நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி என தொடரப்பட்ட வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த தடை விதிக்கவும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. அப்போது பீகார் மற்றும் ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்த நிலையில் அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே தேர்வு முடிவுகள் வெளியானபோது, நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில், 1500 பேருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை அடுத்து நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மாணவர் அமைப்பினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அசானுதீன் அமானுல்லா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, மருத்துவ கவுன்சிலிங் நடத்த இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இந்த வழக்கில், பதில் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.