காதல், சென்டிமெண்ட், ஆக்சன் என தமிழ் சினிமா பழகிய பாதையில் செல்லும்போது, 'குரோதம்' போன்ற த்ரில்லர் படங்கள் தந்து சற்று ஆறுதல் தருபவர் பிரேம்.
அவரது புதிய படம் 'அசோகா'வும் அப்படியொரு ஆச்சரியத்துடன் தொடங்குகிறது. ஆனால், போகப் போக காட்சிகளில் புளிப்பு வாசனை.
webdunia photo
WD
தமிழ்நாடு வரும் பிரதமரை ஏர்போர்ட்டிலேயே தீர்த்துக்கட்ட நினைக்கிறது ஒரு கூட்டம். அந்தக் தாக்குதலில் காயம்படும் பிரதமரை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கிறார்கள். பிதமரின் பாதுகாப்புப் படை தலைவரான பிரேம், அவரை தீவிரவாதக் கும்பலின் தாக்குதலிலிருந்து காப்பாற்றவதுடன், அவர்கள் பின்புலத்தையும் கண்டறிகிறார்.
அளவெடுத்து தைத்த சட்டைபோல் ஆக்சன் கதாபாத்திரம் பிரேமுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. உணர்ச்சியோடு பேச வேண்டிய இடங்களில் அயர்ச்சியில் விழுந்தவர்போல் இழுத்துப் பேசும் டயலாக் டெலிவிரி பொறுமையை சோதிக்கிறது.
பிரதமர் சிகிச்சை பெறும் மருத்துவமனையை பிரேம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது, பிரதமருக்கு நாட்டு வைத்தியம் செய்வது என காதுல பூ நிறைய.
பாகிஸ்தான் பிரிவினையின் போது பதவி இழக்கும் ரகுவரன் ஆனந்த்ராஜை தத்தெடுத்து வளர்த்து, துணை பிரதமராக்கி, பிரதமரை கொலை செய்ய திட்டமிடுவது என்ற, கொலை முயற்சிக்கான பின்னணியில் அழுத்தம் இல்லை.
ரகுவரன் இருந்தும் வில்லத்தனத்தில் அவரை ஓவர் டேக் செய்கிறார் நவீன். கண்ணில் சதா வெறியோடு அலையும் நவீன், அசத்தலான அறிமுகம். அனுஸ்ரீயும் பூஜா பாரதியும் மரத்தைச் சுற்றி பாட்டுப் பாடவில்லை. அந்தளவுக்கு நாம் பாக்யசாலிகள்.
மருத்துவமனையில் தொலைந்து போன தனது அம்மாவை பிரேம் கண்டுபிடிக்கும் காட்சி தேவையற்ற திணிப்பு.
பாடல்கள். காமெடி என எக்ஸ்ட்ரா இம்சையில்லாமல் நேர்கோட்டில் கதை சொல்லியிருப்பதற்காக பிரேமை பாராட்டலாம். சபேஷ்-முரளியின் பின்னணி இசையும், ராக்கி ராஜேஷின் ஆக்சனும் 'அசோகா'வின் பலம்கள்.
ஹாலிவுட் டைப் கதையை கோலிவுட் பட்ஜெட்டில் எடுத்ததால், கட்டுமரத்தில் டைட்டானிக் கதையை எடுத்த மாதிரி ஓர் ஏமாற்றம்!