நுழைவுத் தேர்வு ரத்து என்பதைக் காப்பாற்ற வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
நுழைவுத் தேர்வு ரத்து என்பதைக் காப்பாற்ற வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வு ரத்து என்பதைக் காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி. போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வினை ரத்து செய்யக்கோரி பல்வேறு மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி அன்று நுழைவுத்தேர்வுக்குத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன.
இந்தச் சீராய்வு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், நுழைவுத்தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது.
மேலும், இந்த ஆண்டே நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக ஆட்சி காலத்திலேயே நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டு, அதனை ஒட்டி கடந்த பல ஆண்டுகளாகவே நுழைவுத் தேர்வு இல்லாமலேயே என்ஜினீயரிங் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்திருக்கிறது.
திமுக ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டத்தின் காரணமாக கிராமப்புற மாணவ மாணவியரும், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ - மாணவியரும் மிகப் பெரும் அளவுக்குப் பலன் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தமிழக மாணவ - மாணவியரிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரையிலாவது நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனடியாகப் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து அனுமதி பெற்றுத் தருவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இங்கே உள்ள தமிழக அரசும், மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான அழுத்தம் தரவேண்டும் என்ற நோக்கில், மூத்த அமைச்சர் ஒருவரையும், தமிழக அரசின் தலைமைச் செயலாளரையும், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளரையும் மத்திய அரசுடன் நேரில் விவாதித்து தமிழக நிலைமைகளைத் தெளிவுபடுத்த அனுப்பிவைக்க வேண்டும் என்றும், மத்திய அரசும் மாநில அரசும் தமிழகத்தில் "சமூக நீதி" அடிப்படையிலான "நுழைவுத் தேர்வு ரத்து" என்பதைக் காப்பாற்ற வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.