Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகவேள் எம்.ஆர். ராதா - நூற்றாண்டு விழா கலைஞன்!

Webdunia
மயிலாடுதுறை தில்லையாடி வள்ளியம்மையை காண வந்த காந்தியடிகள் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். எங்கும் மக்கள் வெள்ளம். அந்நிய துணிகளை விலக்க வேண்டும் என்று தனது பேச்சில் வலியுறுத்துகிறார் காந்தி. கேட்டுக் கொண்டிருக்கும் ஜனம் உணர்ச்சிவசப்படுகிறது.

ஆனால், ஒரேயொருவர் மட்டும் அங்கேயே, அப்போதே தான் போட்டிருந்த அந்நிய துணிகளை கழற்றி எறிகிறார். நல்லவேளை, உள்ளாடை உள்ளூர் தயாரிப்பு. இல்லையென்றாலும் அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார். சுற்றி நின்றிருந்தவர்கள் நிலைதான் தர்ம சங்கடமாகியிருக்கும்.

webdunia photoFILE
நியாயம் என்று தோன்றியதை எந்த சூழலிலும் செய்யத் துணிந்தவர் நடிகவேள் எம்.ஆர். ராதா. மேலே உள்ளது சின்ன உதாரணம். ராதாவை எப்படி வகைப்படுத்தலாம்? நாடக நடிகர்... சினிமா நடிகர்... மெக்கானிக்... எலெக்ட்ரீஷியன்... பெரியாரிஸ்ட்... கலகக்காரர்...

நாடக நடிகர் என்றால் ராதா மகிழ்ச்சியடைவார். நடிப்புன்னா ரீ-டேக் இல்லாமல் மூணு மணி நேரம் நாடகத்தில் நடிக்கிறதுதான் என்பது ராதாவின் வாதம். சினிமா? அது ரிட்டையர்ட்மெண்ட். மெக்கானிக்கும், எலெக்ட்ரீஷியனும் வாழ்க்கை ப்ளோவில் அவர் கற்றுக்கொண்டவை. கல்யாணத்திற்கும் இது உதவியது.

அந்தக் காலத்தில் நாடக நடிகர்களுக்கு யார் பெண் தருவது. மெக்கானிக் என்று தனது பார்ட் டைம் வேலையை சொல்லி முதல் மனைவி சரசுவதியை திருமணம் செய்தார் ராதா. சிறிது காலத்துக்குப் பின் சரசுவதியின் தங்கை தனலட்சுமியையும் மணந்து கொண்டார்.

இறுதி மூச்சுவரை ராதா பின்பற்றியது பெரியார். இந்தியாவின் சிறந்த தலைவர் யார் என்று கேட்டால் பெரியார் என்றே சொல்வார் ராதா. அதே நேரம் தி.க. உட்பட எதிலும் உறுப்பினர் அல்ல ராதா. இறுதி வரை சுதந்திர பறவையாக வாழ்ந்தவர் அவர்.

ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட எம்.ஆர். ராதா பிறந்தது சென்னையிலுள்ள சூளை. வருடம் 1907. தந்தை ராஜகோபால் நாயுடு முதலாம் உலகப் போரில் ரஷ்ய எல்லை பஸ்ஸோவியாவில் மரணமடைகிறார். தாய் ராசம்மமாள். உடன் பிறந்தவர்கள் அண்ணன் ஜானகிராமன், தம்பி பாப்பா.

ராதா கலகக்காரரா என்றால் இல்லை. வாழ்வதற்காக கூழை கும்பிடு, குறுக்கு வழி என்றிருப்பவர்கள் மத்தியில், தன்மானத்தை இழக்காத ராதாவின் சுயமரியாதை வாழ்க்கை மற்றவர்களுக்கு கலகமாக தோன்றியதில் வியப்பில்லை.

சிறுவனாக இருந்தபோது அம்மாவிடம் கோபித்து, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கியபோது தொடங்கியது ராதாவின் கலக வாழ்க்கை. எழும்பூரிலிருந்து சிறுவன் ராதாவை ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனி உரிமையாளர் ஆலந்தூர் டப்பி அரங்க நாயுடு சிதம்பரம் அழைத்து செல்கிறார். அங்கிருந்து தொடங்குகிறது ராதாவின் நாடக வாழ்க்கை.

ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனியிலிருந்து விலகி மைசூர் நாடக கம்பெனி, பிறகு சாமண்ணா நாடக கம்பெனி, அப்புறம் ஜெகந்நாதய்யர் கம்பெனி, 1924 ஆம் ஆண்டு ராதா நடித்த 'கதரின் வெற்றி' நாடகத்தை காந்தி, கஸ்தூரி பாய், பாரதி, ராஜாஜி ஆகியோர் கண்டு ரசிக்கிறார்கள்.

webdunia photoFILE
ராதாவை சினிமா நடிகராக்கிய படம் ராஜசேகரன். நாடகமானாலும், சினிமாவானாலும் பொது விதிகளை உடைப்பவர் ராதா. இழந்த காதல் நாடகத்தில் மனைவியை சவுக்கால் அடித்து கழுத்தை நெரித்து நாற்காலியில் உட்கார வைத்து பதினைந்து நிமிடம் பேசுவார். எப்படி? ஆடியன்சுக்கு முதுகு காட்டியபடி. நாடகத்தில் முகத்தை காட்ட வேண்டும், முதுகை காட்டக்கூடாது என்ற பொது விதி இழந்த காதலில் பொடிப் பொடியானது.

ராதாவின் நாடகங்கள் அனைத்தும் சமூக சீரழிவுக்கு எதிரானவை. அதனாலேயே நாடகம் தொடங்கும் முன் நிஜ ஆகூசனுடனே கொட்டகை வாசல் திறக்கும். அதிலும் போர் வாள் நாடகத்தில் புராண ஆபாசங்களை போட்டு கிழித்திருப்பார் ராதா. விளைவு, சென்னையில் போர் வாளுக்கு தடை விதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட ராதாவின் இன்னொரு நாடகம், ராமாயணம். விடுவாரா ராதா? அதே நாடகத்தை தேவாசுரப் பாடல் என பெயர் மாற்றி அரங்கேற்றினார். ஆனாலும் பல இடங்களில் அடிதடி. இறுதியில் நாடகம் நடக்கும்போது ராமர் வேடத்திலேயே போலீசார் ராதாவை கைது செய்தனர்.

webdunia photoFILE
ராதாவின் கலை உச்சம், ரத்தக் கண்ணீர். திருவாரூர் தங்கராசு எழுதிய இந்நாடகம் 1949 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் திருச்சியில் அரங்கேறியது. ரத்தக்கண்ணீரை காங்கிரஸ் கட்சி பிரமுகர் பி.ஏ. பெருமாள் முதலியார் சினிமாவாக தயாரிக்க முன்வந்தபோது, அதில் நடிக்க ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் சம்பளம் கேட்டார் ராதா.

அந்தக் காலத்தில் ஒளவையார் வேடத்தில் நடிக்க கே.பி. சுந்தரம்மாள் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக பெற்றிருந்தார். அதைவிட 25,000 ரூபாய் அதிகமாக தந்தால் நடிக்கிறேன் என்று ராதா கூற, மறுபேச்சின்றி அந்த சம்பளம் அவருக்கு தரப்பட்டது.

எம்.ஆர். ராதா நடிகவேள் ஆனது 1952-ல். திருச்சி தேவர் மன்றத்தில் ராதா போர் வாள் நாடகத்தை நடத்தினார். அப்போது பெரியார் முன்னிலையில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அளித்த பட்டம்தான் நடிகவேள்.

பெரியாரின் 101வது பிறந்தநாளான 17-09-1979 அன்று பெரியார் இறந்த நேரமாக காலை 7.25 மணிக்கு உயிர் துறந்தார் எம்.ஆர். ராதா. தனது 72 ஆண்டு வாழ்க்கையில் அவர் புரிந்த பகுத்தறிவு பிரச்சாரமும், சமூக சீரழிவுக்கு எதிரான துணிச்சலான போராட்டங்களும் அளப்பரிய. அன்றைய பெருமைக்குரிய இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றி கார் வெறும் பெயிண்ட் அடித்த தகர டப்பாதான் என்று சொன்னவர் அவர்.

ராதாவின் சட்டென்று மாறும் மாடுலேஷன் குரலா, குறும்பு தெறிக்கும் நடிப்பா, பகுத்தறிவு பளீரிடும் வசனமா... எது அவரை தனித்துவப்படுத்துகிறது?

இவை அனைத்துமே என்றாலும், பணத்துக்காகவும், புகழுக்காகவும் முதுகு வளைக்காத அந்த நேர்மையான துணிச்சல்... இன்று வரை எந்த நடிகனிடமும் காணக் கிடைக்காதது.

தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் ராதா ஒரு முறை உரையாற்றினார். சினிமாக்காரர்களை உயர்த்தாதீர்கள் என்பதாகியிருந்தது அவரது உரை. சினிமாவில் உழைப்பு குறைவு, கூலி அதிகம் என்றவர் முத்தாய்ப்பாக இவ்வாறு சொன்னார் :

ஒரு அலுவலகத்தில் அல்லது ஒரு தொழிலில் ஈடுபட்டபோது தவறு செய்தால் தண்டனை தருவார்கள் அல்லது எச்சரிக்கையாவது செய்வார்கள். ஆனால் சினிமாவில் ஒரு காட்சியில் சரியாக நடிக்காவிட்டால் நாற்காலியில் அமரச் செய்து பேன் போட்டு ஆப்பிள் ஜூஸ் கொடுப்பார்கள். அதனால்தான் சினிமாக்காரர்களை உயர்த்த வேண்டாம் என்கிறேன்.

திரைத்துறையில் இருந்து கொண்டே அதன் சீரழிவை பேச ராதாவைப் போலொரு துணிச்சல்காரர் இன்று இல்லை. ராதா விட்டுச் சென்ற அந்த வெற்றிடம் இன்று வரை வெற்றிடமாகவே உள்ளது. சூப்பர் ஸ்டார்களாலோ, உலக நாயகர்களாலோ, புரட்சி தளபதிகளாலோ கலைஞர்களாலோ நிரப்ப முடியாத உயரிய இடம் அது. ராதாவின் தனித்துவம் பிரகாசிக்கும் இடமும் அதுதான்!

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments