பெண்ணின் கர்ப்பப்பைக்கு வெளியே வழக்கத்திற்கு மாறாக பெருங்குடலை ஒட்டி வளர்ந்த குழந்தையை சென்னை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்தெடுத்து சாதனை படைத்துள்ளனர். தற்போது குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர்.
இதுபற்றி சென்னை கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் வசந்தா சுப்பையா செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்ப்பப்பையில் குழந்தை உருவாகாமல், கருக்குழாவ்யில் உருவானால் அது அதிகபட்சம் 12 வாரங்கள் வரை குழாயில் தங்கும். அதன்பிறகு கருக்குழாய் வெடித்து குழந்தையும் இறக்கும் என்றார்.
இந்த அறுவை சிகிச்சை பற்றிய விவரம்:
செய்யாறு அருகே பெருமாத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளியான முனுசாமி என்பவரின் மனைவி மீனா (வயது 37). இவர்களுக்கு சந்திரிகா (14) என்ற மகள் இருக்கிறாள்.
மீனா மீண்டும் கர்ப்பமானார். கடந்த சில மாதங்களாக அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. செய்யாறில் அவருக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்த மருத்துவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மீனாவுக்கு கருக்குழாயில் குழந்தை உருவாகி அது 12-வது வாரத்தில் வெடித்துள்ளது. வெடிக்கும்போது குழந்தை வளரக்கூடிய பனிக்குடம் பை எந்த சேதாரமும் இல்லாமல் வெளியே வந்து பெருங்குடலுடன் ஒட்டிக்கொண்டு உள்ளது. மற்றொரு பகுதி கருக்குழாயுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
பெருங்குடலுக்கு வரக்கூடிய ரத்தக்குழாயில் இருந்து குழந்தைக்கு தேவையான அனைத்தும் கிடைத்துள்ளது. அதன் மூலம் குழந்தை வளர்ந்துள்ளது.
இப்படி வளரும்போது சரியாக குழந்தை வளராது. அப்படியே வளர்ந்தாலும் பனிக்குடத்தில் உள்ள நீர் வற்றிப்போய் விடும். இதனால் குழந்தை இறந்து விடும். ஆனால் மீனாவின் வயிற்றில் வளர்ந்த குழந்தை அதிசயமாக ஆரோக்கியமாக வளர்ந்திருப்பதை சென்னையில் கண்டறிந்தோம்.
டாக்டர் சரளா, கலீல் ரகுமான் தலைமையிலான குழுவினர் மீனாவிற்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர்.
இதேபோன்ற முறையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்திருப்பது இந்தியாவில் 2-வது குழந்தையாகும் எனறார் டாக்டர் வசந்தா.