத்துடன் ஒப்பிடுகையில் அதன் பங்குகளின் விலை அதிகமாக இருக்கின்றது என்ற கருத்தும் நிலவுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கவும் தவறுவதில்லை.

இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை பலமாக இருக்கின்றது. பொருளாதார ரீதியாக இந்தியா வளர்ந்து வருகிறது. இங்கு முதலீடு செய்வதால் அதிக இலாபம் கிடைக்கின்றது. இதனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வமாக முதலீடு செய்கின்றனர்.

அத்துடன் இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்களின் அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராகி வருகிறது. 1900 ஆம் ஆணடுகளில் தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்திய போது அரசியல் ரீதியாக பலத்த எதிர்ப்பு இருந்தது. அத்தகைய சூழ்நிலை இப்போது இல்லை என்பதால், அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். இதனால் சில்லரை முதலீட்டார்கள் சிறிது பாதிக்கப்படுவார்கள். இருந்த போதிலும் பங்குச் சந்தை ஏற்றத்தை காணும் என்பதில் சந்தேகம் இல்லை என் உறுதியாக நம்புகின்றனர்.

பங்குச் சந்தையைப் பொறுத்த வரை பங்குகள் விலை அதிகரிப்பது, அதனால் குறியீட்டு எண்கள் உயர்வது ஒரு வழிப்பாதை அல்ல. இந்தியாவில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் பங்குச் சந்தை உயர்வதும், வீழ்ச்சி அடைவதும் நடக்க கூடியதே. இதுதான் முந்தைய காலங்களின் அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக் கொண்டுள்ள பாடம். பங்குகளின் விலைகள் சரிவால் பல சில்லரை முதலீட்டாளர்களின் சேமிப்பு கடலில் கரைத்த உப்பாக கரைந்துள்ளது காணமல் போயும் உள்ளது. இவைகளையும் தாண்டி எல்லா தரப்பு முதலீட்டாளர்களும் பங்குகளில் முதலீடு செய்கின்றனர். இந்த புது வருடத்தில் பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்பதை ஆருடமாக கூற முடியாது. முந்தைய ஆண்டுகளை விட சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கையை, நமது எதிர்பார்ப்பை மட்டுமே வெளிப்படுத்த முடியம்.

தொழில் துற ை

webdunia photoWD
இந்த ஆண்டு இந்திய தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பான ஆண்டே. இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் பல வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தி உள்ளன. பல நிறுவனங்களை வாங்கியுள்ளன. டாடா ஸ்டீல் நிறுவனம் டென்மார்க்கைச் சேர்ந்த கோர்ஸ் உருக்காலையை ஏப்ரல் மாதத்தில் வாங்கியது. இதன் மூலம் சர்வதேச அளவில் அதிக உருக்கு உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இந்தியாவைச் சேர்ந்த டாடா ஸ்டீல் நிறுவனமும் ஒன்றாக உயர்ந்தது.

இந்திய நிறுவனங்களின் அக்டோபர் மாதம் வரை கிடைத்துள்ள புள்ளி விபரப்படி, மற்ற நிறுவனங்களை வாங்கியது, இணைத்துக் கொண்டதன் மதிப்பு 635 கோடி டாலர்.

இந்த ஆண்டு தொழில் துறை நெருக்கடிகளை சந்திக்கவில்லை. அவைகளுக்கு தேவையான மூலதனம் கிடைத்தது. அது போலவே உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களும் கிடைத்தன. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதால் ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்புகளும் நல்ல அளவிலேயே இருந்தது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், மின் தட்டுப்பாடு, இயற்கை சீற்றம், அரசின் கெடுபிடி என்று எந்த வகையிலும் இடர்பாடுகள் இல்லாமல் தொழில் வர்த்தக துறைக்கு சாதகமாகவே இருந்ததது எனலாம்.

இந்தியாவின் வாகன உற்பத்தியில் அந்நிய நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது சில ஆண்டுகளுக்கு முன்பே துவங்கின. இப்போது இவை முழு இந்திய நிறுவனங்களாக மாறிவிட்டன. இவை தொடங்கப்பட்ட போது, உதிரிபாகங்கள்,.இயந்திரங்கள், கியர்பாக்ஸ் போன்றவை அந்நிய நாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்ட்டன.

தற்போது இந்தியாவில் உள்ள இலேசு ரக கனரக வாகன உற்பத்தி நிறுவனங்களில் வாகனத்திற்கு தேவையான 90 விழுக்காடு பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் உள்நாட்டில் மட்டும் விற்பனை செய்யப்படவில்லை. பல அந்நிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியா வாகன உற்பத்தி துறையில் ஆசியாவின் மையமாக வளர்ந்து வருகிறது. உதாரணமாக மாருதி, யூண்டாய், டயோட்டோ, போர்ட், வோல்ஸ்வேகன் நிறுவனங்களை கூறலாம். அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சிறிய கார்களை அதிகளவு அறிமுகப்படுத்தின. இதற்கு காரணம் இங்கு உற்பத்தி செலவு குறைவாக இருப்பதுடன், திறமையான ஊழியர்கள், தொழிலாளர்கள் அதிகளவு இருக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்த அளவு சிறிய கார்களின் விற்பனையே அதிகளவு இருந்தது. இங்கிருந்து அதிகளவு சிறிய ரக கார்கள் ஏற்றுமதி செய்யப்படன. இதற்கு காரணம் மாருதி, யூன்டாய் ஆகிய இரண்டு நிறுவனங்களை கூறலாம்.

webdunia photoWD
இத்துடன் புதிய சொகுசு ரக கார்களையும் அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்க துவங்கியுள்ளன. இவற்றிற்கு முக்கிய காரணம் இந்த துறையில் இருந்த பல கட்டுப்பாடுகளை அரசு நீக்கியதுதான்.

இரண்டு சக்கர வாகனத்துறையும் வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இவை இடையிடையே சில தொய்வுகளையும், போட்டிகளை சந்தித்தாலும், வங்கி கடன், நிதி நிறுவனங்களின் கடன் போன்றவைகளால் இரண்டு சக்கர வாகனத்தின் விற்பனை சீராகவே இருந்தது.

ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான 7 மாதங்களில் தொழில் துறை உற்பத்தி 10.4 விழுக்காடுகளாக இருந்தது. (சென்ற வருடம் 11.1 விழுக்காட ு) சென்ற வருடத்தில் சுரங்கம் துறை 4.8 மின் உற்பத்தி 7.2 விழுக்காடாக இருந்தது. இவை அக்டோபர் மாதம் வரையிலான ஏழு மாதங்களுக்கு உள்ள விபரஙகள். நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை, அதனையடுத்து ரம்ஜான் போன்ற பண்டிகைகள் வந்தன. இந்த பண்டிகை காலங்களில் வர்த்தகம் அதிகரிக்கும். இதனால் இந்த நிதியாணடு முடிவில் (மார்ச் வர ை ) தொழில் துறை உற்பத்தி அதிகளவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி துறையிலேயே அதிகளவு வளர்ச்சி என்றால் மரம் தொடர்புடைய ப்ளைவுட், நாற்காலி, மேஜை போன்றவைகளை தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருட்களை தயாரிக்கும் துறையின் வளர்ச்சி மிகச் சிறந்ததாக இருந்தது. இதன் வளர்ச்சி சுமார் 74 விழுக்காடு இருந்தது. இதற்கு காரணம் கட்டுமானத்துறையின் வளர்சிசியும், புதிய அலுவலகங்கள் அதிகளவு திறக்கப்பட்டதும் தான் காரணம். இவை மட்டுமல்லாமல் இந்தியாவிலும் உள் அலங்காரம் என்பது அத்தியாவசியமானதாகி விட்டது. இவை போன்ற காரணங்களினால் மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் தொழில்துறையின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. இது போலவே தோல் பொருட்களை தயாரிக்கும் தொழில்துறை வளர்ச்சி 32 விழுக்காடாக உள்ளது.


தகவல் தொடர்பு!

webdunia photoWD
செல் போன் நிறுவனங்களின் வளர்ச்சியையும் குறிப்பிட்டு கூற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், மகா நகர் டெலிபோன் ஆகியவற்றின் செல்போன் சந்தா தாரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தனியார் செல் பேசி நிறுவனங்களின் சந்தாதாரர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மாதத்திற்கு புதிதாக 70 லட்சம் பேர் செல்பேசி சந்தாதாரர்களாக இணைகின்றனர். இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாக தொலை தொடர்பு துறை இருக்கின்றது. இதன் வளர்ச்சி அடுத்து வரும் ஆணடுகளிலும் தொடரும்.

இந்தியாவில் நவம்பர் மாத இறுதி வரை 264.77 மில்லியன் ( 1 மில்லியன் 10 லட்சம ்) தொலைபேசி சந்தாதரர்கள் உள்ளனர். இவை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது.

இத்துடன் செல்போன் ( ஜி.எஸ்.எம், சி.டி.எம். ஏ) சந்தாதாரர்கள் நவம்பர் இறுதி வரை 225.46 மில்லியன் பேர் உள்ளனர்.
செல்பேசித் துறையில் பல மாற்றங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இப்போது ப்ளூடூத் எனப்படும் இரண்டாம் தலைமுறை தொழில் நுட்பம் உள்ள செல்போன்கள் வந்து விட்டன. பேசுவதற்கு மட்டுமல்லாமல், இணையம், போட்டோ பரிமாற்றம்,. குறுந்தகவல், வீடியோ போன்ற வசதிகளும் செல்போன் சேவையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

இவற்றால் பொழுது போக்கு அம்சம் மட்டுமல்லாது, பல்வேறு பயனுள்ள வாய்ப்புகளும் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு செல்போன்களில் மூன்றாம் தலைமுறை தொழில் அறிமுகப்படுத்தப் படுத்தப்படலாம்.

இணையம்!

webdunia photoWD
இணையத்தின் வளர்ச்சியை குறைத்து மதிப்பிட முடியாது. கம்ப்யூட்டர் என்பது ஆங்கிலம் தெரிந்த மேதாவிகளுக்கு மட்டும் தான் உரியது என்ற மாயை நொறுங்கி வருகிறது.

பொதுத் துறை நிறுவனங்களும், தனியார் துறை நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு அகண்ட அலைத் தொடர்பு இணைப்பு கொடுத்து வருகின்றன. இதனால் இன்டர்நெட் இணைப்பு, இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இவை புதிய வேலை வாய்ப்பையும், சிறிய நகரங்களில் கல்வியறிவு உட்பட பல்வேறு தளங்களில் பயனுள்ளதாக இருக்கின்றது.

இண்டர்நெட் பயன்பாட்டை எல்லா மட்டங்களிலும கொண்டு செல்ல மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. இதன் பயன் அடுத்துவரும் ஆண்டுகளில் தெரியும். குறிப்பாக கல்வி, மருத்துவம் போன்றவற்றில் இன்டர்நெட் பயன்படுத்தப்படுவது அதிரித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்கள் பரவலான மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

சில்லரை வணிகம்

இந்த ஆண்டு சில்லரை வணிகத் துறையும் பல மாற்றங்களை சந்தித்தது. இது வரை சில்லரை வணிகம் என்பது தனி நபர்கள் செய்யும் வியாபாரம் என்று இருந்த நிலை மாறியது. இதில் ரிலையன்ஸ் ஃப்ரஸ், கிஷோர் பியானி குழுமத்தின் புட் பஜார், கோத்ரேஜ் நிறுவனத்தின் அக்டோவர்ட், ஆதித்ய பிர்லா குழுமத்தின் மோர், சுபிக்ஷா ஆகிய பெரிய நிறுவனங்களும் களத்தில் குதித்தன.

சில்லரை வணிகத்தில் பெரிய தொழில் நிறுவனங்கள், அந்நிய நிறுவனங்கள் ஈடுபட சில்லரை வணிகர்களிடேயே பலத்த எதிர்ப்பு உள்ளது. இது வெளிப்படையாகவே வெடித்தது. உத்தர பிரதேச மாநில அரசு ரிலையன்ஸின் ஃப்ரஸ் நிறுவனத்திற்கு கொடுத்திருந்த அனுமதியை ரத்து செய்தது. இதற்கு நாட்டின் எல்லா பகுதிகளிலும் பரவலாக எதிர்ப்பு இருந்தாலும், இந்த ஆண்டு சில்லரை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் காலடி எடுத்து வைத்துள்ளன. இனி வரப் போகும் ஆண்டிலும், சில்லரை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவது அதிகரிக்கும். இதை எப்படி சில்லரை வணிகர்கள் எதிர் கொள்ளப் போகின்றனர். மத்திய, மாநில அரசுகள் சிறு வணிகர்களை காப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது போகப் போகவே தெரியும்.

அந்நிய நேரடி முதலீடு!

இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான ஆறு மாதத்தில் 7.2 பில்லியன் டாலர் (1 பில்லியன் 100 கோட ி) அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. இது சென்றான்டுடன் ஒப்பிடுகையில் 65 விழுக்காடு அதிகம்.

இந்திய நிறுவனங்கள் இந்த வருடம் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 35 பில்லியன் டாலர் மதிப்பிற்கு அந்நிய நாடுகளில் முதலீடு செய்துள்ளன. அந்நிய நிறுவனங்களை வாங்கியுள்ளன.

இந்தியாவிற்கு சென்ற நிதி ஆண்டில் 15.7 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்தது. இந்திய நிறுவனங்கள் அந்நிய நாடுகளில் 24 பில்லியன் டாலர் முதலீடு செய்தன.

சர்வதேச அளவில் இந்தியா அந்நிய நேரடி முதலீடு பெறுவதில் சீனாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளைச் சேரந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கின்றன.

இதற்கு காரணம் இந்தியா கடைப்பிடித்து வரும் தாராள பொருளாதார கொள்கை. அத்துடன் இந்தியாவில் உள்ள பரமான சந்தை வாய்ப்பு. இந்தியாவில் பல்வேறு விதமான பொருட்களை வாங்கும் திறன் உள்ள 300 மில்லியன் மத்திய வருவாய் பிரிவினர் உள்ளனர்.

இத்துடன் குறைந்த ஊதியத்தில் பணியாற்ற தயாராக இருக்கும் திறமை மிகுந்த ஊழியர்கள், தொழிலாளர்கள், ஏராளமாக உள்ள இயற்கை தாது போன்ற காரணங்களினால் இந்தியா அதிக அளவு அந்நிய நேரடி முதலீட்டை பெறுகிறது.

அந்நியச் செலவாண ி

webdunia photoWD
அந்நிய நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் அமெரிக்க டாலரிலேயே நடைபெறுகின்றது. இதன் விளைவாக அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடையும் போது அல்லது அதிகரிக்கும் போது அதன் பிரதிபலிப்பு இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திலும் எதிரொலிக்கும்.

இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு சென்ற அக்டோபரில் இருந்து 12 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு பல வரிச் சலுகைகளை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் டாலரின் மதிப்ப சரிவால் பயன் அடைந்தவர்களும் உள்ளனர். அந்நிய செலவாணியில் கடன் வாங்கிய நிறுவனங்கள் திருப்பி கட்டும் கடன் தொகை, வட்டி குறைந்துள்ளது.

இத்துடன் இதுவரை இல்லாத விழிப்புணர்ச்சி ஏற்றுமதியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது எனலாம். ஏற்றுமதியாளர்கள் அந்நியச் செலவாணி சந்தையில் மற்ற நாட்டு நாணயங்களின் மதிப்பில் மாற்றம் ஏற்படும் போது பாதிக்காமல் இருக்க டாலரை முன் பேர சந்தையில் வாங்குவது, விற்பனை செய்வது போன்ற விபரங்களை வங்கிகளிடம் இருந்து தெரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். இதற்கான ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்பது ஆறுதல் அளிக்க கூடிய விடயம்.

மேலும் யூரோ, பவுண்ட் போன்ற வேறு அந்நியச் செலவாணியிலும் வர்த்தகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க சந்தையை மட்டுமே நம்பி இருந்த ஏற்றுமதியாளர்கள் வேறு நாட்டு சந்தைகளையும் தேட ஆரம்பித்துள்ளனர். இவை எல்லாம் நெருக்கடியால் வந்த இலாபம் என்றே கருத வேண்டும் இதற்கு வரும் ஆண்டுகளில் நல்ல பலன் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துறை என்று கூறினால் தகவல் தொழில் நுட்ப துறையில் உள்ள நிறுவனங்களை கூறலாம். இதிலும் எல்லா நிறுவனங்களும் பாதிக்கப்படவில்லை. டாடா குழுமத்தின் டி.சி.எஸ். போன்ற நிறுவனங்கள் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை.
அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மென் பொருள் வடிவமைப்பு, அயல் நிர்வாக அலுவலக பணியில் ஈடுபட்ட நிறுவனங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டன.

இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு டிசம்பர் 14 ஆம் தேதி நிலவரப்படி 272.95 பில்லியன் டாலராக உள்ளது. அத்துடன் சர்வதேச நிதியத்தில் இருந்து இந்தியா கடனாக பெறுவதற்கான உரிமை 3 மில்லியன் டாலராகவும், இருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 8.357 டாலராகவும் உள்ளது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தது. இது இந்தியாவை பாதித்தது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியா பெட்ரோலிய பொருட்களின் தேவையில் 70 முதலி 75 விழுக்காடு அந்நிய நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்த காரணத்தினால், வளைகுடா யுத்தம் நடந்த காலத்தை போல இந்தியா பாதிக்கவில்லை.

உதாரணமாக பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை 84 டாலராக இருந்த போது, இந்தியா 1 டாலர் ரூ.40 என்ற மதிப்பில் 1 பீப்பாய்க்கு ரூ.3,360 கொடுத்தது. ஆனால் டாலர் மதிப்பு 35 ரூபாயாக குறையும் போது ரூ. 2940 கொடுத்தால் போதும். ஒரு வகையில் அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்தது பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டம் குறைவதற்கு காரணமாக இருந்தது எனலாம்.

ரியல் எஸ்டேட்!

இந்தியாவில் சமீப காலங்களில் ரியல் எஸ்டேட் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த காலங்களை விட 2007 ரியல் எஸ்டேட் துறைக்கு பொன்னான காலம் எனலாம். இந்தியாவில் மும்பை, டெல்லி, கல்கத்தா, சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமில்லாமல், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில் உள்ள நகரங்களிலும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி கண்டது.

புதிய நவீன பாணி அலுவலகம், ஆடம்பர வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் வளர்ச்சி அபரிதமாக இருந்தது. சிமென்ட் விலை, மணல், செங்கள், இரும்பு கம்பி போன்ற கட்டுமானத்துறைக்கு தேவையான அடிப்படை பொருட்களின் விலை அதிகரித்தாலும், இதன் தாக்கத்தை ரியல் எஸ்டேட் துறையும், கட்டுமானத் துறையும் தாங்கி வளர்ச்சி பெற்றுள்ளது. அடுத்து வரும் வருடங்களில் ரியல் எஸ்டேட் துறையும், கட்டுமானத் துறையின் வளர்ச்சி பிரமாண்டமானதாக இருக்கும். ஏனெனில் இந்த துறையில் அந்நிய நேரடி முதலீடு அனுமதி அதிகப்படுத்தப்பட உள்ளது. இதில் மேற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளன. இதற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்படவுடன் அடுத்து வரும் ஆண்டுகளில் இந்திய ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறை பெரும் பாய்ச்சலில் வளர்ச்சி அடையும் என்பதில் சநதேகமில்லை.

உள்கட்டமைப்பு.

webdunia photoWD
இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதி போதிய அளவில் அல்லது தேவையான அளவிற்கு இல்லை என்பது எல்லா பிரிவு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையே. இது சர்வதேச தரத்தில் இல்லை என்பதுடன், தேவையை நிறைவு செய்யும் அளவிற்கும் இல்லை. கடந்த பத்து வருடங்கள் உள்கட்டமைப்பு துறையின் மறுமலர்ச்சி காலம் எனலாம்.

மத்திய அரசு, மாநில அரசுகள், குறிப்பாக மத்திய திட்டக்குழு உள்கட்டமைப்பு துறையில் அதிக கவனம் செலுத்த துவங்கியது. சாலை, துறைமுகம், விமான நிலையம் போன்ற மிக அத்தியாவசிய உள்கட்டமைப்பு அமைப்புகளை ஏற்படுத்துவது அரசுக்கு மட்டும் உள்ள கடமை என்ற மனநிலை மாற துவங்கியது. இதில் தனியார் துறையையும் ஈடுபடுத்த வேண்டும், இதற்காக உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க ஒட்டு மொத்த பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்குவதற்கு பதிலாக, பயன் படுத்துபவர்களிடம் கட்டணம ் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்தாலும் பரவலாக வரவேற்பை பெற துவங்கியுள்ளது. இந்தியாவின் எல்லா துறைமுகங்கள், முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்சக்கர நெடுஞ்சாலை திட்டத்தின் 93 விழுக்காடு வேலைகள் நவம்பர் மாதம் வரை நிறைவேறியுள்ளது. இது அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு பெற்று விடும்.

இதற்கடுத்து பயனை மக்கள் குறிப்பாக சரக்கு போக்குவரத்தில் உள்ளவர்கள் உணர்ந்துள்ளனர். இந்த வருடம் உள்கட்டமைப்பு துறை வளர்ச்சி குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது. இனி அடுத்த ஆண்டுகளிலும் உள்கட்டமைப்பு துறையின் வளர்ச்சி மிகப் பெருமளவில் இருக்கும் என்று உறுதியாக கூறலாம். ஏனெனில் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12 ) மத்திய அரசு சாலை, ரயில் பாதை, விமானம் மற்றும் கடல், உள்நாட்டு ஆறுகள் வழி போக்குவரத்து, மின் உற்பத்தி, மின் விநியோகம், குடிநீர் விநியோகம், பாசன வசதி மேம்பாடு போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 8 விழுக்காடு ஒதுக்குவது என முடிவு எடுத்துள்ளது. இவைகளுக்கு தற்போது 4.6 விழுக்காடு ஒதுக்கப்படுகிறது.

இது போன்ற காரணங்களினால் எதிர்காலத்தில் பல்வேறு தொழில்களின் வளர்ச்சி பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.

இதே போல் உயிரி தொழில் நுட்பம், உணவு பதப்படுத்தும் துறை, மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், அயல் நிர்வாக பணி, அயல் நிறுவன சேவை, மருத்துவ வசதி, மருத்துவ சுற்றுலா, விவசாயம் இயந்திரமயமாதல், உரம் பூச்சி மருந்து பயன்படுத்தாமல் செய்யப்படும் இயற்கை விவசாயம், விவசாய விளை பொருட்கள் ஏற்றுமதி உட்பட பல துறைகளின் வளர்ச்சி அடுத்த ஆண்டுகளில் சிற்ப்பாக இருக்கும்.

உலக அரங்கில் 21 ம் நூற்றாண்டின் நிர்ணயிக்கும் சக்தியாக இந்தியா திகழும். இது பொருளாதாரம், தொழில் நுட்பம், மனித ஆற்றல், உற்பத்தி, முதலீடு, ஏற்றுமதி-இறக்குமதி உட்பட எல்லா துறைகளிலும் நிர்ணயிக்கும் சக்தியாக வளர்ச்சி பெறும். இதற்கு இந்த ஆண்டை விட, அடுத்த ஆண்டில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments