Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ரூ.2500 கோடி கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட பாகிஸ்தான் உளவுத்துறை

Webdunia
ஞாயிறு, 21 செப்டம்பர் 2014 (18:23 IST)
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் உளவுத்துறை கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.2,500 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ள தகவல் அம்பலமாகி உள்ளது.
 
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ பல்வேறு வழிகளில் சதி திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக கோடிக்கணக்கில் கள்ளநோட்டுகளை அச்சடித்து இந்தியாவில் புழக்கத்தில் விட்டுள்ளது என இந்திய உளவுத்துறையினர் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
 
தற்போது நேபாள நாட்டின் காட்மாண்டு நகரில் நடைபெற்று வரும் சார்க் மாநாட்டில் மிகவும் முக்கியமான பிரச்சனையான இந்த கள்ளநோட்டு விவகாரத்தை இந்தியா எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஐஎஸ்ஐ உளவுத்துறையின் உதவியுடன் நேபாளம், பங்களாதேஷ் எல்லைகள் வழியாக இந்தியாவுக்குள் ரூ.2,500 கோடி வரை கள்ள நோட்டுகளை கொண்டு வந்துள்ளதாக இந்திய உளவுத்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள், விலை உயர்ந்த காகிதங்கள், வாட்டர் மார்க் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, அசல் நோட்டுகளைப் போலவே தோற்றமளிக்கக் கூடிய கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். கைதேர்ந்த நிபுணர்கள் மட்டுமே அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய அளவுக்கு இந்த கள்ளநோட்டுக்கள் உள்ளன என்று  உளவுத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
 
சமீபத்தில் தேசிய புலனாய்வு நிறுவனம் நடத்திய விசாரணையில் கள்ளநோட்டு புழக்கத்தை அன்னிய செலாவணி பரிமாற்ற வர்த்தகம் மேற்கொள்ளும் அளவுக்கு நடத்தியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து 100க்கும் மேற்பட்ட கள்ளநோட்டு கும்பல் பிடிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் சுமார் 60 சதவீதம் வழக்குகளில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு நேரடி தொடர்பு உள்ளது.
 
ஐஎஸ்ஐ அச்சடித்து அனுப்பும் கள்ளநோட்டுகளை, புரோக்கர்களின் உதவியுடன் ஏடிஎம் இயந்திரங்களிலும் சேர்த்து மக்களிடம் புழக்கத்தில் விடுவதும் நடந்துள்ளது என இந்திய உளவுத்துறை தெரிவிக்கிறது. தடயவியல் நிபுணர்கள் கூறுகையில், அறிவியல் சோதனைகளிலும், தடயவியல் சோதனைகளிலும் இவை அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டவைதான் என்பதும் உறுதியாகியுள்ளது என்றனர்.

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

Show comments