Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் : சித்தராமய்யா பேட்டி

தமிழகத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் : சித்தராமய்யா பேட்டி

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (21:42 IST)
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீற முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
கர்நாடக அரசு காவிரியில் உடனடியாக 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு, கடந்த திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. 
 
கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், தமிழக அரசு காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகாமல், உச்சநீதிமன்றத்துக்கு வந்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வும், தமிழகத்திடம் அதே கேள்வியை எழுப்பியது. 
 
இதையடுத்து, மேற்பார்வைக் குழுவை அணுக ஒப்புக்கொண்ட தமிழகம், இடைக்கால நிவாரணமாக கர்நாடக அரசு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. 
 
மூன்று நாட்களுக்குள் மேற்பார்வைக் குழுவை தமிழகம் அணுக வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அதற்கடுத்த மூன்று நாட்களில் கர்நாடக அரசு பதில் மனுவைத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதற்கடுத்த நான்கு நாட்களில், கர்நாடக அரசு எவ்வளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்பதை மேற்பார்வைக் குழு முடிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 
 
அதற்கு முன்பு, இடைக்காலமாக தினசரி 15 ஆயிரம் கனஅடி வீதம், பத்து நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
ஆனால் கர்நாடகாவில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று ஏராளமான அமைப்புகள் போராட்டங்களில் இறங்கியது. வருகிற 9ஆம் தேதி முழு அடைப்புக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.  எனவே தமிழகத்திற்கு, கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுமா? விடாதா? என்ற பதட்டமான சூழ்நிலை நிலவியது. 
 
ஆனால், திடீர் திருப்பமாக, விமான நிலையத்தில் இதுபற்றி பேட்டியளித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீற முடியாது. அப்படி மீறினால் அது சட்டத்தை மீறிய செயலாக அமையும். எனவே தமிழகத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும். அதேநேரம், கர்நாடக விவசாயிகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் தண்ணீர் திறக்கப்படும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
 
மேலும் உச்சநீதிமன்றத்தில் நாளை மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எனவே, காவிரி நீர் விரைவில் தமிழக விவசாயிகளுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments