தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி அரசியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2008 ஆம் ஆண்டு 'பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை துவங்கினார் சிரஞ்சீவி. 2009-ல் நடந்த ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு சில தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது இந்த கட்சி. அதன்பிறகு தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சிரஞ்சீவி கடந்த ஓராண்டாக அரசியல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, சிரஞ்சீவி முழுமையாக அரசியலில் இருந்து விலகி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாக ஆந்திர அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண், 'ஜன சேனா' என்ற கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.