ரஞ்சித், சிந்து துலானி, விவேக், நேகா நாயர், தியாகு, ராணி நடித்துள்ளனர். தாஜ்மல் ஒளிப்பதிவில் தேவா இசையில் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கியிருப்பவர் செல்வபாரதி. தயாரிப்பு ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன்.
ரஞ்சித் ராசக்கா பாளையத்தைச் சேர்ந்தவர். தன் அம்மா மீது உயிரையே வைத்திருப்பவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்த ரஞ்சித்துக்கு அம்மாதான் உலகம். அதனால்தான் சின்ன வயதிலேயே அம்மாவின் பெயரை தன் கையில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட ரஞ்சித் நிறைய சம்பாதித்து அம்மாவுக்கு கொடுத்து குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்று சென்னைக்கு வருகிறார். வருகிற இடத்தில் ஒரு ஏமாற்றுக்காரனிடம் ஏமாந்துவிடுகிறார். கையில் உள்ளதை பறிகொடுத்தவரை போலீஸ் பிடிக்கிறது. ஆனால் போக்கிடம் ஏதுமின்றி போலீஸ் ஸ்டேஷனிலேயே தங்கி எடுபிடி வேலை பார்க்கிறார்.
webdunia photo
WD
அங்கு இன்ஸ்பெக்டர் விவேக். அவ்வப்போது போலீஸ் வேடமும் போடுகிறார் ரஞ்சித். அம்மாவுக்கு உடல்நிலை மோசமாகி, இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. பணம் ஐந்து லட்சம் தேவை. எனவே ஒரு ஆயுதக் கடத்தலுக்கு துணை போக... மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குப் போகிறார். எப்படி வெளியே வருகிறார்? அம்மா பிழைத்தாரா... என்று முடிவை நோக்கிச் செல்கிற கதை, எதிர்பாராத அந்தக் காட்சியுடன் முடிகிறது.
ரஞ்சித் ஒரு வில்லன் முகம் கொண்டவராக அறியப்பட்ட நடிகர். அவரை நாயகனாக்கி டூயட் பாட வைக்கவே துணிச்சல் வேண்டும். ஆனால் அவரை அப்பாவியாக்கி சிரிக்க வைப்பது சாதாரண காரியமல்ல. அதை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார் இயக்குனர் செல்வ பாரதி.
படம் தொடங்கியதும் பஸ்ஸுக்குக் கீழே சிறுநீர் கழிக்க முயற்சி செய்வதில் தொடங்குகிற காமடி தெளசண்ட் வாலாவாக இடைவேளை வரை செல்கிறது. ரஞ்சித்துடன் விவேக் கூட்டணி சேர்ந்ததும் தொட்டதெல்லாம் துலங்குவது போல் நகர்கிற ஒவ்வொரு காட்சியும் கலகலப்பு கொடி கட்டி வயிறைப் புண்ணாக்குகிறது.
பல சீரியஸான காட்சிகளை சிரிப்பூட்டும் விதத்தில் அமைப்பது தனிக் கலை. செல்வபாரதிக்கு அது கை வந்திருக்கிறது.
அந்த கோயமுத்தூர் பாஷையில் ரஞ்சித் ரசிக்க வைக்கிறார். தனக்கென்று ஒரு ஆடுகளம் கிடைத்தால் 'ஆறு பந்தில் ஆறு சிக்சர் அடித்த யுவராஜ் சிங்' போல வெளுத்து வாங்குபவர் விவேக் என்பது இப்படம் மூலம் நிரூபணமாகியுள்ளது. சிரிப்பிலும் நடிப்பிலும் பிரிச்சு மேய்கிறார்.
முதல் பாதிப் படம் சரவெடியாகச் சிரிக்க வைத்த கதை மறுபாதியில் செண்டிமெண்டில் நுழைகிறது. அதிலும் வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் சிரிக்க வைத்த வேலையைச் செய்த ரஞ்சித் சிறை சென்று விடுவதால் அவருக்கு பாசம் காட்ட மட்டுமே வாய்ப்பு. அதனால் சிரிக்க வைக்கும் பொறுப்பை கஞ்சாகருப்பும் தியாகுவும் எடுத்துக் கொள்கிறார்கள்.
நேகா நாயர் டீக்கடைக்காரர் மகளாக வருகிறார். சிந்து துலானி எஸ்.பி. மகளாக வருகிறார். இருவரும் அழகாக இருக்கிறார்கள். அதிலும் சிந்து துலானி குலோப்ஜாமூன் போல இருக்கிறார். இவர்களை காதல் காட்சிகளில் உருண்டு புரளவிடாமல் விட்டது பெரிய ஆறுதல். இயக்குனரின் தைரியம் என்றே தோன்றுகிறது.
ரஞ்சித்தின் அம்மாவாக வரும் ராணி அலட்டிக் கொள்ளாமலேயே பாசக்கார அம்மாவாக பெயர் வாங்கி விடுகிறார்.
படத்தில் குறைவான பாடல்கள். இயக்குனரே எழுதியிருக்கிறார். அம்மா பாசத்தை வெளிப்படுத்தும் 'உயிர் தந்த தாயே...' மெட்டால் மகிழவும் வரிகளால் நெகிழவும் வைக்கும் பாடல். ஜெயிலில் கஞ்சாகருப்பு பாடும் 'ஒண்ணு ரெண்டு மூணு படிச்சேன் சென்ட்ரல் ஜெயிலிலே...' பாடல் சரியான கானா. பாராட்டு பெறுகிறது எழுதிய பேனா.
கதை புதிதல்ல என்றாலும் ஒரு தாய்ப்பாசம் சார்ந்த கதையை சிரிக்க சிரிக்க கலகலப்பான படமாக உருவாக்க முடியும் என்று நிரூபித்துள்ள வகையில் இயக்குனருக்கு வெற்றியே.