Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அவசர சட்டங்களை சட்டமாக்குவதே அரசின் முக்கிய நோக்கம்: வெங்கையா நாயுடு

Webdunia
திங்கள், 2 மார்ச் 2015 (08:31 IST)
மத்திய அரசு, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற உறுதியாக இருப்பதாகவும், அவசர சட்டங்களை சட்டமாக்குவதே அரசின் முக்கிய நோக்கம் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
 
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிகிறது.
 
இது குறித்து வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. எனினும் இது குறித்து அர்த்தமுள்ள பரிந்துரைகளை எதிர்க்கட்சிகள் கூறினால், கண்டிப்பாக அவை பரிசீலிக்கப்படும்.
 
இந்த சட்டம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் விவசாயிகளின் நலனுக்கு ஊக்க சக்தியாக விளங்கும். அதனால் இந்த சட்டம் தொடர்பான அர்த்தமுள்ள பரிந்துரைகள் மீது விவாதம் நடத்த அரசு தயார். எனவே நாட்டு நலனை அவர்கள் கண்டிப்பாக நினைத்துப்பார்க்க வேண்டும்.
 
இது தொடர்பாக பல்வேறு கட்சிகளுடன் மத்திய மந்திரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நானும் ஆந்திரா, தெலங்கானா மாநில முதலமைச்சர்களை சந்தித்து இந்த சட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர்களும் இதற்கு ஆதரவளிப்பதாக கூறினர்.
 
மேலும் பிற அரசியல் கட்சிகளுடனும் நான் பேசியுள்ளேன். எனவே இந்த சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் சரியாக சிந்தித்து நாட்டு நலன் கருதி நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
 
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திங்கட்கிழமை முதல், நிலம் கையகப்படுத்தும் சட்டம் உள்பட 6 அவசர சட்டங்கள் எடுத்துக்கொள்ளப்படும். கூட்டத்தொடரின் 2 ஆவது வார அலுவல்களுக்காக இரு அவைகளின் அலுவல் ஆய்வுக்குழுவும் கூடி, பல்வேறு மசோதாக்களுக்காக நேரம் ஒதுக்கியுள்ளது.
 
ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் மற்றும் பொது பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்களிடையே விவாதம் நடத்தப்படும். எனினும் இந்த அவசர சட்டங்களை சட்டமாக்குவதே அரசின் முக்கிய நோக்கம் ஆகும்.
 
துரதிர்ஷ்டவசமாக சில அரசியல் காரணங்களுக்காக வளர்ச்சி திட்டங்கள் தடைபட்டு உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக அரசியல் செய்யக்கூடாது. இதுவே தற்போதைய தேவை.
 
மக்கள் தங்கள் தேவையை நிறைவேற்றுவதற்கு உதவி செய்வதற்காக, ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

Show comments