Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரீடம்

Webdunia
சனி, 21 ஜூலை 2007 (13:43 IST)
அஜீத், த்ரிஷா, ராஜ்கிரண், சரண்யா, விவேக், சந்தானம், மீனாகுமாரி, ஹனீபா, மனோபாலா, ரவிகாலே, எம்.எஸ். பாஸ்கர், அறிமுகம் அஜய்குமார் நடிப்பில் திருவின் ஒளிப்பதிவில் ஜி.வி. பிரகாஷின் இசையில் விஜய் இயக்கியுள்ள படம். தயாரிப்பு சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் சுரேஷ் பாலாஜி.

அந்த ஊரில் ரவுடியிசம் கொடிகட்டிப் பறக்கிறது, வன்முறையால் மக்களைத் துன்புறுத்துகிறார்கள். அப்படி ஒரு மார்க்கெட்டில் அட்டகாசம் செய்யும் ரவுடிகளை புதிய இன்ஸ்பெக்டர் அஜீத் அடித்துத் துவைக்கிறார். கதிகலங்கிய ரவுடிகளை சங்கிலியால் இணைத்து பிணைத்து ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு போகிறார். அஹா ஆரம்பமே அசத்தலா இதுக்கே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் அது நிஜமல்ல கனவு. ராஜ்கிரண்தான் இப்படிக் கனவு காண்கிறார். நேர்மையான ஹெட் கான்ஸ்டபிளான ராஜ்கிரண், தன் மகன் அஜீத் போலிஸ் இன்ஸ்பெக்டராகி இப்படி அநியாயங்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்கிற அவரது விருப்பமே கனவாகிறது. அப்படியே அஜீத்தும் இன்ஸ்பெக்டர் தேர்வுக்குத் தயாராகிறார். இடையே ஒரு எம்.எல்.ஏ. மகன் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதுடன் போலிஸ்காரர் மீதும் கை வைத்து அடாவடி செய்ய, ஆவேசமான ராஜ்கிரண் அவன் மீது நடவடிக்கை எடுக்க காரை சீஸ் செய்கிறார். எம்.எல்.ஏ. செல்வாக்கால் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். போன இடம் கோடியக்கரை . அங்கு ரவுடிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது. ஒரு பிரச்சினையில் ரவுடிகளை ராஜ்கிரண் தட்டிக்கேட்க அவரை அடித்து உதைக்கின்றனர். இதைக் கண்டு ஆவேசமடைந்த அஜீத் அந்த தாதா அஜய்குமதரைப் புரட்டி எடுக்கிறார். இதன் பிறகு அஜீத்தின் வாழ்க்கையில் பாதை மாறுகிறது.

தங்களின் சிம்ம சொப்பனமாக இருந்த வரதன் (அஜய்குமார்) வீழ்ந்தான் என்று அப்பகுதி மக்கள் அஜீத்தை வரவேற்று தலைவனாக உயர்த்திவிட, சிலர் அஜீத்தை அடுத்த தாதாவாக நினைக்க... தன் மகனின் பாதை மாறிவிட்டதே.. தன் கனவு பலிக்காதோ என்று வருத்தப்படுகிறார் ராஜ்கிரண்.

புலிவாலைப் பிடித்தது போல ஒரு நிலை அஜீத்துக்கு. தனக்கு வன்முறை தேவையில்லை. தான் ஒரு ரவுடியில்லை என்று அஜீத் நிரூபிக்க முயல அப்பா ராஜ்கிரணின் கோபத்துக்கும் காதலி த்ரிஷாவின் வருத்தத்துக்கும் ஆளாகிறார் அஜீத். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் வேலைக்கு தேர்வாகிறார். ஆனால் அடிபட்ட புலியான வரதனான அஜய்குமார் அஜீத் குடும்பத்தை அடித்து நொறுக்க, புயலாக மாறிய அஜீத் தாதாவை சூரசம்ஹாரம் செய்வது கிரீடம் படத்தின் க்ளைமாக்ஸ்.

இது ஒரு தாதா-ஹீரோ கதை என்று கூறலாம். ஆனால் இதுவும் ஒரு தாதா சம்பந்தப்பட்ட சாதா கதை என்று ஒதுக்கிவிட முடியாது. வாழ்க்கைச் சூழலில் வன்முறை நுழையும் வாய்ப்பை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். இதில் வரும் அஜீத்தின் குடும்பம் கலகலப்பான நடுத்தரக் குடும்பம். கடமை தவாறத போலிஸ்காரர் அப்பா ராஜ்கிரண், பாசமுள்ள வெள்ளந்தி அம்மா சரண்யா. வீட்டோடு மாப்பிள்ளை விவேக், வீட்டில் ராஜ்கிரண் இருந்தால் எலி. இல்லாவிட்டால் புலி என லூட்டி அடிக்கும் தம்பி, தங்கை.... என்று ஒரு யதார்த்தமான குடும்பச் சித்தரிப்பு ரசிக்க வைக்கிறது.

பிள்ளையார் சிலை திருடப் போய் த்ரிஷாவின் மனசைத் திருடும் அஜீத். அஜீத் - த்ரிஷா சம்பந்தப்பட்ட லவ் எபிசோட்... லவ்லி எபிசோட். திருடனைப் பிடிப்பதாக நினைத்து துரத்தி அஜீத் வீட்டுக்குள்ளேயே அதகளம் செய்யும் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் சரியான காமெடி. ஜாங்கிரி கலர்ஃபுல் ரங்கோலி.

ராஜ்கிரண் பாசமுள்ள அப்பா, நேர்மையான போலிஸ்காரர். பந்தமான பாத்திரம். குறிப்பாக அப்பா மகன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அபார நடிப்பை வழங்கி அஜீத்தின் சுமையைக் குறைத்து இருக்கிறார் ராஜ்கிரண்.

ஆரம்பத்தில் புள்ளிமானாகத் துள்ளித் திரியும் த்ரிஷா ஒரு கட்டத்துக்கு மேல் காணாமல் போய் விடுகிறார். கடைசியில் அஜீத்தை மணக்க முடியாமல் போகும்போது ஏமாற்றமாகத் தெரியலாம். ஆனால் அதுதான் யதார்த்தம்.

ஒரு பொறுப்பான போலிஸ் அதிகாரிக்கு என்ன இருக்க வேண்டும் என்பதற்காக பயம் என்று தரும் விளக்கத்தின் மூலம் அஜீத் பாத்திரம் பொறுப்பான இளைஞன் என்று காட்டப்படுவது இதம். தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மிகை நடிப்பு வந்து விடாமல் யதார்த்தத்தை பராமரித்துள்ளார் அஜீத். இறுதியில் அஜய்குமாரை தாக்கும் காட்சியில் அடி வாங்குவதும் அடி கொடுப்பதும்... கடைசியில் கொலை செய்துவிட்டுக் கதறுவதும் மனதில் ஆழப்பதிகிற அழுத்தமான காட்சிகள்.

வரதனாக வரும் அறிமுகவில்லன் அஜய்குமார் விழிகளாலேயே மிரட்டுகிறார். குப்பி சிவராசன் புகழ் ரவிகாலே இன்ஸ்பெக்டராக வந்து மனதில் பதிகிறார்.

இது ஒரு தாதா சார்ந்த கதை ஆக்ஷன் அதிரடி என்றுதான் கதைக்காட்சிகள் இருக்க முடியும் என்ற எண்ணத்துக்கு எதிராக... படம் முழுக்க யதார்த்தமான நகைச்சுவையை கலகலப்பாக அள்ளித் தெளித்து இருக்கும் விதம். ரசிக்கத் தக்கது.

அஜீத் - த்ரிஷா.... வாட்டர் டேங்கைக் காலி செய்துவிட்டு ரகசியமாகப் பேசுவதை தண்ணீர்க் குழாய் மூலம் குடும்பத்தினர் ஒட்டுக கேட்பது ரசனையான ரகளைக் காட்சி. வீட்டோடு மாப்பிள்ளை விவேக் ஒரு பக்கம், நண்பனாக வரும் சந்தானம் ஒரு பக்கம் என்று சிரிக்க வைத்தால், சீரியஸான காட்சியில் கூட ஹனீபா சிரிக்க வைக்கிறார்.

முன்பாதிப் படம் போவதே தெரியவில்லை. மறுபாதியில் கதையில் கனத்தை ஏற்றியிருக்கிறார்கள். எனவே நீளமாகத் தெரிகிறது. இந்த நீளம் விறுவிப்பைக் குறைக்காதது ஆறுதல்.

ஐந்து பாடல்கள்... கனவெல்லாம், விழியில் உன் விழியில் இனிக்கின்றன. மெட்டில் பழைய வாசனை வீசினாலும் கண்ணீர்த்துளியே பாடல் வரிகளிலும் காட்சியமைப்பிலும் கவர்கிறது. பாடல்கள் நா. முத்துக்குமார். எல்லாப் பாடல்களிலும் பொறிதட்டும் வரிகள் தென்படுகின்றன.

தாதா, வன்முறை சார்ந்த கதையில் மிகையற்ற செண்டிமென்டை அழகாகக் குழைத்து ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர். யதார்த்தமான நடிப்புக்கும் அழுத்தமான நடிப்புக்கும் வாய்ப்புள்ள இப்படம் அஜீத்திற்கு வெற்றிக் கிரீடம் அணிவிக்கும்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments