மனிதர்கள் செய்யும் எத்தனையோ வேலைகள் அவர்களது உடல்நலனைக் கெடுக்கும் விதத்தில் அமைந்துவிடுகிறது.
அவ்வளவு ஏன். மனிதர்கள் செய்யும் எல்லா வேலைகளிலுமே, அவர்களது உடல்நிலையை பாதிக்கக் கூடிய விஷயங்கள் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.
உட்கார்ந்து கொண்டே கணக்கு எழுதுபவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு, எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படுகிறது.
அப்படியிருக்கும் போது எத்தனையோ ஆபத்தான மற்றும் அபாயகரமான வேலைகள் நாட்டில் உள்ளன.
பருத்தி ஆலைகள், ரசாயனத் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் முதல் மருத்துவர்கள் வரை இந்த பட்டியல் தொடரும்.
இதில் கப்பல் உடைக்கும் தொழிலாளர்களைப் பற்றியதுதான் இந்த கட்டுரை.
அதாவது அதர பழசான சைக்கிளை காய்லாங்கடையில் போடுவோம். அதுபோல் பழைய கப்பல்களை எங்கே போடுவார்கள்.
webdunia photo
FILE
பழைய கப்பல்களை உடைத்துப் பிரித்துவிடுவார்கள். இந்த தொழிலுக்கு பெயர் போன நாடு எது தெரியுமா? இந்தியாதான்.
இப்படி உலகில் உடைக்கப்படும் பழைய கப்பல்களில் பாதியளவிற்கு இந்தியாவில் தான் உடைக்கப்படுகின்றன.
குஜராத் மாநிலத்தில் உள்ள சிறிய கடற்கரையோட நகரமான அலாங் என்ற பகுதியில்தான் இந்த கப்பல் உடைக்கும் பணி நடக்கிறது.
உடைக்கப்பட வேண்டிய கப்பல்கள் கரைக்குக் கொண்டு வரப்படுகின்றன. அவற்றில் இருக்கும் பயன்படுத்தக் கூடிய பொருட்களான மேஜை, நாற்காலிகள், சமையலறை சாதனங்கள், இயற்திரங்கள் போன்றவை அப்புறப்படுத்தப்படுகின்றன.
இந்த பொருட்களை விற்பனை செய்வதற்காகவே அலாங்-கில் பல கடைகள் உள்ளன. அங்கு இந்த பொருட்கள் விற்பனைக்குச் சென்றுவிடும்.
பின்னர் கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும் மர, இரும்புச் சாமான்கள் கழற்றப்பட்டு அவையும் விற்பனைக்குச் சென்றுவிடும்.
அப்புறம்தான் கப்பலை உடைக்கும் பெரும் பணி துவங்குகிறது. கப்பல் உடைப்பதில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் தான் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள். உலோகங்களை அறுக்கும் இயந்திரங்களைக் கொண்டு கப்பல் உடைக்கப்படுகிறது.
மிகவும் அபாயகரமானதான கப்பல் உடைக்கும் பணியின்போது தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல், கப்பல் கட்டுமானத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஆஸ்பெஸ்டாஸ் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப் பொருளால் கப்ப உடைப்பவர்களுக்கு பெரும் தீங்கு ஏற்படுகிறது.
ஆஸ்பெஸ்டாஸை அறுக்கும் போது அதில் இருந்து வெளிவரும் தூசுப் படலத்தை சுவாசிப்பதால் நுரையீரல்கள் பாதிக்கப்படுகின்றன.
கப்பல் உடைக்கும் தொழிலில் ஈடுபடும் பணியாளர்கள் பெரும்பாலானோர் நுரையீரல் புற்று நோய்க்கு ஆளாகின்றனர். சில கப்பல்களில் இருக்கும் கதிரியக்கப் பொருட்களாலும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றன.
அழிப்பது எளிது, ஒன்றை உருவாக்குவதுதான் கடினம் என்கிறோம்... இதைப் பார்த்தால் அழிப்பதும் சற்று கடினம் தான் என்று தோன்றுகிறதல்லவா குழந்தைகளே...