Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலுமகேந்திரா நினைவலைகள்: இளையராஜாவை தவிர்த்து ரஹ்மானை தேர்வு செய்த பாலுமகேந்திரா

Webdunia
சனி, 15 பிப்ரவரி 2014 (11:12 IST)
பாலுமகேந்திரா மறைந்துவிட்டார். மறைந்தவரைப் பற்றி பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பதில் எல்லோருக்குமே ஆர்வம். சன், கலைஞர், ஜெயா, விஜய்... எல்லா சேனல்களிலும் வேறு செய்திகள், நிகழ்ச்சிகள். செய்தி சேனலில் மட்டும் சில நொடிகள் பாலுமகேந்திராவை நினைவுகூர்ந்தார்கள்.
FILE

அப்படியே மலையாளம் பக்கம் வந்தால் டிடி மலையாள செய்தியில் பாலுமகேந்திரா குறித்த செய்தித் தொகுப்பு. மலையாளத்தில் ராமு காரியத், சேதுமாதவன், பரதன் போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புனே திரைப்பட கல்ல ு hரியில் கோல்ட் மெடலுடன் வெளிவந்த இளைஞர் பாலுமகேந்திராவை அழைத்து முதல்பட வாய்ப்பு தந்தவர் தேசிய விருது பெற்ற செம்மீனை இயக்கிய ராமு காரியத். படம் நெல்லு. அதன் பிறகு பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

ஓளங்கள், ஊமக்குயில், யாத்ரா என்று மூன்று படங்களை மலையாளத்தில் பாலுமகேந்திரா இயக்கினார். மலையாளத்தைப் பொறுத்தவரை பாலுமகேந்திராவின் பங்களிப்பு இத்துடன் முடிகிறது. அவர் கடைசியாக இயக்கிய யாத்ரா வெளிவந்தது 1985 ல். அதன் பிறகு பத்து தமிழ்ப் படங்களை பாலுமகேந்திரா இயக்கினார்.

ஏறக்குறைய 24 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் இயங்கிய கலைஞனை குறித்து விரிவான செய்தித் தொகுப்பை டிடி மலையாளம் ஒளிபரப்பியது. அப்படியே வந்தால் இன்னொரு மலையாளச் சேனலில் பாலுமகேந்திராவின் பேட்டி. பழையதுதான். ஷ ே nபா குறித்த கேள்வியில் பாலுமகேந்திராவிடம் தடுமாற்றம் தெரிந்தது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். ஷ ே nபாவின் பிரிவால் தான் அனுபவப்பட்ட வலியின் ஒருதுளிதான் மூன்றாம் பிறையின் கிளைமாக்ஸ் என்றும் ஷ ே nபாவின் நினைவுக்காக எடுத்ததுதான் அப்படம் எனவும் தெரிவித்தார்.
FILE

பாலுமகேந்திரா நினைவுகூரப்படுவது அவரது படங்களுக்காக. அவர் ஒழுக்கசீலர் என்பதற்காக அல்ல. அவரே பலமுறை வெளிப்படையாக தன்னை விமர்சித்திருக்கிறார். ஒரு பெண் அவரை அடைக்கலம் தேடி வருகையில் தகாது என்று விலகாமல் அதில் வழுக்கி விழுகிறவராகவே அவர் இருந்திருக்கிறார். பெண்கள் விஷயத்தில் அவரது moral என்னவாக இருந்தது என்ற கேள்விக்கு, moral என்பது இரு தனி நபர்களுக்குரிய தனிப்பட்ட விஷயம், என்னுடைய moral உங்களுக்கு immoral ஆகத் தெரியலாம். அதேபோல் உங்களின் moral எனக்கு immoral ஆகத் தெரியலாம். எல்லோருக்கும் பொதுவான moral என்று ஒன்று கிடையாது என பதிலளித்தார்.

FILE
பாலுமகேந்திராவின் moral குறித்து கவலைப்பட வேண்டியவர்கள் அவருடன் பழகிய பெண்களே தவிர நாமல்ல. பாலுமகேந்திராவின் moral குறித்து பேசுகிறவர்கள் தற்சமயம் அதுகுறித்து கேட்க வேண்டியது அவரது மனைவி அகிலாவிடமும், துணைவி மவுனிகாவிடம். சமூகத்தின் பார்வையில் மவுனிகா இரண்டாம்தாரம். குழந்தைகள் இல்லை. பொருளாதாரா பின்புலமும் பாலுமகேந்திராவால் உறுதி செய்யப்படவில்லை. இருந்தும் பாலுமகேந்திரா மீது மவுனிகாவுக்கு வருத்தம் இல்லை. எனில் நாம் பொதுவில் முன் வைக்கும் moral லில் இருந்து அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த moral வேறுபட்டிருந்தது என்று தானே அர்த்தம், பாலுமகேந்திரா சொன்னது போல்?

அழியாத கோலங்களை தந்த ஒருவர் இத்தனை வருடங்களில் இன்னொரு சத்யஜித் ரேயாக பரிணமித்திருக்க வேண்டும். பெண் உறவு மீதான அவரின் இந்த ரொமான்டிஸ சிக்கல்தான் அவரது படங்களை ஒருகட்டத்துக்கு மேல் உயர பறக்கவிடாமல் தேங்கிப் போக வைத்தது.

பாலுமகேந்திராவின் பூர்வீகம் இலங்கை மட்டகளப்பில் உள்ள அமிர்தகழி. ஈழப்பிரச்சனை தீவிரத்தை எட்டும் முன் அவர் இந்தியா வந்தார். இங்கேயே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். இலங்கை தமிழராக இருந்தும் ஈழப்பிரச்சனையை குறித்து படம் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. அது சென்சிடிவ்வான பிரச்சனை. அதில் சும்மா ஒரு படத்தை எடுக்க முடியாது என்பது பாலுமகேந்திராவின் பதில். ஈழம் என்றில்லை. அரசியல் பிரச்சனை எதையும் அவரது படங்கள் இடையீடு செய்ததில்லை. உறவுச் சிக்கல்களிலேயே - பெரும்பாலும் ஆண், பெண் - அவர் தேங்கிப் போனார். அதிலிருந்து விலகிய வீடு அவரின் ஆகச்சிறந்த படமாக அமைந்தது.

கட்சி சார்ந்த, சமூகம் சார்ந்த அரசியலை அவரின் படங்கள் அதிகம் பேசவில்லை என்றாலும் உடலரசியலை முன் வைத்தார். அவருக்குப் பிடிக்கும் என்பதைத் தாண்டி மாநிறமே நமது மண்ணுக்குரியது என்றவகையில் மாநிறமான நடிகைகளையே தனது படங்களில் நடிக்க வைத்தார். சிவப்பழகை துரத்தும் தமிழ் சினிமாவில் இது கவனிக்க வேண்டிய அணுகுமுறை. அதேபோல் பெண்களை அரைநிர்வாணமாகக் காட்டுகிற சினிமாவில் பாலுமகேந்திராவின் நாயகர்கள் மட்டும் மேல்சட்டையில்லாமல் தோன்றுவதுண்டு. அவரின் பெரும்பாலான நாயகர்கள் ஒரு காட்சியிலாவது இப்படி தோன்றுவது வழக்கம். அதேபோல் மேக்கப் போட அவர் அனுமதிப்பதில்லை.

FILE
பாலுமகேந்திராவின் திரைமொழி தனித்துவமானது. அவரது படத்தைப் பார்க்கிறோம் என்பதை இரண்டாவது காட்சியிலேயே உணர்ந்துவிடலாம். ஆரவாரமான நடைமுறை வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டவை அவரது படங்கள். தனிநபர்களின் உணர்வுசார்ந்தவை. அதனால் ஆரவாரமோ, கும்பலோ பெரும்பாலும் அவரது படங்களில் காண முடியாது. அவர் சித்தரிக்கும் விமானநிலையம்கூட லைப்ரரிக்குரிய நிசப்தத்துடன்தான் இருக்கும்.

பிற படங்களின், கதைகளின் தாக்கத்தில் பல படங்களை பாலுமகேந்திரா உருவாக்கியிருக்கிறார். 100 சதவீதம் ஒரிஜினல் என்று எதுவுமில்லை என்பது அவரின் உறுதியான நிலைப்பாடு. நான் எடுக்கிற படங்களில் நான் பார்த்த சத்யஜித் ரே, நான் ரசித்த அகிரா குரசோவா கண்டிப்பாக இருப்பார்கள் என்று கூறியிருக்கி ற hர்.

அவர் இயக்கிய சில படங்கள் தவிர்த்து மற்றவை வணிகரீதியாக வெற்றிபெற்றவை. 1997 க்குப் பிறகு 2014 வரை அவர் மூன்று படங்களைதான் இயக்கினார். மூன்றுமே வணிகரீதியாக சுமாராகப் போனவை. இந்த காலகட்டங்களில் தமிழ் சினிமா மேடைகளில் அவருக்கு என்று ஒரு நிரந்தர நாற்காலி போடப்பட்டிருந்தது. அவரின் சமகாலத்தில் அவரைவிட அதிக வணிக வெற்றிகளைத் தந்த இயக்குனர்கள் பார்வையாளர்கள் வரிசையில் இருக்கையில் அவருக்கு மட்டும் எப்போதும் ஒரு நாற்காலி மேடையில் இருந்தது. வணிக வெற்றி என்பது தற்காலிகமானது என்பதை உணர்த்திய மூன்று இயக்குனர்களில் - மற்றவர்கள் மகேந்திரன், பாரதிராஜா - இவரும் ஒருவர்.

பேட்டிகாண சென்றால்கூட ஒரு புத்தகத்தை வாசித்து கதைச் சுருக்கம் எழுதித்தரச் சொல்வார். புத்தக வாசிப்பின் மீது அப்படியொரு வெறி. அவரிடம் உதவியாளராக இருப்பவர்கள் தினம் ஒரு கதையைப் படித்து அதன் கதைச் சுருக்கத்தை எழுதித் தந்தாக வேண்டும். தினம் ஒரு கதை என்பதில் எந்த காம்ப்ரமைஸும் கிடையாது. இயக்குனராக தொடர்ந்து இயங்க பரந்த வாசிப்பு வேண்டும் என்பதில் பாலுமகேந்திரா உறுதியாக இருந்தார். அவரின் மாணவர்கள் - பாலா, வெற்றிமாறன், ராம், சீனு ராமசாமி - இன்று தமிழின் முன்னணி இயக்குனர்களாக இருப்பதற்கான அடிப்படை பாதையை போட்டுத் தந்தவர் அவர்தான்.

பாலுமகேந்திராவுக்கு மம்முட்டி பிடித்தமான நடிகர். மோகன்லாலுடன் ஒரு படம் செய்ய விரும்பினார். சென்னையில் அதற்கான பேச்சுவார்த்தைகூட நடந்தது. ஆனால் கைகூடவில்லை. கமல் சினிமாவுக்கான நடிப்பை குறைவாகவே தந்திருக்கிறார் என்பது அவரது அபிப்ராயம். ஆனாலும் அனாயாசமான கலைஞன் என்றே அவரை குறிப்பிடுவார்.

மறுபடியும் படம் முடிந்து பண நெருக்கடியில் இருந்த நேரம். பலரிடம் கேட்டும் பணம் கிடைக்கவில்லை. கமலிடம் கேட்கலாம் என அவரைத் தேடிப் போகிறார். கமல் பணத்தைத் தவிர வேறு அனைத்தைப் பற்றியும் பாலுமகேந்திராவிடம் உரையாடுகிறார். சரி, இங்கேயும் கிடைக்காது என்று கிளம்புகிற நேரம், பாலுமகேந்திரா கேட்டதைவிட பல மடங்கு அதிக தொகையை அவரிடம் தந்து, இது அட்வான்ஸ், எனக்கொரு படம் நீங்க பண்ணித் தரணும் என்று சொல்லியிருக்கிறார் கமல். அப்படி உருவானதுதான் சதிலீலாவதி. உதவி பெறுகிறோம் என்ற எண்ணம் வராதபடி அன்று கமல் நடந்து கொண்டார் என நெகிழ்ச்சியுடன் அந்த நிகழ்வை பாலுமகேந்திரா குறிப்பிட்டார்.

பாலுமகேந்திராவின் இளையராஜா மோகம் உலகப்பிரசித்தம். பக்தர் என்றுகூட சொல்லலாம். அவரைத் தவிர வேறு யாரையும் எனது படத்தில் பயன்படுத்த மாட்டேன் என்று சூளுரைத்தவர். மணிரத்னம், பாலசந்தர் எல்லாம் இளையராஜாவைவிட்டு ரஹ்மானுக்கு மாறிய பிறகும் நீங்கள் மட்டும் ஏன் மாறவில்லை? ரஹ்மானின் இசையில் உங்களுக்கு உடன்பாடில்லையா?
FILE

இந்த கேள்விக்கு பாலுமகேந்திரா சொன்ன பதில் முக்கியமானது. எனக்கு இளையராஜாவை இப்போதும் பிடிக்கிறது. எம்.விஸ்வநாதனை இப்போதும் பிடிக்கிறது. அதேபோல் சலீல் சௌத்ரி. எனக்கு இது போதும் என்று பதிலளித்தார். அதேநேரம் ரஹ்மானை அவருக்கு பிடிக்குமா இல்லையா என்பதற்கு இன்னொரு நிகழ்வை சொல்ல வேண்டும்.

ரோஜா வெளியான நேரம் தேசிய விருது தேர்வு கமிட்டியின் தலைவர் பாலுமகேந்திரா. சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் இரண்டு பேர் சமஓட்டு வாங்கியிருக்கிறார்கள். ஒருவர் இளையராஜா, இன்னொருவர் ரஹ்மான். தேர்வுக்குழுவின் தலைவர் என்ற முறையில் பாலுமகேந்திராவுக்கு இரண்டு ஓட்டுகள். இரண்டாவது டிசைடிங் ஓட்டு. இருவரும் சமஓட்டு வாங்கிய நிலையில் பாலுமகேந்திரா யாருக்கு ஓட்டளிக்கிறாரோ அவருக்கே தேசிய விருது.

இரண்டுமே சிறந்த இசை. ஆனால் நான் யாருக்கு ஓட்டளிப்பது? இளையராஜா ஒரு லெஜென்ட். அவருக்கு சரிசமமாக வந்து நிற்கிறான் ஒரு 22 வயது பையன். அவன் இனி எவ்வளவோ விருது வாங்கலாம். ஆஸ்கர்கூட வாங்கலாம். ஆனால் முதல் படத்துக்கு கிடைக்கிற அங்கீகாரம் தனியானது. நான் ரஹ்மானுக்கு ஓட்டளித்தேன்.

சென்னை வந்ததும் இதனை இளையராஜாவிடம் பாலுமகேந்திரா சொல்கிறார். அவரது கையை பற்றி குலுக்கியபடி சரியா செய்தீங்க என்கிறார் இளையராஜா.

பாலுமகேந்திராவின் இந்த moral ஐ தான் நாம் நினைவுகூர்கிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

திடீரென ட்விட்டரை விட்டு விலகிய விக்னேஷ் சிவன்.. நயன்தாரா பிரச்சனை காரணமா?

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments