Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக அனைத்து கட்சி குழு 30 ஆம் தேதி பிரதமரை சந்திக்கிறது: சித்தராமையா தகவல்

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (11:07 IST)
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அனைத்து கட்சி குழு, இம்மாதம் 30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
 
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
 
இதைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் பிரதமரை சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.
 
அதற்கு பதில் நடவடிக்கையாக கர்நாடக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் சித்தராமையா கர்நாடகம் சார்பில் அனைத்து கட்சி குழு பிரதமரை சந்திக்கும் என்று அறிவித்து இருந்தார். 
 
அதன்படி கடந்த 22 ஆம் தேதி கர்நாடக அனைத்து கட்சி குழு பிரதமரை சந்திக்க இருந்தது. ஆனால் பிரதமர் நேரம் ஒதுக்காததால் பிரதமரை சந்திப்பது தள்ளி வைக்கப்பட்டது.
 
இந்நிலையில், மேகதாது விவகாரம் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று தமிழக எதிர்கட்சியினர், விஜயகாந்த் தலைமையில் பிரதமரை சந்தித்து பேசினர்.
 
இதைத் தொடர்ந்து, கர்நாடக அனைத்து கட்சி குழு 30 ஆம் தேதி வியாழக்கிழமை பிரதமரை சந்திக்க இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
காவிரியில் அணை கட்டும் நமது முடிவுக்கு எதிராக பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்து இருப்பது எங்களது கவனத்துக்கு வந்துள்ளது. 
 
பிரதமரை சந்திக்க நாங்கள் நேரம் ஒதுக்குமாறு கேட்டு இருந்தோம். வருகிற 30 ஆம் தேதி பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்று கர்நாடக அனைத்து கட்சி குழுவை நாங்கள் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்கிறோம்.
 
உண்மை நிலவரங்களை எடுத்துச் சொல்லி, காவிரியில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்போம். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

Show comments