கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு தாவியவர் நவ்ஜோத் சிங் சித்து.
பிஜேபி கட்சியை விட்டு அவர் வெளியேறியதற்கான காரணத்தையும், ஆம் ஆத்மியில் சேர மறுத்ததையும், பின் ஆவாஸ்-இ-பஞ்சாப் என்ற இயக்கத்தை உருவாக்கியதற்கான காரணத்தையும் பத்திரிகையாளர்கள் முன்பு இன்று நவ்ஜோத் சிங் சித்து கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “வரும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், அவர்கள் என்னை, பிரகாஷ் சிங் பாதலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சொன்னார்கள், அவரின் ஆட்சி எனக்கு பிடிக்கவில்லை, அதனால் நான் பிரச்சாரம் செய்ய முடியாது என்றேன். அதனால் என்னை பங்சாபிற்கு போக கூடாது என்று கட்டளையிட்டார்கள். இது எனக்கு வருத்தத்தை கொடுத்தது. அதனால் தான் நான், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து பிஜேபி கட்சியில் இருந்து வெளியேறினேன்.
பின் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினேன், அவர், வரும் சட்டமன்ற தேர்தலில், என்னை வெறும் காட்சி பொருள் போல் பயன்படுத்திவிட்டு, எந்த பதவியும் தர மாட்டார் என்று தோன்றியது, மேலும், அவர் நடத்தும் ஆட்சி ஆங்கிலேயர் நம்மை ஆண்டது போல் ஒரு தோற்றத்தை கொடுத்தது. அதனால் தான் ஆம் ஆத்மியிலும் சேரவில்லை.
நீண்ட யோசனைக்கு பிறகு, பஞ்சாப் மாநிலத்தில் என் கருத்தை ஒத்த கருத்துடைவர்களை இணைத்து, ஆவாஸ்-இ-பஞ்சாப் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளேன். இது பஞ்சாப் மாநிலத்தின் மறுமலர்ச்சிக்காக பாடுப்படும்.” என்றார்.