ஊ ரில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் பிரபு பட்டணத்தில் படித்த தனது மகள் மோனிகாவுக்கு சம அந்தஸ்தில் உள்ள ஹனிஃபாவின் மகன் அரவிந்தை திருமணம் செய்ய தீர்மானிக்கிறார். இரு குடும்பமும் தட்டு மாற்றிக் கொள்கிறது.
இந்நிலையில் அரவிந்தை சந்திக்கும் மோனிகா, பட்டணத்தில் சந்தீப்பிடம் தான் ஏமாந்த கதையை கூறி, களங்கப்பட்ட நான் உங்கள் மனைவியாக முடியாது என்கிறார்.
webdunia photo
FILE
நிச்சயித்த பெண்ணின் காதலனைத் தேடி பட்டணம் செல்லும் அரவிந்த் கையோடு நவ்தீப்பையும் ஊருக்கு அழைத்து வருகிறார். ஒருபுறம் மோனிகா - அரவிந்த் கல்யாண ஏற்பாடுகள் நடக்க, ஊருக்கு வெளியே மோனிகா - நவ்தீப் ஜோடி காதல் செய்கிறது. கூடவே அரவிந்த் - சரண்யா மோகன் (பிரபுவின் தம்பி மகள்) ஜோடி.
இந்த காதல் குழப்பம் எப்படி சுபத்தில் முடிகிறது என்பது கதை.
பிரபுவுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதுதான் வேலை. பத்து பதினைந்து வெள்ளைக்காரர்கள் சுற்றி வருகிறார்களே தவிர சிகிச்சையை பற்றி அவர் சிந்திப்பதாகவே தெரியவில்லை. மகளை பற்றி அவர் பேசும் போதெல்லாம் வெள்ளையும் சொள்ளையுமாக பத்து பேர் பின்னால் நின்று ஆமாம் சாமி போடுகிறார்கள். வேலை வெட்டி இல்லாத அவுக யாரு சாமி?
பிரபுக்கு வெள்ளை சொள்ளை என்றால் ஹனிஃபாவை சுற்றி மொட்டையும் பட்டையுமாக பத்து பேர். நண்பர்களாம். இருவர் வீட்டு பெண்களும் தூங்கி எழும்போதும் கழுத்து நெக்லசும், காஞ்சிபுரம் பட்டுமாக காட்சியளிக்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த கிராமம் இப்படி இருக்கிறது?
களம் செயற்கையாக இருக்கையில் கதாபாத்திரம் மட்டும் எப்படி யதார்த்தமாக இருக்கும்? நான்கு இளசுகளும் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ஆறுதல். சரண்யா மோகன் தனது அப்பாவி நடிப்பை இதிலும் ரிப்பீட் செய்திருக்கிறார். இப்படியே போனால் விரைவில் ரிட்டையர்ட் ஆக வேண்டியதுதான்.
ஹனிஃபா தனது லொள்ளு நடிப்பால் ஜில்லு ஏற்றுகிறார். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கும் இன்னொருவர் மனோரமா. நவ்தீப, அரவிந்த், மோனிகா நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.
விஜய் ஆண்டனியின் இசையில் அஆஇஈ சொல்லித் தருதே வானம் பாடல் மறுபடியும் கேட்கத் தூண்டும் ரகம். அருள்தாஸின் ஒளிப்பதிவு பரவாயில்லை.
இயக்குனர் சபாபதி தட்சணாமூர்த்தி ஒரே நேரத்தில் மூன்று படங்கள் இயக்குகிறாராம். அஆஇஈ பார்த்தால் அப்படி தெரியவில்லை. குறைந்தது முந்நூறு படங்களாவது இருக்கும்போல் தெரிகிறது.