கலாபவன் மணி மரணம் குறித்து தொடர்ந்து மர்மம் நீடித்து வருவதால் விசாரணையை சிபிஐக்கு மாற்றி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகரும் பாடகருமான கலாபவன் மணி அவர்கள் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி உடல் நலக் குறைவால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தடயவியல் ஆய்வில் அவரது உடலில் நச்சுத்தன்மை கொண்ட பொருள் இருந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று புகார் அளித்தார். அதன்பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரது மரணம் குறித்து பல கோணங்களில் விசாரணை நடைப்பெற்று வந்தது. இருப்பினும் மரணம் குறித்து எந்த தகவலும் இல்லை.
கலாபவன் மணி மரணம் குறித்த விசாரணையில் திருப்தி அடையாத அவரது குடும்பத்தினர் அண்மையில் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை என்றும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தர விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இன்று கேரளா அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கேரளா காவல்துறை தலைவர் லோக்நாத் பெகெரா சிபிஐக்கு பரிந்துரைத்து கடிதம் அனுப்பினார்.