Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌சிக‌னி‌ன் ர‌சி‌ப்பு‌த்த‌‌ன்மை ம‌ட்டு‌ம் புரிபடாதது-கரு. பழனியப்பன்

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (16:53 IST)
webdunia photoWD
நல்ல கதைக்களத்தை தேடுவதும் தேவைய‌ற்றதை புறக்கணிப்பதும் இவரது குணச்சித்திரம். இளம் இயக்குனர்களில் இவர் நம்பிக்கை நட்சத்திரம். சினிமாக்காரராக இல்லாமல் இயல்பாக இருப்பது விசித்திரம். அவர்தான் இயக்குனர் கரு. பழனியப்பன்.

` பார்த்திபன் கனவு', `சிவப்பதிகாரம்', `சதுரங்கம்' படங்களை அடுத்து இவர் இயக்கும் படம் `பிரிவோம் சந்திப்போம்'. இப்படத்தின் பின்னணி இசை சேர்ப்புப் பணியிலிருந்தவரை சந்தித்தோம்...

வெற்றிப்படங்கள் கொடுத்தும் உங்கள் படவரிசையில் ஏன் இந்த இடைவெளி?

நான் வந்து நான்கு வருடங்களில் நான்கு படங்கள் முடித்திருக்கிறேன். இதுபோதும் எனக்கு. நிறைய படங்கள் என்பதை விட நிறைவாய் படங்கள் செய்வதே என் கொள்கை - விருப்பம் - ஆசை எல்லாமே. இந்த எண்ணம் தான் எனக்கு முக்கியமே தவிர எண்ணிக்கை அல்ல. நான் ஒரு படம் முடித்ததும் இரண்டு மாதங்கள் எதுவும் செய்யமாட்டேன், யோசிப்பேன், அடுத்த கதை பற்றி முடிவு செய்ய கால அவகாசம் எடுத்துக் கொள்வேன்.

இருந்தாலும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது நல்லது இல்லையா?

எனக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறது. அதனால் நான் கவலைப்படுவதில்லை. ஒருவரைப் போல இன்னொருவர் படம் எடுக்க முடியாது. ஒரே கதையை ஐந்து பேரிடம் கொடுத்து படமாக்கச் சொன்னாலும் ஒரே மாதிரியான படமாக வராது. ஏன் நான் எழுதி வைத்துள்ள 80 காட்சிகளை அப்படியே இன்னொருவரிடம் கொடுத்து எடுக்கச் சொன்னால் கூட நான் நினைத்த படத்தை எடுக்க முடியாது.

எப்படி இப்படி கூறுகிறீர்கள்?

` சிந்து பைரவி', `முதல் மரியாதை', `சின்ன வீடு' இந்த மூன்று படங்களும் ஒரே கால கட்டத்தில் வெளியாகி ஓடிய படங்கள். இது மூன்றுமே ஒரே கதைதான். இது யாருக்காவது தெரியுமா? மனைவியோடு முரண்பட்ட ஒருவன் அடுத்தவளிடம் போகும் கதை. மூன்றிலும் இதே விஷயம் தானே. ஆனாலும் வேறு வேறு விதமாகக் கொடுக்கவில்லையா?

ஒரு படம் எடுக்கும்போது அக்கம் பக்கம் எது மாதிரி படம் எடுக்கிறார்கள் என்று தெரிய வேண்டாமா?

அதற்கு அவசியமில்லை. எனது முந்தைய படத்திலிருந்து அடுத்து எடுக்கப் போகும் கதை எப்படி வேறுபடுகிறது என்று தான் பார்ப்பேன் தவிர அக்கம் பக்கம், அடுத்தவர் படங்கள் பற்றி எனக்குக் கவலையில்லை.

இப்போது எது டிரண்ட் என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?

webdunia photoWD
சினிமாவில் டிரண்ட் என்று எதுவுமே இல்லை. சினிமாவில் சினிமாக்காரர்கள் உருவாக்கி வைத்துள்ள மாய பிம்பம் தான் டிரண்ட். இந்த சீசன்ல எங்களுக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது என்று எந்த ரசிகனும் சொல்வதில்லை.

என் முதல் படம் `பார்த்திபன் கனவு' வந்தபோது, `தூள்', `சாமி', `அரசு' இப்படி ஆக்‌ஷன் படங்கள் வருகிற காலம். இப்போது இப்படி ஒரு காதல் கதையா என்றார்கள். முழுக்க முழுக்க அவ நம்பிக்கைகளை சுமந்து கொண்டு அந்தப் படம் வந்தது. படத்தை நன்றாக இருக்கிறது என்று பாராட்டியவர்கள் கூட படம் ஓடாது என்றார்கள். ஆனால் என்ன ஆனது? குடும்பத்தோட பார்த்தாங்க. காதலை கண்ணியமாகச் சொன்னதால் படம் வெற்றி. எனக்கு இந்த டிரண்ட் மீது நம்பிக்கையில்லை.

இயக்கிய நான்கு படங்களில் அனுபவத்தில் புரிந்து கொண்டது என்ன?

ஒரு டாக்டர் எப்படி காலம்பூராவும் ப்ராக்டீஸ் செய்து கற்றுக் கொள்கிறாரோ அப்படித்தான் இயக்குனரும், கற்றுக் கொண்டே வருகிறோம். எது ஓடும் எது ஓடாது என்கிற ரகசியம் புரிபடாதது. நான் இயக்கிய படங்களில் கூட நான் ரசித்த காட்சிகளை ரசிகன் நிராகரிக்கிறான். நான் நிராகரித்தவற்றை அவன் ரசிக்கிறான். எப்போது நான் ரசித்து எடுத்த காட்சியை அவனும் அதே அலைவரிசையில் ரசிக்கப் போகிறான் என்பது புரியாத புதிர் என்றாலும் சுவாரஸ்யமான விளையாட்டு தான்.

உங்களின் ஆதர்ச இயக்குனர்கள் யார்?

ருத்ரையா, மணிவண்ணன். இருவேறு துருவங்கள் போலத் தெரிகிறதா... காரணம் சொல்கிறேன். ருத்ரையா 25 வருஷங்களுக்கு முன்னாடி இயக்கிய படம் "அவள் அப்படித்தான்" அந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் இன்னும் 5 வருஷங்களுக்குப்பிறகு வரவேண்டிய படம் போலத் தெரியும். அந்த அளவுக்கு நவீன சிந்தனை உள்ளவர் அவர். ஓர் இயக்குனருக்கு நவீன சிந்தனை முக்கியம்.

பல்வேறு கதைகளை வெற்றிகரமாகக் கையாளும் திறமை மணிவண்ணன் ஒருவரிடம் மட்டுமே உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை. எந்த ரகப் படங்களாக இருந்தாலும் அதில் அவர் வெள்ளிவிழாப் படம் ஒன்று கொடுத்திருப்பார். அவ்வளவு திறமை வாய்ந்தவர் மணிவண்ணன். காலம் அவரைக் கொண்டாடாமல் விட்டுவிட்டது வேதனை.

இப்போது இயக்கிவரும் `பிரிவோம் சந்திப்போம்' படம் பற்றி...?

பிரிவோம்...சந்திப்போம்... படத்தின் கதையை என்னால் தெளிவாகக் கூற முடியும். ஏனென்றால், எல்லாரும் சந்தித்த - வாழ்க்கையில் எதிர்கொண்டது தான் இந்தக் கதை.

webdunia photoWD
ஒரு குடும்பம் பிரிகிறது. பின்பு சேர்கிறதா என்பதுதான் கதை. தலைப்பே கதை சொல்கிறதே. இது காதல் கதை என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இதில் சண்டை இல்லை. நடனம் இல்லை. வெட்டு குத்து ரத்தம் சேதம் இல்லை. வில்லன் வில்லி இல்லை. கதையில் முடிச்சி இல்லை. எல்லாரும் நல்லவர்களே... இருந்தாலும் கதையில் சுவாரஸ்யம் இருக்கிறது. கலகலப்பு இருக்கிறது.

சேரன், சினேகா, ஜெயராம் தவிர மற்றும் பலர் என்று போட்டுவிட முடியாத 30-க்கும் மேற்பட்ட முகம் தெரிந்த நட்சத்திரங்கள் உண்டு. இது ஹீரோ ஒருவரே கதை சுமக்கும் கார் ஓட்டம் அல்ல... ஊர் கூடி இழுக்கும் பலர் சேர்ந்து கதையை சுமக்கும் தேரோட்டம்.

இசையில் ஒளிப்பதிவில் திரைக்கதையிலும் கூட சில முயற்சிகளை முன் வைத்திருக்கிறோம். அவை அங்கீகரிக்கப்படும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ஏனெனில் நான் என்றும் ரசிகர்களை ஆதரிப்பவன். அவமதிப்பவன் கிடையாது.

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments