கோபிசெட்டிபாளையம்,சத்தியமங்கலம் பகுதியில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் ஆட்கள் பற்றாக்குறையால் விளைந்த நெற்பயிர் வயலிலேயே வீணாகும் நிலையில் உள்ளது.
webdunia photo
WD
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் பகுதியில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டது. நடவு செய்த நாள் முதல் புயல் மழை மற்றும் கடும் மூடுபனியில் சிக்கிதவித்த நெற்பயிர் தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது.
இப்பகுதியில் கடந்த காலங்களில் விவசாய கூலிக்கு வந்த ஆட்கள் தற்போது நூற்பாலை மற்றும் பல்வேறு பணிகளுக்காக திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவிட்டனர். இதன் காரணமாக விவசாய கூலிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஆட்கள் பற்றாக்குறையின் காரணமாக சத்தியமங்கலம் பகுதியில் விளைந்த நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். இயந்திரம் மூலம் அறுவடை செய்ய நினைத்தால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் சென்றதால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
நடப்பு ஆண்டில் நெற்பயிர் பயிரிடுவதில் ஒற்றை நாற்று முறை சில இடங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த முறையை பயன்படுத்த விவசாயிகள் அச்சப்பட்டனர். சில விவசாயிகள் மட்டும் இந்த புதிய முறையை கையாண்டனர். தற்போது ஒற்றை நாற்று முறையில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் ஓரளவுக்கு விளைச்சல் கொடுத்துள்ளது.
சாதாரண முறையில் பயிட்ட நெற்பயிர் நோயினால் கடுமையாக பாதித்துள்ளது. விளைந்த குறைந்த அளவு நெல்மணிகளுகளும் வீடுவந்து சேருமா அல்லது வயல்வெளியிலேயே வீணாகுமா என்ற அச்சத்தில் தற்போது விவசாயிகள் இருந்து வருகின்றனர்.