Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலைக்கோட்டை - விமர்சனம்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (12:36 IST)
webdunia photoWD
விஷால், ப்ரியாமணி, ஆசிஷ் வித்யார்த்தி, தேவராஜ், ஊர்வசி, ரேகா, அஜய்குமார், பொன்னம்பலம், ஆர்த்தி நடித்துள்ளனர். வைத்தியின் ஒளிப்பதிவில் மணிசர்மாவின் இசையில் ஜி. பூபதிபாண்டியன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஸ்ரீலஷ்மி புரொடக்‌‌ஷன்ஸ்.

தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இளைஞனை இந்த சமூகம் எப்படி சீண்டி முரடணாக்குகிறது என்பதையும் காதலுக்காக ஒருவன் எத்தனை உயரத்தையும் எட்டித் தொடுவான் என்பதையும்... எப்படித் தொட முடிகிறது என்பதையும் விளக்க ஓர் ஆக்‌‌ஷன் படம் எடுத்தால் எப்படி இருக்கும்? 'மலைக்கோட்டை' போல இருக்கும். ஆனால் இந்த மாதிரி கதை கேள்விப்பட்டமாதிரி இருக்கிறதே... என்றால் சொன்ன விதத்திலும் சொன்ன வேகத்திலும் நிமிர்ந்து நிற்கிறார் இயக்குனர் ஜி. பூபதிபாண்டியன்.

ஓர் அடிதடி வழக்கில் பட்டுக்கோட்டையிலிருந்து திருச்சி மலைக்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அப்படிக் கையெழுத்துப் போடப் போகிறவரின் தலையெழுத்து எப்படி மாறுகிறது என்பதே கதை.

ப்ரியாமணியுடன் காதல், தாதா தேவராஜுடன் பகை என்று மாறிமாறிப் போராட்டங்களை சந்திக்க நேரிடுகிறது. இறுதியில் தேவராஜ் தன் காதலுக்கே உலை வைக்க முயல, விஷால் வெகுண்டெழுந்து எப்படி வெல்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

பரபரப்பான அதிரடியையும் கலகலப்பான காமடியையும் சரிவிகிதத்தில் கலந்து கலக்கியுள்ள சூடும் சுவையும் நிறைந்த மசாலாவாக மணக்க மணக்க பரிமாறியுள்ளார் இயக்குனர்.

பட்டுக்கோட்டை, திருச்சி பகுதிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் இயக்குனர். பாடல் காட்சிகளில் கனவுலகம் போல இயற்கை எழில் கொஞ்சுகிறது.

அதிரடிக் காட்சிகளில் நம் நரம்புகளை முறுக்கேற்றும்படி விஷால் விளாசியுள்ளார். விஷாலை நம்பும்படியான - தகுதியான ஓர் ஆக்‌‌ஷன் ஹீரோ என்று மலை மீது ஏறி நின்று முன்மொழிந்துள்ளார் இயக்குனர். அது சரியே என வழிமொழியவும் நமக்கு தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஆக்‌‌ஷனில் பிரமாதப்படுத்தியுள்ளார்.

webdunia photoWD
' கந்தா கடம்பா' என்று முருகனிடம் காதல் பாடம் கேட்டு வேண்டும்போது விஷால் குஷாலான குறும்புப் பையனாகத் தெரிகிறார். 'தேவதையே வா வா' பாடும்போது நல்ல காதலனாகத் தெரிகிறார். தேவராஜை எதிர்த்து சீறி மோதும் கட்டங்களில் ஆக்‌ஷனில் பின்னுகிறார்; மின்னுகிறார்.

ப்ரியாமணி மாடர்ன் பெண், கல்லூரி மாணவி. பாடல்காட்சிகளில் விஷாலுடன் ஆடியது போக சில காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

மிரட்டல் வில்லன் தேவராஜ், நல்ல போலீஸ் அதிகாரி ஆசிஷ் வித்யார்த்தி இருவருமே நினைவில் பதிகிறார்கள். ஆசிஷின் காதலியாக வரும் பெண் போலீஸ் ஊர்வசியும் சிரிக்க வைக்கிறார். ஆசிஷ் - ஊர்வசி ப்ளாஷ்பேக் கதை ஆரோக்கியமான சிரிப்பு வெடி.

காதல் காட்சிகளாகட்டும் சண்டைக்காட்சிகளாகட்டும் எல்லாவற்றிலும் ஊடாக 'நகைச்சுவை' பின்னிப் பிணைந்து சிரிக்க வைக்கிறது. படம் முழுக்க இந்த காமெடி களை கட்டி இருப்பது நல்ல போக்கு. நயமான பொழுதுபோக்கு.

ஒரு பக்கம் விஷால் விதம்விதமாக ஆக்‌ஷனில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க... வில்லன்களின் கூட்டணியில் கூட காட்சிகளில் காமெடிக் களை. போதாக்குறைக்கு ரவுடியாக ஆசைப்படும் மயில்சாமி, நாய் பாஸ்கராக வரும் பொன்னம்பலத்தின் காமெடி என சிரிப்பு மயம்.

இப்படி படம் முழுக்க பரபரப்பான காட்சிகளால் விறுவிறுப்பையும் நகைச்சுவைக் காட்சிகளால் கலகலப்பையும் கலந்து கட்டி கவர்கிற இயக்குனர், துளி கூட ஆபாசக் கலப்பின்றி காட்சிகளை அமைத்துள்ளார். அதற்காக பாராட்டவே செய்யலாம்.

முழுக்க முழுக்க இது கமர்ஷியல் படம். எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்கு எந்த லாஜிக்கையும் மீறி படத்துக்கு வேகம் கூட்டவேண்டும்; தொயுவு என்பதே கதையில் இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டி இயக்குனர் இறங்கியுள்ளது புரிகிறது. இம்முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதற்கு ஏற்றபடி மணிசர்மாவின் இசை 'பொளந்து' கட்டுகிறது. 'ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா' ரீமிக்ஸும் உண்டு.

நூறு சதவீத வணிக ரீதியான படம் என்று ஒட்டுமொத்தமாக ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார் பூபதி பாண்டியன். 'மலைக்கோட்டை' வெற்றிக் கோட்டையைப் பிடிக்க அனைத்து மசாலா மணமும் கொண்டிருக்கிறது.

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

Show comments