Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.6,000 கோடி மதிப்புடைய ஹெலிகாப்டர் ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்தது பாதுகாப்புத் துறை அமைச்சகம்

Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2014 (07:38 IST)
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான, ரூ.6,000 கோடி மதிப்பீட்டிலான 197 இலகுரக ஹெலிகாப்டர்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை பாதுகாப்புத் துறை அமைச்சகம் அதிரடியாக ரத்து செய்தது.

இந்திய ராணுவம், விமானப் படையின் பயன்பாட்டிற்காக 197 இலகுரக ஹெலிகாப்டர்களைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.

உயரமான சிகரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ராணுவ வீரர்களையும், அவர்களின் உபகரணங்களையும் கொண்டு செல்வதற்கு இந்த வகையான ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும்.

இவற்றை ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சீட்டா, சேத்தக் போன்ற பழைமையான ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாகப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது.

இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டபோதே, ஊழல் புகார் காரணமாக இத்தாலிய நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லாண்ட், இந்தப் போட்டியில் இருந்து விலக்கிவைக்கப்பட்டது. அதுகுறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய, ரஷிய நிறுவனங்கள் மட்டும் போட்டியில் இருந்தன. சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதால், இந்த ஒப்பந்தப்புள்ளியை மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், ராணுவக் கொள்முதல் கவுன்சில் கூட்டம் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில், 197 இலகுரக ஹெலிகாப்டர்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளில் இந்த ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

மேலும், பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு தளவாடங்கள் வாங்குவதற்கு ரூ. 17,500 கோடி திட்டங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதில், 118 அர்ஜுன் எம்.கே-2 ரக பீரங்கிகள் வாங்குவதற்கு ரூ.6,600 கோடியிலான திட்டமும், நீர்மூழ்கிக் கப்பல்களின் மேம்பாட்டுக்கு ரூ.4,800 கோடியிலான திட்டமும் அடங்கும்.

அத்துடன் 40 அர்ஜுன் பீரங்கிகளின் அடித்தளத்தை வாங்க ரூ.820 கோடியிலான திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 16 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அமெரிக்காவிடம் இருந்து ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் 15 'சினூக்', 22 'அபாச்சி' ரக போர் ஹெலிகாப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Show comments