பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் தேமுதிக தலைவர் தேர்தல் பிரசாரத்தை நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் பி.யுவராஜை அறிமுகம் செய்து வைத்து திறந்த வேனில் நின்றபடி பிரசாரத்தை தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது, நான் பேசி ரொம்ப நாளாச்சு. நான் மற்றவர்கள் போல் எழுதிபடிப்பது இல்லை. மனதில் பட்டதை பேசுவேன். கேப்டனை பார்த்து கையாட்டக் கூடாது. ஓட்டு போடணும். ஆண்ட கட்சியும் சரி, ஆளுகின்ற கட்சியும் சரி எல்லா கட்சியும் ஏதாவது ஒன்றை சொல்கிறார்கள். ஆனால் மக்களிடையே இதுவரை எந்த மாற்றமும் வரவில்லை.
பஸ்சில் போகும்போது என் பாக்கெட்டில் இருந்த செல்போன் பக்கத்தில் இருந்தவர் பாக்கெட்டுக்கு போய்விடுகிறது. அந்த அளவிற்கு ரோடு மோசமாக இருக்கிறது.
தமிழ்நாடு மின்வெட்டால் ஏற்கனவே இருட்டாக இருக்கும்போது ஜெயலலிதா இந்தியாவை மிளிரச்செய்யப் போவதாக கூறிவருகிறார். இதனை பொதுமக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். விஜயகாந்துக்கு கோபம் வருது என்று சொல்கிறார்கள். கோபம் என்பது இயற்கை.
கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்று பழமொழி சொல்வார்கள். இன்றைக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் அங்கு போய் படுற பாட்டை பாருங்கள். அதற்காகத்தான் சொல்கிறேன். அவங்களை நம்பாதீங்க. நம்ப வைப்பது போல நடிப்பாங்க. அவர்களை நம்பி ஓட்டு போட்டீங்களே! என்ன ஆச்சு!