Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100ஆவது நாளை தொட்ட திரைப்படக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2015 (14:10 IST)
பாஜக ஆதரவாளர் என்ற ஒரே காரணத்திற்காக புனே திரைப்படக் கல்லூரி முதல்வராக கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதை எதிர்த்து அக்கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டம் 100ஆவது நாளை எட்டியுள்ளது.
 

 
நரேந்திர மோடி அரசு தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றதிலிருந்து நாடு முழுவதும் உள்ள அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையங்கள் மற்றும் கலைத்துறை, திரைப்படத்துறை மற்றும் ஊடகத் துறைகளில் ஆர்எஸ்எஸ் - பாஜக ஆதரவாளர்களை நியமித்து மதவெறி நச்சுக் கருத்துகளை அந்தந்த துறைகளின் மூலமாக பரப்பி வருகிறது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பரவலான கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மோடி அரசு, புனே நகரில் உள்ள புகழ்பெற்ற இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் தலைவராக பாஜக ஆதரவாளரான கஜேந்திர சவுகான் என்பவரை நியமித்தது. தொலைக்காட்சி சீரியல் நடிகர் என்பதற்கு மேல் அவர் எந்தவிதத் தகுதியுமற்றவர்.
 
இவரின் நியமனத்தை எதிர்த்து அக்கல்லூரி மாணவர்கள் கடந்த 4 மாதங்களாக போராடி வருகின்றனர். இதில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. போராட்டம் தொடங்கி 4 மாதங்களாகியும் பாஜக அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது.
 
போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பாஜக அரசின் அலட்சியப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தும் நாடு முழுவதும் உள்ளதேசிய விருது பெற்ற நடிகர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், பொருளாதார நிபுணர்கள், புகைப்படக் கலைஞர்கள், வரலாற்று நிபுணர்கள் மற்றும் இடதுசாரிக் கலைஞர்கள் ஆகியோர் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளனர்.
 
அந்த கடிதத்தில் ஆசிஸ் அகமது, பிரபாத் பட்நாயக், டி.என்.ஜா, அர்ச்சனா பிரசாத், சி.பி.சந்திர சேகர், கீதாகபூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
 
அந்த கடிதத்தில் ”திரைப்படக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் 4 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாகி வருகிறது. இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்களாகிய தேசிய விருது பெற்ற கலைத்துறை ஆளுமைகள் மற்றும் கலைஞர்கள் ஆகியோருடன் இணைந்து போராடும் மாணவர்களுக்கு எங்களது ஆதரவையும் தோழமையையும் அளிக்கிறோம்.
 
இரண்டாம் தர அரசியல் நடத்துபவர்களை பதவியில் அமர்த்துவதற்கான ஒரு இடமாக தேசிய நிறுவனங்கள் மாற்றப்பட்டு வருகின்றன என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஆளும் கட்சிக்கு பிரச்சாரகர் என்ற தகுதியைத் தவிர வேறு ஒன்றும் இல்லாத தனி நபர்களை இது போன்ற நிறுவனங்களுக்கு சிபாரிசு செய்யும் போக்கு புறந்தள்ள முடியாதபடி மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments