இந்தியாவின் பாரம்பரிய ஓவியங்களும், கல் சிற்பங்களுக்கும், சிலைகளும் எடுத்துக்காட்டாக இன்றளவிலும் நின்று கொண்டிருப்பது அஜந்தா ஓவியங்களாகும்.
7 ஆம் நூற்றாண்டில் புத்த மத போதனைகளைத் தழுவி 28 குகைகளைக் குடைந்து வரையப்பட்டுள்ள அஜந்தா குகை ஓவியங்கள் நமது நாட்டின் பெருமைமிக்க பாரம்பரிய சின்னமாகும்.
பல நூற்றாண்டுகளாக இந்த அஜந்தா குகை ஓவியங்கள் மனிதர்களின் பார்வையில் படாமல் இருந்தன. 1819ஆம் ஆண்டில் அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் வாயிலாகத்தான் இந்த புதையல் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதுதான் பிரிட்டிஷ் படையினர் நமது நாட்டிற்குள் நுழைந்திருந்தனர்.
தற்போது உலகறிந்த இடமாக இருக்கும் அஜந்தாவை யுனெஸ்கோ அமைப்பும் உலக புராதான சின்னமாக அறிவித்துள்ளது.
கலைகளை ரசிக்கவும், ஓவியத்தையும், சிற்பங்களையும் கண்டு கண்களுக்கு விருந்தளிக்கவும் விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்கும் முதல் இடம் அஜந்தாவாகத்தான் இருக்கும்.
மும்பையின் வடகிழக்குப் பக்கத்தில் ஹெளரங்காபாத்திற்கு அருகே அமைந்துள்ள அஜந்தா மலைப் பகுதியை ஒட்டி ஓடும் வகோரா ஆற்றை குதிரை லாயம் போன்று ஒரு பெரிய கல் தாங்கியிருப்பது அங்கு காணக்கூடிய அதிசயங்களுக்கெல்லாம் மற்றொரு அதிசயமாகும்.
webdunia photo
WD
அஜந்தா போக வேண்டும் என்று முடிவு செய்து விட்டவர்கள் மறக்காமல் கொண்டு போக வேண்டிய ஒரு பொருள் டார்ச் லைட். ஏன் தெரியுமா? இந்த டார்ச் லைட், இருண்ட குகைக்குள் இருக்கும் அழகிய சித்திரங்களையும், சிற்பங்களையும் துள்ளியமாகக் காண உதவும்.
மேலும், நாம் தனியாக செல்வதைவிட சுற்றுலா வழிகாட்டி ஒருவரை உடன் அழைத்துச் செல்வது...
( அங்கு ஏராளமானவர்கள் இருப்பார்கள்) சிறந்தது. ஏனெனில் அவ்வளவு தூரம் சென்றுவிட்டு ஏதாவது ஒன்றை பார்க்காமல் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.
webdunia photo
WD
ஒவ்வொரு ஓவியத்தின் அழகையும், அதற்குள் ஒளிந்திருக்கும் கலை வேலைபாடுகளையும் ரசிக்க பல மணி நேரங்கள் ஆகும். குகை ஓவியங்களில் உள்ள பல்வேறு நுணுக்களை நாம் தெரிந்து கொள்ள சுற்றுலா வழிகாட்டி நமக்கு மிகுந்த உறுதுணையாக இருப்பார்.
முதல் குகையில் இருந்து உங்களது பயணத்தைத் துவக்குங்கள். அதில் மிக அருமையான ஓவியங்களும், பத்மபானி, வஜ்ரபானி ஆகிய புத்த துறவிகளின் அழகிய சிலைகள் இடம்பெற்றிருக்கும்.
2 வது குகையின் மேற்கூரையில் வரையப்பட்டிருக்கும் நுண்ணிய ஓவியங்களைக் கண்டால் நீங்கள் அசந்தே விடுவீர்கள். அடுத்த குகையில் அதிகமான சுவர் ஓவியங்களைக் காணலாம். அவை யாவும் புத்த துறவிகளின் கதைகளை பறைசாற்றுபவை.
ஒவ்வொரு ஓவியமும் உங்களது கண்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடும். இதேப்போன்று 17 குகைகளை நீங்கள் கண்டு ரசித்துக் கொண்டே வரலாம்.
ஆனால் 19வது குகையில் சில பயங்கர, அதிர்ச்சியளிக்கக் கூடிய ஓவியங்கள் உள்ளன. அதில் உள்ள கை வண்ணத்தையும் கலையையும் ரசித்துவிட்டு அப்படியே வந்து கொண்டிருந்தால் 26வது குகையில் மரம் மற்றும் சிறிய கற்களில் செதுக்கப்பட்ட சிற்ப வேலைபாடுகளைக் காணலாம்.
அஜந்தாவில் மட்டும் ஒரு நாள் முழுவதையும் கழிக்கலாம். உங்கள் கண்கள் பல்லாயிரக்கணக்கான காட்சிகளை நிழல் படங்களாக இதயத்தில் சேமித்துக் கொள்ளும்.
எது எப்படி இருந்தாலும் வாழ்நாளில் ஒரே ஒரு முறையேனும் வாய்ப்பு கிடைத்தால் அஜந்தா ஓவியங்களை காண தவறிவிடாதீர்கள்.
எங்கு தங்குவது?
அஜந்தா ஓவியங்களைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் ஹெளரங்காபாத் அல்லது ஜல்கோன் பகுதிகளில் தங்கியிருந்து அஜந்தாவைச் சென்று கண்டுவிட்டு வருகின்றனர்.
ஏனெனில் அங்குதான் நிறைய விடுதிகளும், ஹோட்டல்களும் உள்ளன.
அஜந்தா செல்ல வாடகை அல்லது சொந்த வாகனம் மட்டுமே சிறந்தது.
கரடு முரடுகளில் நடக்க உதவும் காலணி, டார்ச் லைட், குடிநீர் நிச்சயம் உங்கள் பைகளில் இருக்க வேண்டும்.