Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யு.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சை: பிரதமர் விளக்கமளிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2014 (18:07 IST)
யு.பி.எஸ்.சி. தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் எழுதுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் சூழலில் இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
 
யு.பி.எஸ்.சி. தேர்வு வாரியம் நடத்தும் திறனறி தேர்வு (CSAT - Preliminary aptitude test) வினாத்தாள் ஆங்கிலத்திலேயே இருக்கும் என்பதால், இந்தி மற்றும் பிற மாநில மொழிகளில் தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக அமையும் எனக் கூறி டெல்லியில் கடந்த 2 நாட்களாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நடைமுறை 2011-ல் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆங்கிலப் புலமை உள்ள மாணவர்களுக்கு இணையாக தங்களால் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள முடியவில்லை என பரவலாக குற்றச்சாற்று எழுந்துள்ளது.
 
இந்நிலையில் இப்பிரச்சினை இன்று மாநிலங்களவையில் எதிரொலித்தது. அவை கூடியவுடன், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பத்தொடங்கினர்.
 
கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு பிரதமர் அல்லது மாநிலங்களவை தலைவர், யு.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றனர். இதனால் கேள்வி நேரத்தின் போது அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய போது சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அரசு இப்பிரச்சனையை கவனத்தில் கொள்ளும் என்றார்.
 
இதேபோல், மக்களவையிலும் இவ்விவகாரத்தை ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்கள் எழுப்பினர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க அனுமதி கோரப்பட்டது. பாஜக ஆட்சியில் மாணவர்கள், பெண்கள் நலன் காக்கப்படவில்லை என எதிர்கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.
 
தொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பூஜ்ய நேரத்தின் போது, யு.பி.எஸ்.சி. தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி வழங்கினார். இதனையடுத்து உறுப்பினர்கள் அமைதி காத்தனர்.
 
இதற்கிடையில் இன்றும் தலைநகர் டெல்லியில், மாணவர்கள் பெரும் அளவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங், நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். "மாணவர்கள் மீது அக்கறை உள்ளது. இவ்விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள்கிறோம். போராட்டத்தில் இறங்கியுள்ள மாணவர்களைவிட அரசு இவ்விவகாரத்தில் அக்கறை செலுத்துகிறது. மாணவர்கள் அமைதியும், பொறுமையும் காக்க வேண்டும்" என்றார்.
 
யு.பி.எஸ்.சி தேர்வு வாரியம் திறனறி தேர்வுக்கான அனுமதி சீட்டுகளை நேற்று விநியோகித்தது. அதில் ஆகஸ்ட் 24-ல் திறனறி தேர்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தங்கள் போராட்டத்தை முடக்கும் வகையிலேயே செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த தேர்வை ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றி அமைத்ததாக மாணவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.

இந்த குற்றச்சாற்றை மறுத்து மத்திய அரசு, இது யு.பி.எஸ்.சி. வாரியத்தின் முடிவு. இதற்கும், அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளது.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

Show comments