Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருளைக் கிழங்கு அமோக உற்பத்தி

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (13:28 IST)
உருளைக் கிழங்கு உற்பத்தி அமோகமாக இருப்பதால், விவசாயிகள் கடும் துன்பத்தில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த வருடமும் உருளைக் கிழங்கு உற்பத்தி அதிக அளவு உள்ளது. இத்துடன் இரண்டாவது வருடமாக உருளைக்கிழங்கு உற்பத்தி அமோகமாக உள்ளது.

ஆனால் உற்பத்தி அதிகரித்தும் விவசாயிகள் மகிழ்ச்சி அடையாமல், ஆழ்ந்த கவலை அடைந்துள்ளனர்.

உருளைக்கிழங்கு விலை சரிவுடன், கடந்த எட்டு நாட்களாக லாரிகளின் வேலை நிறுத்தம் உருளைக் கிழங்கு விவசாயிகளை மேலும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

2007-08 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் 130 லட்சம் டன் உருளைக் கிழங்கு உற்பத்தியானது. இந்த மாநிலத்தில் சராசரியாக 100 முதல் 105 லட்சம் டன்தான் உற்பத்தியாகும்.

இந்த வருடமும் 130 லட்சம் டன் உற்பத்தியாகும் என்று தோட்ட கலை துறை மதிப்பிட்டுள்ளது.

ஆக்ரா பிரதேசத்தில் சென்ற வருடம் உற்பத்தியான உருளைக் கிழங்கு விற்பனையாகாமல் குளிர்சாதன கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 50,000 டன் குளிர்சாதன கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் குளிர்சாதன கிடங்குளில் பாதுகாப்பாக வைத்திருந்து அழுகிப் போக ஆரம்பித்துள்ளது. இத்துடன் இதன் விலை சரிவால், விவசாயிகள் உருளைக் கிழங்கை எடுத்துக் கொள்ள மறுக்கின்றனர்.

இதன் விலை குறைந்தபட்சமாக 100 கிலோ ரூ.250 என்று கணக்கிட்டால் கூட, ரூ.12 கோடி மதிப்புள்ள உருளைக் கிழங்கு வீணாக போயுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக நஷ்டமடைந்துள்ளனர்.

இது குறித்து உத்தர பிரதேச மாநில தோட்டக் கலைத்துறை இயக்குநர் சி.பி.திவாரி கூறுகையில், உருளைக் கிழங்கு விவசாயிகளுக்கு கடும் துன்பம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக பொருளாதார நெருக்கடியாலும், இந்த மாநிலத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லாத காரணததினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசு மற்ற மாநிலங்களுக்கு உருளைக் கிழங்கை அனுப்புவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்க அனுப்ப செலவாகும் போக்குவரத்து செலவில், மானியமும் வழங்குகிறது என்று தெரிவித்தார்.

மாய்புரி மாவட்டம் சிர்சாரகன்ச் ஊரைச் சேர்ந்த ராகவேந்திர சிங், உத்தர பிரதேசத்தில் பல ஊர்களில் குளிர் சாதன கிடங்கை நடத்துகிறார்.

தற்போதைய நெருக்கடி குறித்து ராகவேந்திர சிங் கூறுகையில், சந்தையில் விலை சரிவால், சென்ற வருடம் அறுவடை செய்து குளிர்சாதன கிடங்குகளில் வைத்துள்ள உருளைக் கிழங்குகளை விவசாயிகள் எடுத்து விற்பனை செய்வதற்கு ஆர்வம் காண்பிக்கவில்லை. இவைகளை வெளியே எறிந்து அழிப்பதை தவிர எங்களுக்க வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.

தற்போது உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பமாகியுள்ளது. பிப்ரவரி மாதத்திற்கள் அறுவடையாகி முடிந்து விடும். அப்போது மேலும் விலை சரியும் என்று குளிர்பதன கிடங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் மொத்த உருளைக் கிழங்கு உற்பத்தியில், ஆக்ரா பிராந்தியத்தில் மட்டும் 30 விழுக்காடு உற்பத்தியாகிறது. விவசாயிகள் 1 பிகாவில் ( 1 பிகா என்பது 1 ஏக்கரில் மூன்றில் ஒரு பகுதி-1600 சதுர அடி) உருளைக் கிழங்கு பயிர் செய்ய ரூ.5,500 வரை செலவழிக்கின்றனர். இதில் உற்பத்தியாகியுள்ள உருளைக் கிழங்கை விற்பனை செய்தால், தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் கூட கிடைக்காது.


உத்தர பிரதேசத்தில் டிசம்பர் மாத ஆரம்பத்தில் இருந்தே உருளைக் கிழங்கு அறுவடை துவங்கிவிடும். தற்போதைய விலை குவின்டால் ரூ.130-150 என்ற அளவில் உள்ளது.

இதன் விலை சென்ற வருடம் 1 குவின்டால் ரூ.225 முதல் ரூ.250 வரை இருந்தது.

இதன் விலை சரியும் போது, மாநில அரசு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும். ஆனால் இந்த வருடம் மாநில அரசு கொள்முதல் செய்யவில்லை. இது விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது.

சென்ற வருடம் 1 குவின்டால் ரூ,225 என்ற விலையில், 1 லட்சம் டன் உருளைக் கிழங்கை கொள்முதல் செய்ய போவதாக அரசு அறிவித்தது.

ஆனால் விவசாயிகள் அரசு கொடுக்கும் விலையை விட, அதிக விலை கிடைக்கும் என்று கருதி அரசு ஏஜென்சிகளிடம் விற்பனை செய்யாமல், குளிர்பதன கிடங்குளில் இருப்பு வைத்தார்கள் என்று தோட்ட கலைத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த துறையின் துணை இயக்குநர் பி.டி.ராம் கூறுகையில், இந்த மாநிலத்தில் 16 மாவட்டங்களில் 29 ஊர்களில் உருளைக் கிழங்கு கொள்முதல் மையங்களை திறந்தோம். இவைகளில் விவசாயிகள் மொத்தம் 130 குவின்டால் மட்டுமே விற்பனை செய்தனர். இந்த வருடமும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான இறுதிகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

ஆனால் விவசாயிகள் அரசின் கருத்தை மறுக்கின்றனர். மாநில தோட்ட கலைத்துறை பெயரளவில் உருளைக் கிழங்கு கொள்முதல் செய்தது. அது கூட வியாபாரிகளிடம் இருந்த தரம் குறைந்தவைகளையே கொள்முதல் செய்தது. எங்களுக்கு தெரிந்து உருளைக் கிழங்கு பயிரிடப்படும் எந்த பகுதியிலும் அரசு கொள்முதல் மையங்கள் திறக்கப்படவில்லை.

தோட்டக்கலைத் துறையின் ஆவணங்களில் தான் உருளைக் கிழங்கு கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நாங்கள் இந்த மாதிரியான திட்டத்தை காதால் கூட கேள்விப்பட்டதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ்வின், சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது, உருளைக் கிழங்கில் இருந்து வோட்கா தயாரிக்கும் தொழிற்சாலை, சிப்ஸ் தொழிற்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.

இந்த ஆட்சி மாறி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி வந்தவுடன், முந்தைய அரசின் திட்டங்களுக்கு சமாதி கட்டப்பட்டு விட்டன என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தியாவின் மொத்த உருளைக் கிழங்கு உற்பத்தியில், 50 விழுக்காடு உத்தர பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த படியாக மேற்கு வங்கத்தில் அதிக அளவு உற்பத்தியாகிறது.

உலக அளவில் பார்க்கும் போது, உருளை கிழங்கு உற்பத்தியில் உ.பி 12வது இடத்தில் உள்ளது.

அத்துடன் இந்தியாவிலேயே அதிக குளிர்பதன கிடங்குகள் உள்ள மாநிலமும் உத்தர பிரதேசம் தான். இங்கு 1,316 குளிர்பதன கிடங்குகள் உள்ளன. இவைகளில் 92 லட்சம் டன் உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக இருப்பில் வைக்கும் வசதி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments