Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா 30 லட்சம் டன் பருப்பு வகைகள் இறக்குமதி!

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (19:24 IST)
இந்தியாவில் பருப்பு மற்றும் நவதானியங்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உள்நாட்டில் இதன் உற்பத்தி குறைவாக உள்ளது. இந்த பற்றாக்குறையை ஈடுகட்ட கடந்த பல ஆண்டுகளாக இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு (2007-08) மொத்தம் சுமார் 30 லட்சம் டன் பருப்பு மற்றும் பல்வேறு வகை தானியங்கள் இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கும். உள்நாட்டில் கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து, பயத்தம் பருப்பு, பட்டாணி, கடலை போன்ற அத்தியாவசிய உணவு வகைகளின் விலை அதிகரித்து வருகிறது.
இதன் விலைகள் உயராமல் தடுப்பதற்கு மத்திய அரசு எஸ்.டி.சி., எம்.எம்.டி.சி., பி.இ.சி. மற்றும் கூட்டுறவு நிறுவனமான நாஃபீட் போன்ற அரசுத் துறை நிறுவனங்கள் மூலம், அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது.

இதேபோல் பல தனியார் நிறுவனங்களும் இறக்குமதி ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளன. அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் மியான்மர், கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளன.

இது குறித்து மத்திய நுகர்வோர் நலன் செயலாளர் யஷ்வந்த பாவே கூறுகையில், இந்த நிதி ஆண்டில் இது வரை ( 2007 ஏப்ரல் முதல ்) அரசு நிறுவனங்களான எஸ்.டி.சி., எம்.எம்.டி.சி., பி.இ.சி. மற்றும் கூட்டுறவு நிறுவனமான நாஃபீட் போன்றவற்றின் மூலம் 11 லட்சம் டன் பருப்பு வகைகள் இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அத்துடன் இந்த நிறுவனங்கள் வரும் மார்ச் மாத இறுதிக்குள் மொத்தம் 15 லட்சம் டன் பருப்பு, தானிய வகைகளை இறக்குமதி செய்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதுவரை தனியார் நிறுவனங்கள் 8 லட்சம் டன் இறக்குமதி செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு பற்றாக்குறையை ஈடு செய்யவும், இவற்றின் விலை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு கடந்த வருடம் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதத்திற்குள் 15 லட்சம் டன் பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய முடிவெடுத்தது. இவற்றை இறக்குமதி செய்யும் அரசு துறை நிறுவனங்களுக்கு 15 விழுக்காடு மானியம் வழங்குவதாகவும் அறிவித்தது. அடுத்த மூன்று வருடங்களுக்கு இவற்றின் உள்நாட்டு உற்பத்தியை விட, தேவை அதிகமாக இருக்கும். இதனால் பற்றாக்குறை ஏற்படும் என அரசு கணித்தது.

இந்த நிதி ஆண்டில் (2007-08) பருப்பு வகைகள் 160 லட்சத்து 77 ஆயிரம் டன் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் தேவை 2009-10 ஆம் ஆண்டில் 180 லட்சத்து 29 ஆயிரம் டன்னாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் உற்பத்தி 136 லட்சத்து 60 ஆயிரம் டன்னாகவே இருக்கின்றது. இதனால் பற்றாக்குறையை ஈடுகட்ட இறக்குமதி செய்ய வேண்டியதுள்ளது.

பருப்பு மற்றும் தானிய வகைகளை விவசாயிகள் பயிர் செய்ய தயங்குகின்றனர். இவற்றின் உற்பத்தி செலவுக்கும், விளைச்சலில் கிடைக்கும் தானியத்தை விற்பனை செய்யும் போது கிடைக்கும் விலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டியதுள்ளது. இதனால் தான் விவசாயிகள் தானிய வகைகளை பயி்ர் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.

அத்துடன் இவை பெரும்பாலும் பாசன வசதி முறையாக இல்லாத பகுதிகளிலேயே பயிர் செய்யப்படுகிறது. பருவ மழை பொய்த்து போய் விட்டால், விவசாயிகள் கடன் சுமையில் அழுந்தி தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டுவிடுகிறது.

அத்துடன் பாசன வசதி இல்லாத பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் நகர்மயமாதலால் புதிய குடியிருப்புகளாக மாறி வருகின்றது. அரசுகளும் தொழில் மயமாக்கம், நகரங்களை விரிவு படுத்துதல் என்ற போர்வையில் விளை நிலங்கள் மற்ற பயன்பாடுகளுக்கு மாற்ற ஊக்குவித்து வருகின்றன.
பருப்பு வகைகள் உட்பட அத்தியாவசிய உணவு தானியங்கள் இறக்குமதி செய்யாமல், தேவையான அளவு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுப்பதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்கு பாசன வசதியை ஏற்படுத்துதல், விவசாயிகளுக்கு கட்டுப்படியாக கூடிய நியாயமான விலை வழங்குதல், அவர்களுக்கு தேவையான தரமான விதை, உரம் போன்ற இடு பொருட்கள் பற்றாக்குறை இல்லாமல் கிடைக்க, அதுவும் தேவையான சமயத்தில் கிடைப்பதை உறுதி படுத்த வேண்டும்.

அந்நியச் செலவாணி சம்பாதிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வருமான வரி விலக்கு, வருமான வரி சலுகை, ஏற்றுமதி வரி சலுகை, இறக்குமதி வரி சலுகை, உலகத்தரமான உள்கட்டமைப்பு வசதி, போக்குவரத்துக்கு பளபளக்கும் சாலைகள் ஏற்படுத்தி தருகின்றன.

இந்த செலவினங்களையும் சேர்த்தால், அவை இலாபமாக அல்லது வருவாயாக ஈட்டும் அந்நியச் செவாணியின் மதிப்பு மிக சொற்பமே. ஆனால் விவசாய நாடான இந்தியாவில், அதுவும் விவசாய பொருளாதாரத்தை அடித்தளமாக கொண்ட இந்தியாவில் அரசுகள் விவசாய துறையை புறக்கணித்துவிட்டு, தொழில் துறையின் வளர்ச்சிக்கு மட்டுமே சிறப்பு கவனம் செலுத்துவதால் தான், இந்தியா 57 வது குடியரசு தினத்தை கொண்டாடும் போதும் கூட, மக்களுக்கு அத்தியாவசியமான உணவு தானியங்களுக்கு, அதுவும் எல்லா வளங்களும் இருந்தும் வெளிநாடுகளை நம்பி இருக்க வேண்டியதுள்ளது என்பதுதான் வேதனையின் உச்சகட்டம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments