Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ் ‌திரையுல‌‌‌கி‌ல் எ‌ல்லோருமே ந‌ண்ப‌ர்க‌ள்தா‌ன் - மம்முட்டி

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2008 (10:08 IST)
webdunia photoWD
நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் நடிக்கிறார் மம்முட்டி. அவர் இப்போது நடிக்கும் படம் 'அறுவடை'. படப்பிடிப்பிலிருந்தவரை அண்மையில் சந்தித்தபோது...

மலையாளத்திலிருந்து நீங்கள் ஹீரோவாக தமிழுக்கு வந்தீர்கள். இப்போது அங்கிருந்து நிறைய கதாநாயகிகள் வருகிறார்களே அதுபற்றி...?

இது சகஜம். அங்கிருந்து இங்கு வர்றது. இங்கிருந்து அங்கே போறது அப்பப்போ நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. தமிழ், மலையாளம் தொடர்புகள் ரொம்ப நாளா இருந்துக்கிட்டுத்தான் இருக்கு.

இந்தத் தொடர்பு எந்த அளவுக்கு உள்ளது?

மலையாளம் இளமையான மொழி. தமிழ்தான் பாலி மாதிரி காலத்தால் மூத்த மொழி. தமிழ் இல்லாம மலையாளம் பேச முடியாது. ஏன்னா தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்துதான் மலையாளம். மலையாளம் வந்து இன்னைக்கு சுமாரா ஐநூறு வருஷமாகுதுன்னா, தமிழ் வந்து ஐயாயிரத்துக்கும் மேல வருஷங்கள் ஆகுதுங்கறாங்க. அவ்வளவு மூத்தது தமிழ் மொழி. தமிழ் கலந்துதான் மலையாளமே பேசப்படுது. அந்த அளவுக்கு மொழிப் பிணைப்பு, மக்கள் பிணைப்பு இருந்துக்கிட்டிருக்கு.

தமிழ் திரையுலகில் உங்களுக்கு நண்பர்கள் யார்?

நான் எல்லாரையும் நண்பர்களாத்தான் பார்க்கிறேன். எல்லாரும் எனக்கு நண்பர்கள்தான். ஒவ்வொரு படத்துல நடிக்கும்போது அவங்க நெருக்கமான நண்பர்கள் ஆவாங்க. இப்ப 'அறுவடை' படத்தின் மூலமா என் கூட நடிக்கிறதால அர்ஜுன் என் நண்பராய்ட்டார்.

ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் எதை முக்கியமாகப் பார்ப்பீர்கள்?

படம் நல்லா வரணும். நம் கேரக்டர் நல்லா வரணும்னுதான் நினைப்பேன். ஒவ்வொரு படமும் எனக்குப் புதுப்படம் தான். அதாவது எல்லாப் படமும் எனக்கு முதல் படம் மாதிரித்தான்.

' அறுவடை' படத்தில் உங்கள் பாத்திரம் என்ன..?

நான் இதில் ஐபிஎஸ் ஆபீசரா வர்றேன். இது பற்றி மேலும் விவரம் கேட்டால் டைரக்டர், புரொடியூசரைத்தான் நீங்க கேட்கணும். நான் நடிக்கிற படத்தோட கதையை நானா சொல்றது கிடையாது.

விருதுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

விருதுகள் கொடுக்கிறது நல்ல விஷயம்தான். எந்த விருதா இருந்தாலும் அது நம்ம வேலையை மதிச்சு தொழிலை மதிச்சு கொடுக்கிறப்போ அதை சந்தோஷமா ஊக்கப்படுத்துறதாத்தான் எடுத்துக்கணும்.

உங்கள் திறமைக்கேற்ற விருதுகள், அங்கீகாரம் கிடைத்துவிட்டனவா...?

webdunia photoWD
எல்லாம் நினைக்கிறமாதிரி கிடைக்காது. கொடுக்கிறவங்கதான் இதுபற்றி நினைக்கணும். தகுதி வந்தால் அது வரும்னு நம்பறேன். எனக்கும் கொஞ்சம் அங்கீகாரம் கிடைச்சிருக்குன்ற சந்தோஷம் இருக்கு. அது எந்த அளவுக்கு முழு அளவுக்கான்னு சொல்லத் தெரியலை.


அம்பேத்கார் பாத்திரத்தில் நடித்தீர்கள் அது பற்றி...?

webdunia photoWD
ஏன் அது தப்பா? என்னைத் தேடி வந்த வாய்ப்பு இது. நான் கூட முதலில் மறுத்தேன். பிறகு என்னை நடிக்க வச்சாங்க. நான் பண்ணின படங்களில் அது ஒண்ணு.

இது மாதிரி இன்னொரு தலைவர் பாத்திரத்தில் நடிப்பீர்களா?

அது ஒண்ணே போதும். இனி அப்படி நடிக்கமாட்டேன்.

வேறு ஏதாவது லட்சிய பாத்திரம் மனசுக்குள் இருக்கிறதா?

என்னைக் கேட்டால் லட்சியம்னோ லட்சியக் கேரக்டர்னோ ஒரு நடிகனுக்கு இருக்கக் கூடாதுன்னு சொல்வேன். அந்த வாய்ப்பு கிடைச்சிட்டா ரிடையர்டு ஆகிப் போய்டுவாங்களா? அதுதான் லட்சியம்னா அத்தோட முடிஞ்சிடும்தானே...?

மலையாளத் திரையுலகம் எப்படி இருக்கிறது?

நல்லா இருக்கு. தமிழ்நாடு மாதிரி அங்கும் திரையுலகம் நல்லாத்தான் இருக்கு. சில ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். அது சகஜம். மற்றபடி நல்லா இருக்கு.

திருட்டு விசிடி பிரச்சினை அங்கு இருக்கிறதா?

திருட்டு விசிடி பிரச்சினை மலையாளத்தில் மட்டுமல்ல. உலகம்பூரா இருக்கு. சினிமாங்கிறதை திரையில் பார்த்தால்தான் முழு சந்தோஷம். சின்னப் பெட்டிக்குள்ள சீரியல் பார்க்கலாம். சினிமா பார்த்தால் திருப்தி வராதுன்னு நாமதான் எடுத்துச் சொல்லணும். திருட்டு விசிடி பார்க்கிறவன் தியேட்டருக்கு வரமாட்டான்.

இதை ஒழிக்க முடியாதா?

திருட்டு விசிடியில படம் பார்க்கிறவன் அப்படியே பழகிய சோம்பேறி. அவன் எப்பவும் தியேட்டருக்கு வரமாட்டான். ஏன்னா இருந்த இடத்திலேயே படம் பார்க்க நினைக்கிறவன். சினிமான்னா வீட்டை விட்டு வெளியே போய் தியேட்டர்ல கியூவுல நின்னு டிக்கெட் எடுத்து பெரிய திரையில் பார்க்கிற அனுபவம் தனியான சந்தோஷம். அது வீட்டுக்குள்ளிருக்கிற பெட்டியில வருமா?

இன்று எண்டர்டெய்ன்மெண்ட் உலகம் வளர்ந்திருப்பது சினிமாவுக்கு சவாலா?

எல்லாமே வளருது. அந்த தாக்கம் சினிமாவிலும் இருக்கே. இப்போ புதுசா புதுசா மல்டிப்ளக்ஸ் தியேட்டர்ஸ் வருதில்லையா? எண்டர்டெய்ன்மெண்ட் வளர்றது சினிமாவுக்கும் உதவுதில்லையா?

இத்தனை படத்தில் நடித்துள்ளீர்கள். அந்த அனுபவத்தை வைத்துப் படம் இயக்கும் ஆசை உள்ளதா?

ஆசை மனசுக்குள்தான் இருக்கு. டைரக்‌ஷன் ஆசை மனசோடு இருக்கும். அவ்வளவுதான். இந்த ஆசை உள்ளுக்குள் மட்டுமே இருக்கும்.

சுயசரிதை எழுதும் எண்ணமுண்டா?

என் கதையை அப்பப்போ எழுதியிருக்கேன். என் அனுபவங்கள் ஆறு புத்தகங்களா வந்திருக்கு. சமீபத்துல கூட ஒண்ணு வந்திருக்கு.

கதை எழுதும் ஆர்வமுண்டா?

webdunia photoWD
நான் கதை எழுதுவேன். ஆனா அது ஒரு வரிதான் இருக்கும். சினிமாவுல சொல்வாங்களே ஒன்லைன் அப்படித்தான் இருக்கும்.

- மனம் திறந்து பேசிய மம்முட்டி அடுத்தக் காட்சியில் நடிக்கத் தயாரானார். விடைபெற்றோம்.

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments