மெர்க்குரி கிரகத்திலிருந்து வந்து விழுந்த முதல் விண்கல்லைத் தேடி அண்டார்க்டிக் பனிப் பிரதேசத்துக்கு ஒரு குழு போகிறது. டாக்டர் டேவிஸ்தான் தலைவர். அவருக்கு உறுதுணையாக போகிறான் ஜெர்ரி. பனிப் பகுதியில் சறுக்குவண்டி இழுக்கக் கூடவே எட்டு நாய்களும் செல்கின்றன.
பனி மலைப் பிரதேசத்தில் ஒரு விபத்தில் சிக்கி பனிமலை உடைந்து அடியாழத்துக்குச் செல்கிறார் டேவிஸ். அவரை எட்டு நாய்களின் உதவியால் மேலே கயிறு கட்டி இழுத்துக் காப்பாற்றுகிறான் ஜெர்ரி. வெற்றிகரமாக டேவிஸ் தேடி வந்த விண் கல்லும் கிடைத்து விடுகிறது. ஆற அமர ஆராய்ச்சியைத் தொடரலாம் என்றால் திடீரென பனிப்புயல் ஆபத்து வருவதாக எச்சரிக்கை மேலிடத்திலிருந்து வர பயந்து அனைவரும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். இவர்களை ஏற்ற வந்த ஹெலிகாப்டரில் இடமில்லை என்று எட்டு நாய்களையும் ஓர் இடத்தில் கட்டிப் போட்டு விட்டுச் செல்கின்றனர்.
பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விடுகிறார்கள். தன் சிப்பாய்களைப் போலிருக்கும் நாய்களை அங்கே அம்போ என்று விட்டு விட்டோமே என்று ஜெர்ரி தவிக்கிறான்.
webdunia photo
WD
மீண்டும் அங்கு சென்று நாய்களை மீட்டுவர எவ்வளவோ மன்றாடுகிறான் ஜெர்ரி. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. அங்கு பனிப்புயல் வீசுவதாகவும் அப்போது சென்றால் உயிருக்கு ஆபத்து என்றும் சொல்லப்படுகிறது.
தவியாய்த் தவிக்கிறான் ஜெர்ரி. நான்கைந்து மாதங்கள் ஓடிவிடுகின்றன. அங்கே சிக்கிக் கொண்ட நாய்கள் பனிப்புயலில் சிக்கித் தவிக்கின்றன. -50 டிகிரி குளிரில் படாதபாடுபடுகின்றன.
ஒரு வழியாக அனுமதி பெற்று அங்கு செல்கிறான் ஜெர்ரி. சிக்கிய நாய்களில் சில இறந்துவிட... மற்றவற்றை மீட்கிறான். ஜெர்ரியின் தவிப்பும் நாய்களின் அன்பும் ஒன்று சேர... க்ளைமாக்ஸ்.
இதுதான் ஹாலிவுட்டின் 'எய்ட் பிலோ' ( Eight Below) படத்தின் கதை. இதுவே தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளது.
webdunia photo
WD
அந்த அண்டார்டிகா பனிப் பிரதேசம் கண்கொள்ளாக் காட்சி. அந்த எட்டு நாய்களும் எட்டு வித குணச்சித்திரங்களாய் மின்னுகின்றன.
தாய்ப் பாசத்தை எத்தனையோ படங்களில் தரிசித்துள்ளோம். நாய்ப் பாசத்தை அழகாகச் சித்தரித்துள்ளனர்.
பால் வாக்கர், ப்ரூஸ் க்ரீன்வுட், மூன்ப்லிட் குட் நடித்துள்ளனர். இயக்கம் ஃப்ராங்க் மார்ஷல்.
இரண்டு மணி நேரம் ஓடும் இப்படம் குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டுள்ளது. எனினும் பெரியவர்களும் பார்க்கலாம்.