ரசிகன் ஒரு ரசிகையில் இடம்பெற்ற பாடல்களை கேட்கும் பலரும் அதற்கு இசையமைத்தவர் இளையராஜா என்று தவறாக நினைப்பதுண்டு. கதையின், கதாபாத்திரத்தின் மனோநிலையை பாடலின் வழியாக வெளிப்படுத்தும் மகத்தான திறமையை இளையராஜாவைப் போலவே கைவரப்பெற்றவர் ரவீந்திரன் மாஸ்டர்.
சிபி மலையில் இயக்கிய ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா மலையாள சினிமாவில் இசை சார்ந்த முக்கிய படங்களில் ஒன்று. மோகன்லாலுக்கும் இசை மேதை ஒருவருக்கும் போட்டிப் பாடல் ஒன்று படத்தில் வரும். கதைப்படி ஒருவரை கொலை செய்ய மும்பையிலிருந்து கேரளாவுக்கு மோகன்லால் வந்திருந்தாலும் அடிப்படையில் அவர் சாது. எதிராளியான இசை விற்பன்னர் இசையே நான் என்ற அகங்காரம் கொண்டவர். தேவசபாதலம் என்று தொடங்கும் அந்தப் போட்டிப் பாடலில் இருவரின் குணங்களுக்கேற்ப ராகம் அமைத்திருப்பார் ரவீந்திரன் மாஸ்டர். ஏறக்குறைய ஒன்பது நிமிடங்கள் நீளமுள்ள அந்தப் பாடல் அவரின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.
பரதன் இயக்கிய காதோடு காதோரம் படம் கிறிஸ்தவ பின்னணி கொண்டது. அதில் வரும் பாடல்களின் டியூனை ஹம் செய்யும் போதே அது நமக்குள் கிறிஸ்தவ பின்னணியை தோற்றுவிக்கும். காட்சி, கதாபாத்திரம் இவற்றை தனது இசையில் வெளிப்படுத்துவதற்கு ரவீந்திரன் மாஸ்டர் முக்கியத்துவம் தந்திருந்தார்.
அவரின் பூர்வீகம் கேரளா கொல்லத்திலுள்ள குளத்துப்புழா. இளமையிலேயே அவரின் இலட்சியம் இசையாக இருந்தது. திருவனந்தபுரம் ஸ்வாதி திருநாள் இசைக்கல்லூரியில் பயின்றார். அப்போது அவருடன் படித்தவர்தான் பிரபல பாடகர் கே.ஜே.யோசுதாஸ்.
அந்த நட்பு காரணமாக அவரின் சிறந்த பாடல்கள் பலவற்றையும் பாடுகிற வாய்ப்பு யோசுதாஸுக்கு கிடைத்தது. தேவசபாதலம் பாடலில் மோகன்லாலுக்கு குரல் தந்தவர் யேசுதாஸ், எதிராளிக்கு ரவீந்திரன் மாஸ்டர். இசையமைப்பாளராவதற்கு முன்னால் பாடகராகதான் அவரின் வாழ்க்கை கழிந்தது. 1979ல் தான் அவர் இசையமைப்பாளரானார். அதன் பிறகு அவர் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. பரதன், சிபி மலையில் போன்ற ஜாம்பவான்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக அவர் இசையமைத்தார்.
ரவீந்திரன் மாஸ்டரின் இசை வற்றாத ஜீவ நதி. ரசிகன் ஒரு ரசிகை படத்தின் பாடல்களை மட்டும் கேட்டாலே அதன் குளிர்ச்சியை அதன் நித்யத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
நன்றி - யுடியூப்