மனிதர்களில் ஜாதி பார்த்ததுப் போய் இப்போது விலங்குகளுக்கும் ஜாதிப் பார்க்கும் அவலம் உண்டாகியுள்ளது.
இந்தியாவின் சாபக்கேடுகளில் ஒன்றாக சாதி இருந்து வருகிறது. 2000 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்டிப்படைக்கும் சாதி எனும் நோய் இன்னமும் ஒழிந்தபாடில்லை. இந்தியாவிலேயே முற்போக்கு மாநிலம் என்று சொல்லிக்கொள்ளும் கேரளாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
சாதி மனநிலை இன்றும் எப்படி தொடர்ந்து வருகிறது என்பதற்கு சாட்சியாக கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தங்கள் வீட்டில் வளர்த்த பூனை ஒன்று இறந்ததை அடுத்து அதற்கு முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக செய்தித் தாளில் ஒருக் குடும்பம் விளம்பரம் கொடுத்துள்ளது.
அடடா பூனை மேல் இவ்வளவுப் பாசமா என யோசிக்கும் வேளையில் தங்கள் சாதி மனநிலையையும் சேர்த்து வெளிப்படுத்தி அனைவரையும் முகம் சுளிக்கவைத்துள்ளனர். வளர்ப்புப் பூனையான சுஞ்சுவின் பெயருக்குப் பின்னால் தங்கள் ஜாதியான நாயரையும் சேர்த்து விளம்பரம் செய்துள்ளனர். இதனால் விலங்குகளுக்குள்ளும் ஜாதி பார்க்கும் அவலம் நேர்ந்துள்ளதை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.