Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்றிக் காய்ச்சல் ‌விவர‌ங்க‌ள்

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2009 (17:25 IST)
சாதாரண காய்ச்சலுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் எப்படி வித்தியாசத்தை உணர்வது என்று பலருக்கும் குழப்பம்.

சாதாரண காய்ச்சலைப் போன்றே அனைத்து விஷயங்களும் பன்றிக் காய்ச்சலுக்கும் இருக்கும். காய்ச்சல் வந்ததும் உடல் சோர்வு, சளி பிடிப்பது என பன்றிக் காய்ச்சலுக்கும் அப்படித்தான் இருக்கும்.

பன்றிக் காய்ச்சல் பாதித்தவர்கள் பலருக்கு மூக்கு ஒழுகுதல், கழுத்தில் நெறி கட்டுதல், வாந்தி, பேதி போன்றவை ஏற்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளில் இரண்டுக்கு மேற்பட்டவையாக இருந்தால் அது பன்றிக் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம்.

சளி பிடித்தால் ஏற்படும் பிரச்சினைகள், பன்றிக் காய்ச்சலில் விரைவாக ஏற்படும். பன்றிக் காய்ச்சல் பாதித்தவர்கள் மிகவும் சோர்வாக உணர்வார்கள். சுமார் 2, 3 வாரங்கள் காய்ச்சல் அடித்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி உணர்வார்கள்.

தசை வலி ஏற்படும். அவ்வப்போது உடல் சூடு அதிகமாகும், சில சமயம் குறையும்.

ஆனால் இந்த அறிகுறிகளை வைத்தே ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பரவி இருக்கும் என்பதை உறுதிபடுத்த முடியாது.

மருத்துவமனைக்குச் சென்று முழுப் பரிசோதனை செய்த பின்னரே பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்படும். ஒவ்வொரு மாநில சுகாதாரத் துறையும் இந்த பரிசோதனைகளை செய்து வருகின்றன.

உடனடியாக செய்ய வேண்டியது என்ன

நீங்கள் கடந்த 10 நாட்களுக்குள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருந்தாலோ, பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்தியுங்கள்.

மருத்துவம் என்ன

பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியவர்களுக்கு டமி ·ப்ளூ மற்றும் ரிலின்ஸா என்ற மருந்துகள் அளிக்கப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் பரவி 48 மணி நேரத்திற்குள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது.

பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டவுடனேயே இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் ஒன்று அல்லது இரண்டு நாட்களல் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த மருந்து ஒருவருக்கு 5 முதல் 7 நாட்கள் வரை கொடுக்கலாம்.

டமி ஃப்ளு மாத்திரைகள் ஒரு வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கலாம்.

ரிலின்ஸா என்ற மாத்திரையை 7 வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம். இதனை தடுப்பு மருந்தாக 5 வயது ஆனவர்கள் மற்றும் 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம்.

இந்த மருந்துகள் அனைத்தும் மருத்துவர்களால் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும்.

பக்க விளைவுகள்

இந்த மருந்துகளை பயன்படுத்துவதால் உடல் தளர்வு, கவனச் சிதறல், வாந்தி போன்றவை ஏற்படலாம். ஆனால் ரிலின்ஸா மருந்தை மூச்சு விடுவதில் பிரச்சினை இருக்கும் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கக் கூடாது. மருத்துவரிடம் நமக்கிருக்கும் உடற்பிரச்சினைகளை முன்கூட்டியே தெரிவிப்பது நல்லது.

சுய மருத்துவம்

சுயமாக மருந்தகத்திற்குச் சென்று ஆன்டி பயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். சாதாரண பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் சளி, காய்ச்சலுக்கு வேண்டுமானால் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயனளிக்கும். ஆனால் இதுபோன்ற தொற்று நோய்களுக்கு ஆன்டி பயாடிக் பயனிக்காது. நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

தடுப்பு மருந்து

இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பன்றிக் காய்ச்சலுக்கான மருந்துகள் இதுவரை இல்லை. அதற்கான சோதனைகள் துரிதமாக நடந்து வருகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட உடன் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் செய்யப்படும்.

அதிக பாதிப்பு யாருக்கு

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு மட்டுமே பன்றிக் காய்ச்சல் எளிதாக பரவ வாய்ப்புள்ளது.

மேலும்,

நுரையீரல் நோய், ஆஸ்துமாவிற்கு கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள்.
இதய நோய், கல்லீரல் நோய், ஈரல் நோய் உடையவர்கள்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள்
கர்ப்பிணிப் பெண்கள்
65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் பன்றிக் காய்ச்சலால் அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளவர்களாவர்.

எப்படி பரவுகிறது

பன்றிக் காய்ச்சல் கிருமி எளிதாக தொற்றும் இயல்புடைது. ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவுகிறது. பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியவர்கள் இரும்பும் போது அல்லது தும்மும் போது அவர்கள் வாய் அல்லது மூக்கில் இருந்து வெளியேறும் சிறு துளியின் வழியாகவே இந்த கிருமிகள் வெளியே வருகின்றன.

ஒருவர் தும்மும் அல்லது இரும்பும் போது கையை வைத்து மறைக்காமல் இருந்தால் காற்று வழியாக அந்த கிருமிகள் அருகில் இருப்பவரை தாக்குகிறது. அல்லது அவர் கையை வைத்து வாயை மூடிக் கொண்டால் அவரது கையில் அந்த கிருமிகள் அமர்ந்து கொண்டு, அவர் அடுத்ததாக தொடும் பொருட்களில் எல்லாம் பரவுகிறது. அந்த பொருட்களை அடுத்ததாக யார் தொட்டாலும் அவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது.

தடுக்க முடியுமா

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க இன்புயன்சா ஆன்டிவைரல் மருந்து பயன்படும். இந்த மருந்தை பன்றிக் காய்ச்சல் பாதிக்காதவர்கள் பயன்படுத்தலாம். ஆனால், இந்த மருந்தை பயன்படுத்தினாலும், நம் பக்கத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்தவர் இருக்கும்போது இந்த மருந்து 70 முதல் 90 விழுக்காடு அளவிற்கு மட்டுமே பயனளிக்கும்.

பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க

இரும்பும் போதும், தும்பும் போதும் பயன்படுத்தியதும் அப்புறுப்படுத்தும் காகிதத்தைக் கொண்டு வாயையும், மூக்கையும் மூடவும்.

பின்னர் உடனடியாக இந்த காகிதத்தை கவனமாக அப்புறப்படுத்தவும்.

ஒவ்வொரு முறையும் உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவவும்.

அவ்வப்போது ரிமோட், கதவு பிடிகள் போன்ற அனைவரும் உபயோகிக்கும் பொருட்களை கிருமி நாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தவும்.

காய்ச்சல் அல்லது சளி இருக்கும் போது மற்றவர்களுடன் பழக வேண்டாம். பள்ளிக்கோ, பணிக்கோ செல்லாமல் தவிர்ப்பதும் நல்லது.

அடிக்கடி சுத்தமான நீரை பருகுங்கள். உடலில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

வெளியில் அதிக கூட்டம் இருக்கும் இடத்திற்குச் செல்லும் போது முகக் கவசம் அணிவது நல்லது.

முகக் கவசம் பலனளிக்குமா

முகக் கவசம் முழுதாக நம்மை பன்றிக் காய்ச்சலில் இருந்து பாதுகாக்காது. ஆனால் வாய் மற்றும் மூக்கு வழியாக வெளியிடங்களில் இருந்து கிருமி தொற்றுவதை தவிர்க்கலாம். அவ்வளவுதான்.

வீடுகளில் செய்ய வேண்டியவை

சோப்பும், தண்ணீரும் 30 விழுக்காடு பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும். அவ்வப்போது கைகளை கழுவுங்கள். வெளியில் செல்லும் போது உங்கள் கண்கள், மூக்கு, வாய்ப் பகுதியைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

சத்தான உணவுகளை உண்ண வேண்டும். கர்ப்பிணிப் பெண்களும், மருத்துவமனையில் பணிபுரிபவர்களும் அதிக சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

பசலைக் கீரை, உருளைக் கிழங்கு, பீன்ஸ், தானியங்கள், மாமிசம், பால், மீன் போன்றவற்றில் பி12 விட்டமின் உள்ளது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டியவை

உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை பள்ளிக்கு அனுமதிக்க வேண்டாம்.

குழந்தைகளை அவ்வப்போது கைகளைக் கழுவ வைக்க வேண்டும்.

ஒருவரை ஒருவர் நெருக்கமாக அமர வைக்கக் கூடாது.

பயன்படுத்தி தூக்கி எறியும் காகிதங்களை வகுப்புகளில் அதிகமாக விநியோகிக்க வேண்டும்.

பயணம் பாதுகாப்பானதா

பயணம் செய்வதை முடிந்த வரையில் தவிர்க்கவும். நீங்கள் செல்லும் நாடு அல்லது மாநிலம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பன்றிக் காய்ச்சல் பீதியை ஏற்படுத்துவதை விட, எச்சரிக்கையை ஏற்படுத்துவதுதான் சிறந்தது.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

Show comments