அஷோக்குமார், விசாகா, கஞ்சா கருப்பு, சரண்யா, சம்பத்ராஜ் நடிப்பில் ராமேஸ்வரன் ஒளிப்பதிவில் மனு ரமேஷன் இசையில் கனகு இயக்கியுள்ள படம். தயாரிப்பு கூல் புரொடக்ஷன்ஸ்.
அஷோக்குமார் லாரி புக்கிங் ஆபிஸ் நடத்தும் வாலிபன். விசாகா கல்லூரி மாணவி. விசாகா தன் அப்பா சம்பத்ராஜுடன் டூ வீலரில் போகும்போது படித்துக் கொண்டே செல்ல காற்று அடிக்கவே கையிலிருந்த பேப்பர்கள் பைக்கில் பின்னால் வந்த அஷோக்கின் முகத்தில் விழுந்து சிதற கண்மண் தெரியாமல் கீழே விழுகிறார். உடம்பெங்கும் காயம். விசாகாவையும் அப்பாவையும் திட்டுகிறார். இருவருக்கும் கறகற வாக்குவாதம். இப்படி மோதிய டென்ஷனுடன் அஷோக் காதலில் விழுகிறார். குறுக்கே நிற்கிற விசாகாவின் அப்பா ஒரே நாளில் இரவோடு இரவாக ஊரை காலி செய்து விட்டு புனே சென்று விடுகிறார்.
விசாகா இருக்குமிடம் தெரிந்துகொண்ட அஷோக் தன் நண்பன் கஞ்சா கருப்புடன் காதலியைத் தேடி புனே செல்கிறார். முகவரி தெரியாமல் புனே நகரத்தில் தேடி அல்லாடுகிறார்கள். மிகவும் சிரமப்பட்டு ஒரு வழியாக கண்டுபிடித்து விடுகிறார்கள். விசாகாவைப் பார்த்து தன்னுடன் வந்துவிடுமாறு அஷோக் அழைக்கிறார். அவரை சம்பத்ராஜ் அடித்து உதைத்து விரட்டுகிறார். இவ்வளவுக்கும் பின் அந்த இளைஞனின் காதல் என்னாகிறது என்பதுதான் க்ளைமாக்ஸ்.
அஷோக்குமார் எளிய முகம். ஹீரோத்தன வெளிச்சம் இல்லாததால் யதார்த்தமாய் தோன்றுகிறார். அந்த பாத்திரத்துக்கேற்ற தேர்வு. விசாகா சாதாரணமாகத் தோன்றுகிறார். அசாதாரணமாக நடிப்பை வெளிப்படுத்துகிறார். கஸ்டம்ஸ் ஆபீசராக வரும் சம்பத்ராஜ் மிடுக்கான தோற்றம், எடுப்பான நடிப்பு. பாசமுள்ள அம்மா சரண்யா. அஷோக்கின் நண்பராக கஞ்சா கருப்பு கடைசி வரை கூட வருகிறார். அஷோக்கின் கஷ்டத்திலும் பங்கு பெற்று கருப்பு கலகலப்பும் ஊட்டுகிறார். கதையிலும் இடம் பிடிக்கிறார்.
webdunia photo
WD
படம் ஆரம்பமானதுமே நாயகன், நாயகியை மோதவிட்டு இவர்களுக்குள்ளா காதல் வரப்போகிறது என்று நினைக்க வைத்துவிடுகிறார் இயக்குநர். முன்னாள் ராணுவ அதிகாரியும் கஸ்டம்ஸ் அதிகாரியுமான சம்பத்ராஜின் கண்டிப்பின் முன் விசாகா காதல் வெற்றி பெறவா போகிறது என்கிற பலமான சிக்கலுடன் கதை நகர்கிறது. போகப்போக வேகமெடுக்கிறது.
காதலியைத் தேடி புனே சென்று அஷோக்கும், கருப்பும் தேடும் படலத்தில் விசாகா எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் என்று காட்டாமலேயே கதை சொல்லியிருப்பது புது யுக்தி. விசாகாவை மறந்து இவர்களின் தேடலில் லயிக்க வைத்திருப்பது இயக்குநரின் வெற்றி.
காதலர்கள் லாரியில் ஊர் சுற்றுவது நல்ல ருசிகரம். சம்பத்ராஜிடம் வழியில் மடக்கப்பட்டு மாட்டிக்கொள்வது பரபரப்பு. அஷோக் விசாகாவிடம் சோப்பு வாசனை பிடிப்பது கதகதப்பான சிருங்கற ரசம். புனே சென்றவர்கள் படும்பாடு பரிதாபம். மொழி தெரியாத இடத்தில் அஷோக், கருப்பு சந்திக்கும் போராட்டங்கள் அவலம் நிறைந்தவை. புனே வந்த தமிழ் குடும்பத்திடம் கஞ்சா கருப்பு கெளரவப் பிச்சையாக கேட்டு வாங்கி சாப்பிடுவது நல்ல சிரிப்பு.
இசையும் ஒளிப்பதிவும் கதைக்குப் பலம் சேர்க்கும் வண்ணம் உள்ளன. யதார்த்தம் மீறாமல் மிகையான காட்சிகள் இல்லாமல் ஆபாசம் கலவாமல் ஒரு காதல் கதையைக் கண்ணியமாக கொடுத்திருக்கிறார் புதிய இயக்குநர் கனகு.
' பிடிச்சிருக்கு' பார்க்கிறவர் மனங்களில் இடம் பிடிச்சிருக்கு எனலாம்.