குதிரை ரேஸ் நடக்கும் இடத்தில் மிசெல் ஒரு பெண்ணின் பணத்தை திருடுகிறான். யாரும் பார்க்கவில்லை. அந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வெளியேறுகிறவனை போலீஸ் கைது செய்கிறது. அவன் திருடியதுக்கு எந்த சாட்சியமும் இல்லை. பணம் வைத்திருந்ததற்காக அவன் மீது வழக்குப் பதிவு செய்ய இயலாது. மிசெல் விடுவிக்கப்படுகிறான். போலீஸ் அவனை தொடர்ந்து கண்காணிக்கிறது.
பிக்பாக்கெட்டை தொழிலாக செய்யும் சிலருடன் மிசெல் சேர்கிறான். மக்கள் அதிகம் சங்கமிக்கும் இடங்களில் அவர்கள் கூட்டாக திருடுகிறார்கள்.
ஒருநாள் பணத்துடன் தனது அம்மாவைப் பார்க்க மிசெல் செல்கிறான். பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம் பெண் ஜோன் அவனை வீட்டிற்குள் அம்மாவைப் பார்க்க அழைக்கிறாள். அதனை மறுத்து அம்மாவிடம் தரும்படி சிறிது பணத்தை தந்து அங்கிருந்து சென்றுவிடுகிறான். ஜோனுக்கும் மிசெலின் நண்பனுக்கும் இடையில் நட்பு உருவாகிறது.
ஒருநாள் மிசெலின் அம்மாவுக்கு நோய் அதிகமாகிவிட்டதாக ஜோன் தகவல் சொல்ல மிசெல் அம்மாவை காணச் செல்கிறான். நான் உன்னிடம் எதுவும் கேட்க மாட்டேன், அது உனக்குப் பிடிக்காது என்று அம்மா மென்மையாக மிசெலிடம் கூறுகிறார்.
மிசெலின் அம்மா இறந்துவிடுகிறார். தனது சிறிய அறைக்கு திரும்பிய மிசெல் போலீஸ் அதிகாரி அங்கிருப்பதைப் பார்க்கிறான். மிசெலின் அம்மா பணத்தை காணவில்லை என்று கொஞ்ச நாள் முன்பு ஒரு இளம் பெண்ணை வைத்து புகார் தந்ததாகவும், பிறகு அவரே அந்தப் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டதாகவும் கூறும் அந்த அதிகாரி, பணத்தை திருடியது யார் என்று மிசெலின் அம்மாவுக்கு தெரியவந்திருக்கும், அந்த நபரை காப்பாற்றவே அவர் வழக்கை வாபஸ் பெற்றார் என சொல்கிறார். அந்த நபர் மிசெல்.
மிசெல் நொறுங்கிய மனதுடன் பிரான்சைவிட்டு வெளியேறுகிறான். நேர்மையான வாழ்க்கைக்கு முயற்சிக்கும் அவன் ஒருநாள் சூதாட்டத்திலும், பெண்களிடத்தும் பணத்தை இழந்து மீண்டும் பிரான்சுக்கு திரும்புகிறான். ஜோனுக்கு இப்போது ஒரு குழந்தை இருக்கிறது. மிசெலின் நண்பனை காணவில்லை. ஜோனையும் அவள் குழந்தையையும் காப்பாற்றுவதாக மிசெல் கூறுகிறான். அவனை திருமணம் செய்ய ஜோன் மறுத்துவிடுகிறாள்.
போலீஸ்காரர் விரித்த வலையில் விழும் மிசெல் பணத்தை திருடி மாட்டிக் கொள்கிறான். சிறையில் இருக்கும் மிசெலை ஜோன் பார்க்க வருகிறாள். அவளை தான் காதலிப்பதை மிசெல் அறிந்து கொள்கிறான்.
மேலே கதை எழுதப்பட்டிருப்பது போன்று எவ்வித உணர்ச்சி முஸ்தீபுகளுக்கும் இடம் தராமல் படத்தை உருவாக்கியிருக்கிறார் ராபர்ட் ப்ரெஸ்ஸன். அவரின் பிரத்தியேக திரைமொழி அது. பாரில் சென்று சுவாதீனமாக பிராந்தி குடிக்கும் அதே கேமரா நகர்வுகளுடனே மிசெல் அம்மாவைச் சென்று சந்திக்கும் உணர்ச்சிமிகுந்த காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சியை வெளிப்படுத்தும் இசை, கேமரா நகர்வு, காட்சிக்கு அழுத்தம் தரும்வகையில் காட்சி ஓட்டத்தை நிதானிப்பது போன்ற எதுவும் படத்தில் இல்லை. வாழ்க்கையில் எப்படி எல்லாமே ஒரே ஒழுங்கில் வழிந்து செல்லுமோ அப்படியொரு திரைமொழி.
இதுவொரு த்ரில்லர் கிடையாது. ஒரு மனிதனின் பலவீனங்கள் அவனை எப்படி திருட்டை நோக்கி செலுத்துகிறது என்பதையும், அந்த சாகஸமும், அந்நியப்பட்ட வழிகளும் எப்படி தன்னை விரும்பும் இன்னொரு மனதை கண்டடைகிறது என்பதையும் காட்சிகள், ஒலிகள் வழியாக சொல்ல முயற்சிப்பதாக படத்தின் ஆரம்பத்தில் ஒரு குறிப்பு வருகிறது. அதையே இந்தப் படத்தைப் பற்றிய சரியான விமர்சனமாக கொள்ளலாம்.
ராபர்ட் ப்ரெஸ்ஸன் பிரான்சில் பிறந்தார். ஆரம்ப கல்விக்குப் பிறகு பெயின்டிங்கில் அவரது ஆர்வம் திரும்பியது. 1934 ல் தனது முதல் குறும்படத்தை எடுத்தார். முதல் முழுநீள திரைப்படம் 1943 ல் வெளியானது. கத்தோலிக்க மதம் ப்ரெஸ்ஸனிடம் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியது. ஓரளவு தாஸ்தாயெவ்ஸ்கியைப் போல். பிக்பாக்கெட்டை ப்ரெஸ்ஸனின் குற்றமும் தண்டனையும் என்று சொல்லலாம்.
மிசெல் இந்த சமூகத்தை வெற்றி கொள்ளும் திறமை கொண்டவனில்லை. பலவீனமானவன். சமூகத்தின் நெளிவுசுளிவுகளை கற்று ஒரு கௌரவமான வாழ்க்கைக்கு அவற்றை முதலீடு செய்யும் பக்குவமும், மனமும் இல்லாதவன். பலவீனங்களே அவனை பிக்பாக்கெட் எனும் சாகஸத்தை நோக்கி துரத்துகிறது. அம்மா மீது அவனுக்கு பாசம் உண்டு. ஆனால் அம்மாவிடம் திருடிய பணமும், அவனின் இன்றைய வாழ்க்கையும் அம்மாவை சந்திக்கும் துணிவை அவனுக்கு அளிப்பதில்லை. பலவீனங்களால் துரத்தப்பட்டு எலிவளை போன்ற இடத்தில் தனது வாழ்க்கையை முடக்கிக் கொண்டவன் மிசெல்.
அவனது அத்தனை பலவீனங்களையும் அறிந்துகொண்டே அவனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் ஒரு உள்ளத்தை அவன் கண்டடைகிறான். இந்த வாழ்க்கையின் வழியாகவே அவன் ஜோனை கண்டடைகிறான்.
திருட்டு, குற்றம், தண்டனை என்பதற்கு அப்பால் விரிவான தளத்தில் பல்வேறு விஷயங்களை இப்படம் பேசுகிறது. குறைந்தபட்ச முஸ்தீபுகளைக்கூட கதாபாத்திரங்களின் மீது, காட்சிகளின் மீது திணிக்காமல் ப்ரெஸ்ஸனால் அதனை சாத்தியப்படுத்த முயன்றது அவரின் திரைமொழியின் சாதனை. படத்தில் பெரும்பாலும் இசை இல்லை. இருக்கிற ஒன்றிரண்டு இடங்களிலும் உணர்ச்சிகளை தூண்டுவதற்கோ, காட்சியை மீறி கதை சொல்வதற்கோ பயன்படுத்தப்படவில்லை. அதேபோல் எல்லாக் காட்சிகளும் சொற்ப நொடிகள் மட்டுமே நீளம் கொண்டவை.
ப்ரெஸ்ஸனின் திரைமொழி உலக இயக்குனர்களை கவர்ந்தது. மாமேதை தார்க்கோவ்ஸ்கி இரண்டு இயக்குனர்கள் குறித்து வியந்து பேசியுள்ளார். ஒருவர் பெர்க்மன், இன்னொருவர் ப்ரெஸ்ஸன். இன்று உலக அரங்கில் புகழப்படும் அகி கருஸ்மகி, மைக்கேல் கென்னகி, ஜிம் ஜெர்முச் போன்றவர்களின் திரைமொழியை பாதித்தவர் ப்ரெஸ்ஸன். அவர் எழுதிய நோட்ஸ் ஆன் தி சினிமோட்டோகிராஃபர் சினிமா குறித்த புத்தகங்களில் முக்கியமானது.
பிரெஞ்சில் உருவான புதிய அலை சினிமாவுக்கு உரமாக இருந்தவை ப்ரெஸ்ஸனின் திரைப்படங்கள். கோடார்ட் இவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
எப்படி தாஸ்தாயெவ்ஸ்கி ரஷ்யாவின் நாவலோ, மொசார்ட் ஜெர்மனியின் இசையோ அதுபோல் ராபர்ட் ப்ரெஸ்ஸன் பிரான்சின் சினிமா.